0,00 INR

No products in the cart.

மேடையில்  அசத்தும் மேஜிசியன் அலெக்ஸ்!

 எஸ். சந்திரமௌலி

 

ரஷ்யப் படைகள், உக்ரைனில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, ஒரு ரஷ்ய மேஜிக் கலைஞர், தனது மேஜிக் ஷோ நடத்துவதற்காக சென்னைக்கு  வந்துள்ளார்.  அவர் பெயர் அலெக்ஸ் பிளாக். வயது 33. சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் உள்ள அரங்கில் அரை டஜன் இளம்பெண்கள் அடங்கிய தன் குழுவுடன் மேஜிக் நடத்திக் கொண்டிருக்கும் அவரை சந்திக்கச் சென்றேன்.

பேட்டிக்கு முன் ஒரு மேஜிக் செய்து காட்டட்டுமா? என்று கேட்டார். சந்தோஷமாகத் தலை அசைத்தேன்.

சீட்டுக் கட்டை எடுத்து, என் முன்னே நீட்டி, குழைத்து, ‘‘ஏதாவது ஒரு சீட்டை எடுத்துக் கொள்ளும்படியும், தன்னிடம் அதைக் காட்டவேண்டாம்” என்றும் சொன்னார். சீட்டின் எண் என்னை நோக்கி இருக்கும்படி நான் பிடித்துக்கொள்ள, என்னை தன் மொபைலில் ஒரு போட்டோ எடுத்தார். அடுத்து, அந்த மொபைலை என் இன்னொரு கையில் கொடுத்துவிட்டு,  ஒரு கையில் இருக்கும் சீட்டையும், இன்னொரு கையில் இருக்கும் மொபைலையும் மாறி மாறித் தொட்டார். அடுத்து, மொபைலை தன் கையில் எடுத்து, அதில் தான் எடுத்த என்னுடைய போட்டோவை எனக்குக் காட்டினார். கையால் சீட்டை மரைத்தபடி, நான் சோபாவில் உட்கார்ந்திருக்கும் போட்டோ. அந்த போட்டோவில்  நான் பிடித்துக் கொண்டிருக்கும் சீட்டில் நான் தேர்ந்தெடுத்த சீட்டுக்குரிய 3 என்ற எண்ணும்,  கிளாவர் படமும் இடம்பெற்றிருந்தன. ஆச்சரியத்துடன் பேட்டியைத்  ஆரம்பித்தேன்.

உங்களுக்கு எப்படி மேஜிக்கில் ஆர்வம் ஏற்பட்டது?”

ஸ்கூல் படித்துக் கொண்ட்டிருந்தபோது ஒரு மேஜிக் ஷோ பார்த்தேன்.  அந்தக் கணமே எனக்கு மேஜிக் மீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.  அதன் பின் மேஜிக் பற்றிய நிறைய புத்தகங்கள் வாங்கிப் படித்தேன். ஸ்கூல் படித்து முடித்தவுடன், சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு சர்க்கஸ் கல்லூரியில் சேர்ந்தேன். முதல் நாள் கல்லூரிக்குப் போனபோது, நானும் ஒரு உலகப் புகழ்பெற்ற மேஜிக் கலைஞராக ஆகவேண்டும் என விரும்பினேன்.

சர்க்கஸ் கல்லூரியில் மேஜிக் கூட சொல்லிக் கொடுப்பார்களா?”

“ஆம்! முதல் வருடம் எல்லா பிரிவினருக்கும் பொதுவான  பல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார்கள். மேடைப் பேச்சு, நடிப்பு, நடனம், பாடி லாங்குவேஜ் இப்படிப் பல விஷயங்கள். இரண்டாவது வருடத்தில் இருந்து மேஜிக். பயிற்சி, ஒத்திகை, மேடை தொழில்நுட்பம் என்று கடுமையாக இருக்கும்.

பொதுவாக எல்லா மேஜிக் கலைஞர்களும் ஒரே மாதிரியான மேஜிக் ஐட்டங்களைத்தானே மேடையில் செய்து காட்டுகிறார்கள். குறிப்பாக திடீரென்று இல்லாத ஒன்றை வரவழைப்பது, அல்லது கண்முன்னே இருக்கும் ஒன்றை நொடியில் மறையச் செய்வது. இவற்றுக்கு அப்பால் வேறு என்ன புதுமைகள் சாத்தியம்?”

“இன்று மேஜிக்கில் தொழில்நுட்பம் மிக அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அதற்கு ஒரு சிறு உதாரணம்தான் வழக்கமான சீட்டுக்கட்டு மேஜிக்குக்கு பதிலாக நான் மொபைலைப் பயன்படுத்தி செய்து காட்டிய மேஜிக், இன்று உலகம் முழுக்க மேஜிக் ரொம்பவே ஹை டெக் ஆக இருக்கிறது. நிழலை நிஜமாக்கும் மேஜிக்ஸ் அதிகம் இடம்பெறுகின்றன. உதாரணமாக, மேடையில் உள்ள டி.வி. திரையில் ஒரு வெள்ளை எலி தோன்றி நகரும், நான் திரையைத் தொட்டதும் என் கையில் உயிரோடு  அந்த வெள்ளை எலியைப் பார்க்கலாம். ஒரு பெரிய புகைப்பட புத்தகம், பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டே வருவேன். ஒரு பக்கத்தில் கிடார் படம் இருக்கும், அதைத் தொட்ட மாத்திரத்தில் என் கையில் ஒரு கிடார் இருக்கும். இப்படி பல உண்டு.

நீங்கள் செய்யும் ஐட்டங்களில் நீங்கள் மிகவும் ரசிக்கும் ஐட்டம் எது?”

“ஹுடினி மேஜிக் என சொல்லப்படும், என்னை பெட்டிக்குள் வைத்து பூட்டிய பிறகு சில நிமிடங்களில் நான் அரங்கத்தில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து  நடந்து மேடைக்கு வருவது. ஆனால், எந்த மேஜிக் செய்தாலும், அதற்கு கடுமையான பயிற்சியும், இடைவிடாத ஒத்திகையும் மிகவும் அவசியம். எவ்வளவுக்கு எவ்வளவு பர்ஃபெக்ட்டாக நீங்கள் மேஜிக் செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆடியன்ஸ் பிரமித்துப் போவார்கள்.

நீங்கள் வியந்து பார்க்கும் மேஜிக் நிபுணர் யார்?”

“டேவிட் காப்பர் ஃபீல்டு. ஹீ ஈஸ் அமேசிங்! அவருடைய ஷோ ஒன்றை நான் அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் நகரில் பார்த்தேன். மேடையில் ஒரு டினோசரை வரவழைத்தார். நான் பிரமித்துப் போனேன். நான் அவரைச் சந்தித்தபோது, 200 வருட பழைமையான மேஜிக் பற்றிய ஒரு புத்தகத்தை அவருக்குப் பரிசளித்தேன். அவர், தன்னுடைய மேஜிக் மியூசியத்தில் அதை வைத்துக்கொள்ளப் போவதாக அவர் சொன்னபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நீங்கள் பொது இடங்களுக்குப் போகிறபோது, மக்கள் உங்களை சூழ்ந்துகொண்டு  “எங்கே ஒரு மேஜிக் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்!” என்று கேட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?”

“இதுபோன்ற இக்காட்டான சூழ்நிலைகளில் சமாளிப்பதற்கென்றே ஒரு சில டிரிக்ஸ் வைத்திருக்கிறேன். ரஷ்யாவில் பலமுறை எனக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. சுற்றி நிற்பவர்களில் ஒருவரிடம் “உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேட்பேன். அவர் ஒரு நடிகரின் பெயரைச் சொல்லுவார்.  நான் அவருடைய மணிக்கட்டுப் பகுதியை என் கையால் மூடுவேன். சில விநாடிகளில் என் கையை எடுக்கும்போது, அவரது மணிக்கட்டில் அவருக்குப் பிடித்த நடிகரின் உருவம் இருக்கும். பார்க்கிற எல்லோரும் அசந்து போவார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகள் நடத்தும்போது, உங்களுக்கு மொழி ஒரு பிரச்னையாக இல்லையா?”

“மொழி ஒரு பிரச்னையாக இல்லாத மாதிரி என் நிகழ்ச்சியை வடிவமைத்து இருக்கிறேன். எனக்கு ரஷ்ய மொழி, ஆங்கிலம் தவிர கொஞ்சம் கொஞ்சம் ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ் என ஏழெட்டு மொழிகள் தெரியும். சீனாவில் ஆங்கிலம் புரியாது. அங்கே பேச்சை மிகவும் குறைத்துக் கொண்டு, சைகை மொழியிலேயே சமாளித்துவிடுவேன். இதுதவிர,  பல நாடுகளுக்கும் செல்லும்போது, உள்ளூர் வார்த்தைகள் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, நிகழ்ச்சியில் பயன்படுத்தி, மக்களை குஷிப்படுத்துவேன். உதாரணமாக, உங்கள் ஊரில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது “வணக்கம் சென்னை!” என்று சொல்லுவேன். கடந்த முறை வந்திருந்தபோது, என் மேஜிக்கில் பங்கேற்கும் ஒரு முயலின் பெயர் “விஜய்” என்று சொன்னபோது ஆடியன்ஸ் ரொம்ப ரசித்துக் கைத்தட்டினார்கள். அதே மேஜிக்கை அமெரிக்காவில் செய்தால், முயலுக்கு “மைக்கேல் ஜாக்சன்” என்று பெயர் சொல்லுவேன், அங்கேயும் கைத்தட்டல் அதிரும்.

 “மேஜிக் செய்யும்போது திடீரென்று நிலைமை கைமீறிப் போனால் எப்படிச் சமாளிப்பீர்கள்?”

“ஓர் மேஜிசியன் மேடையில் அற்புதமாக மேஜிக் செய்து கொண்டிருந்தாலும், அடி மனதில், ஏதாவது  தவறு என்றால் எப்படி சமாளிப்பது’ என்ற எண்ணம் ஓடிக்கொண்டேதான் ஒருக்கும். ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால், தொடர்ந்து ஆடியன்சுடன் பேசிக்கொண்டே, இன்னொரு பக்கம் என்ன செய்து சமாளிப்பது என்று யோசித்து அந்தக் கண நேரத்தில் முடிவெடுத்து மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தி சமாளிக்க வேண்டும். ஒரு முறை, மேடையில் இருக்கும்  ஒரு மேஜை அந்தரத்தில் பறக்க வேண்டும். ஆனால், ஏதோ மெக்கானிகல் கோளாறு காரணமாக மேஜை மேலே எழும்பவில்லை. ஒரு வினாடியில் என்ன கோளாறு என்று கண்டுபிடித்து, அதை சமாளித்து மேஜை பறக்கும்படி செய்தேன். தவறு நடந்ததோ, நான் சமாளித்ததோ ஆடியன்சுக்குத் தெரியாது.

இந்திய விசிட் அனுபவம் எப்படி உள்ளது?”

“இனிமையாக இருக்கிறது. இந்திய மக்கள் மேஜிக்கை மிகவும் ரசிக்கிறார்கள். தங்கள் ரசிப்பை கைத்தட்டல் மூலம் வெளிப்படுத்துவார்கள். அமெரிக்காவில் ‘வாவ்’ என்று கத்தி தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள். பொதுவாக, நான் ரஷ்ய உணவுகளையும், இத்தாலிய உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். கடந்த முறை இந்தியா வந்திருந்தபோது ஹைதராபாத்தில் ஒரு பிரபல பிரியாணி உணவகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். ஒரே ஒரு ஸ்பூன் பிரியாணிதான் சாப்பிட்டேன். ஐயோ! காரமும், மசாலாவும் தாங்கமுடியவில்லை. ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகுதான் நாக்கு, தொண்டை எரிச்சல் அடங்கியது. வயிறு அப்செட் ஆகிவிட்டது. இப்போது நினைத்தாலும் அந்த பிரியாணி அனுபவம் என்னை மிரட்டும். கடந்த முறை  ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து நிறைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து மேஜிக் செய்து காட்டினேன். அவர்கள் சந்தோஷத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

கொரோனா கால அனுபவம்?”

“ரஷ்யாவில் அவ்வப்போது பொதுமுடக்கம் காரணமாக நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. ஆனாலும், விர்சுவலாக மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தினேன். ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது என்றாலும், பலர், மேஜிக்கை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும்; விர்சுவலில் அத்தனை பிரமிப்பு இல்லை” என்று சொன்னார்கள்.  தொற்று மட்டுப்பட்டபோது, அரங்குகள் திறந்து, சில மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தினேன். மக்களிடம் பணப்புழக்கம் அவ்வளவாக இல்லை என்பதால், நிறைய பேர் வரவில்லை.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...