ராஜஸ்தானில் 1000 இந்திரா உணவகங்கள்!

ராஜஸ்தானில் 1000 இந்திரா உணவகங்கள்!

ரு பக்கம் விரைவில் சட்டமன்றத் தேர்தல். இன்னொரு பக்கம், சச்சின் கோஷ்டி. இரண்டையும் சமாளிக்க ரொம்பவே திணறிக் கொண்டிருக்கிறார் ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட்.

கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் நம் ஊர் அம்மா உணவகம் போல “மொபைல் அன்னபூர்ணா” உணவகங்கள் நடத்தினார். மக்கள் மத்தியில் அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி கண்டு, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தவுடன், முதலமைச்சராகப் பொறுபேற்றுக் கொண்ட அஷோக் கெலாட், அந்த மொபைல் உணவக திட்டத்தை நிறுத்திவிட்டார்.

இப்போது தேர்தல் வருகிறது என்றதும்  அந்தத் திட்டத்தை தூசு தட்டி, “இந்திரா ரசோய் அதாவது இந்திரா உணவகம்” என்ற பெயரில் மீண்டும்  ஆரம்பித்திருக்கிறார்.

இந்த உணவகங்களில் எட்டு ரூபாய்க்கு சாப்பிடலாம். அரசாங்கம் ஒரு சாப்பாட்டுக்கு 14 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதற்காக அஷோக் கெலாட் அரசு 14 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

இங்கே ஒரு சாப்பாடு என்பது 100 கிராம் தால், 100 கிராம் சப்ஜி, 250 கிராம் சப்பாத்தி மற்றும் ஊறுகாய் அடங்கும்.

இப்போது ராஜஸ்தான் முழுக்க சுமார் 850 இந்திரா உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.

தேர்தல் அறிவிப்பு வருவதற்குள்ளாக மாநிலம் முழுவதிலுமாக உள்ள இந்திரா உணவகங்களின் எண்ணிக்கையை ஆயிரம்  ஆக்கிவிடவேண்டும் என்று  சொல்லி இருக்கிறாராம் முதலமைச்சர் அஷோக் கெலாட்.

இன்னொரு விஷயம் தெரியுமா? முதலமைச்சரே அடிக்கடி இந்திரா உணவகங்களுக்கு விசிட் அடித்து, அங்கே சாப்பிடுகிறார். அதன் புகைப்படங்களை, வீடியோவை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட  பல்வேறு வகையான மீடியா மூலமும்  பகிரப்படுமின்றன! தன் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இந்திரா ரசோய்களில் சாப்பிட்டு, அவற்றை பிரபலப்படுத்தும்படி முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இந்திரா உணவக சாப்பாட்டு ருசி நாக்கு மூலமாக வயிற்றை அடைந்து, அது விரல்கள் மூலமாக ஓட்டாக மாறும் என்பது அஷோக் கெலாட்டின் நம்பிக்கை போலும்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com