68 – 85 – 45 + 12 லட்சம் :  அப்படீன்னா?

68 – 85 – 45 + 12 லட்சம் :  அப்படீன்னா?

68 – 85 – 45 + 12 லட்சம்

இது என்ன தெரியுமா?

மேடையேறவிருக்கும் ஒரு புதிய  நவீன தமிழ் நாடகத்தின் தலைப்பு.  நாடகக் கலைக்காக கலைமாமணி, யூனிசெஃப் லாட்லி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, கலைஞர்  நினைவு பொற்கிழி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவரான எழுத்தாளர், நாடக இயக்குனர் ப்ரசன்னா ராமசாமி, சென்னை ஆர்ட் தியேட்டருடன் இணைந்து தயாரித்து, இயக்கி உள்ள நாடகம் இது. 

இந்த 90 நிமிட நாடகம் வரும் ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகர் கூட்டுறவு காலனி “மேடை” அரங்கத்தில்  நடைபெறுகிறது.

“68,85,45 + 12 லட்சம்” நாடகம் பற்றி: 

“பாடல், ஆட்டம், இசைக் கருவிகளால் இசைக்கப்படும் இசை என்ற மூன்றும் இணைந்த மெய்ப்பாட்டின் வகைதான் என்னுடைய நாடகம். ஆட்டமும், பாட்டும், ஓவியமும் என்னுடைய நாடக மொழியின் சொற்களே என்னும் அடிப்படையில் எனது நாடகங்களை அமைக்கிறேன்” என்கிறார் நாடகத்தின் ஆசிரியரும், இயக்குனருமான ப்ரசன்னா ராமஸ்வாமி.

அவர் இந்த நாடகத்தைப் பற்றிக் கூறுகையில், “இது ஓர் நவீன நாடகம். “நிலம், தீ, நீர், வளி விசும்பொடு அய்ந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்..." என்று சொல்கிறது தொல்காப்பியம்.  அதன்படி, இயற்கையின் கூறுகள் வழிபாட்டுக்கு உரியன என்று சமூகம் வரையறுத்துள்ளது.  இந்த ஐந்தினை  ஆதிக்க சக்திகள் சமத்துவத்திற்கு எதிராக,  ஒடுக்குதலுக்கான கருவிகளாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் சமகால சரித்திர நிகழ்வுகளின் பார்வைதான் இந்த நாடகம்.

இந்தத் தலைப்பில் உள்ள 68 கீழ் வெண்மணி சம்பவம் நிகழ்ந்த ஆண்டு. 85 ஆந்திராவின் கரமசெட்டூ கிராமத்து சம்பவ ஆண்டு. 45 என்பது அகில இந்திய அளவில்  மனிதக் கழிவு நீக்கும் பணியில் ஈடுபட்டு மரணிக்கும் மனிதர்கள் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு சதவீதம், 12 லட்சம் ஏக்கர் என்பது பஞ்சமி நிலப்பரப்பு.

இந்த நாடகம், சமூகவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு தலித் இளைஞனின் பார்வையில் துவங்கி,  நிலம், நீர், தீ, காற்று ஆகியவை  மீதான உரிமைகள் தலித் மக்களுக்கு எவ்வாறு மறுக்கப்படுகின்றன என அலசி, பௌத்தம் தழுவிய அம்பேத்கரின் செய்தியுடன் முடிகிறது.  இதில் பங்கேற்கும் நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னத்தின் ஆர்வம் குறிப்பிடத் தக்கது” என்று  கூறுகிறார்.  

“தமிழில் இது போன்ற நவீன நாடகங்களை அரங்கேற்றுவதில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது?”

“நம் ஊரில், நாடகங்கள் போடுவதற்கேற்ற 50, 100, 200 என இருக்கைகள் கொண்ட சிறிய அளவு அரங்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. நாடக ஒத்திகை நடத்துவதற்கேற்ப அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒத்திகை அரங்குகள் கிடையாது.  ஒரு சில மாநிலங்களைப் போல,  நாடகங்கள் நடத்த இங்கே அரசாங்கம், இயல் இசை நாடக மன்றம் போன்ற அமைப்புகள் மூலமாக மானியம் வழங்கப் படுவதில்லை. இவை எல்லாம் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், நாடகங்களுக்கென்று ஒரு ரசிகர் “சமூகத்தை நாடகக் குழுக்கள் உருவாக்கத் தவறிவிட்டன. சினிமா, கச்சேரி போன்றவற்றுக்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிச் சென்று பார்க்கும் ரசிகர்கள், நாடகம் என்றால் இலவசமாக பார்க்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள்.  இந்த அறிவு முதிர்ச்சியின்மை மாற வேண்டும்” என்கிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி.

 பாடலும் ஆட்டமும் மெய்ப்பாடும் இசைந்து 17 நடிகர்கள், பாடகர்கள், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இசையுடன் செய்திகளைப் பேசும் நவீன நாடகம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com