திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த முதல் குழந்தை...!!!

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த முதல் குழந்தை...!!!

ப்ப எல்லாம் வெளியூர் ஜனங்களுக்கு “கோட்டை பெரியாஸ்பத்திரி”னு சொன்னாத்தான் தெரியும். திருச்சி டவுன் உள்ளூர்க்காரங்க “தர்மாஸ்பத்திரி”னு தான் சொல்றது பழக்கம். திருச்சி புத்தூர் ஏரியாவுல அவ்ளோ பெரிய ஆஸ்பத்திரி கட்டி முடிச்சி திறப்பு விழா பண்ணினத்துக்கு அப்புறமா, நாலைஞ்சு மாசம் கழிச்சு நான் தான் முதல் குழந்தையா பிறந்திருக்கேன்” என்கிறார் திருச்சி வரகனேரி பகுதியில் வசித்து வரும் சையத் அக்பர் பாஷா. இப்போது அவருக்கு வயது எழுபத்தி மூன்று.

“என்னோட அப்பா சையத் யூசுப். அம்மா ஜெஹராபீ. எங்க வீட்டில் எனக்கு முன்னாடி ஒரு அக்கா. ஒரு அண்ணன். அவுங்க இரண்டு பேரும் திருச்சி காந்தி மார்க்கெட் ஏரியா வரகனேரி வெங்காய மண்டி ஆஸ்பத்திரியிலதான் பிறந்தாங்க. அப்போ எங்கம்மாவுக்கு பிரசவ நேரத்துல இரண்டுமே சுகப்பிரசவம். அதுக்குப் பின்னாடி நான் பிறந்தேன். நான் எங்கம்மாவோட வயித்துல இருந்தப்ப, திருச்சி அரசு மருத்துவமனை பெருசா கட்டி திறந்து இருக்காங்க. மூணாவது பிரசவத்துக்காக எங்கம்மாவை எங்கப்பா திருச்சி பெரியாஸ்பத்திரியில கொண்டாந்து சேர்த்து இருக்காரு.

195௦ கடைசியில பெரியாஸ்பத்திரி திறந்து இருக்காங்க. மூணாவது பிள்ளை பிரசவத்துக்கு எங்கம்மாவ 04.03.1951 அன்னைக்கு சாயந்திரமா திருச்சி அரசு மருத்துவ மனையிலக் கொண்டாந்து சேர்த்திருக்காங்க. ஏற்கனவே இரண்டு பிள்ளைங்க சுகப்பிரசவமா பிறந்ததுனாலே, இப்பவும் அப்படியே பிறக்கும்னு எங்கம்மாவும் எங்கப்பாவும் நம்பி இருந்திருக்காங்க. ஆனால் அது அப்படி நடக்கவில்லை.  எங்கம்மாவுக்குக் கடுமையான வலி. டாக்டர்ங்க எல்லாரும் யோசிச்சுட்டு, “பெரிய உசுரு வேணுமா? இல்லாட்டி சின்ன உசுரு வேணுமா?”னு எங்கப்பாட்ட கேட்ருக்காங்க. “ரெண்டு உசுருமே வேணும்”னு எங்கப்பா சொல்லி இருக்காரு. அதுக்கு அப்புறமா எங்கம்மாவுக்கு ஆபரேசன் பண்ணத் தொடங்கி இருக்காங்க.  05.03.1951  அன்னைக்கி நைட்டு  12.45 மணிக்கு நான் பிறந்துருக்கேன். புதுசா திறந்த கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில பிறந்த முதல் குழந்தைனு மறுநாள் காலைல எல்லாரும் கொண்டாடுனாங்கனு எங்கம்மா என்னிடம் பல தடவை சொல்லி இருக்காங்க.

நான் பிறந்ததும் என்னைய தனியா போடுறதுக்கு அங்கே குழந்தை தொட்டில் இல்லையாம். காலையில வரகனேரி வெங்காய மண்டி ஆஸ்பத்திரிக்கு ஒரு ஆளை அனுப்பி, அங்கே இருந்து பேபி தொட்டில் வாங்கி வந்து அப்புறமா தான் அதுல என்னைப் போட்டதா எங்கம்மா என்னிடம் சொல்லி இருக்காங்க.

என்னோட மூணு வயதில் எங்கப்பா இறந்துட்டாங்க. அதனால என்னோட பத்து வயசுலயே நான் வேலைக்குப் போய்ட்டேன். கஷ்டப்பட்டு உழைச்சேன். இப்போ திருச்சியில கண்ணாடி வியாபாரக் கடைக்கு ஓனரா இருக்கேன். நான் பிறந்த வருஷம் தான் திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறக்கப்பட்டது என்பதில் எனக்குப் பெருமை. அதிலும் நான்தான் அங்கு பிறந்த முதல் குழந்தை என்பதில் எனக்கு மேலும் மேலும் பெருமை.” என்கிறார் எழுபத்தி மூன்று வயதாகும் சையத் அக்பர் பாஷா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com