முற்பகல் தூக்கம்... பிற்பகல் தூக்கம்!
பகல் தூக்கத்தில் இரண்டு வகை உண்டு. காலை உணவு சாப்பிட்டவுடன் மலரும் முற்பகல் தூக்கம் ஒன்று. 2 அல்லது 3 மணிவாக்கில் வரும் பிற்பகல் தூக்கம் மற்றொரு வகை. இரண்டுக்குமே, உடலின் உள்ளுறுப்பு சம்பந்தப்பட்ட காரணம் இருக்கிறது. வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, நல்ல பசியோடு திருப்தியாக சாப்பிட்ட பின், ஜீரண வேலையை ஆரம்பிக்கும். வயிற்றுக்கு அதிகப்படி இரத்த ஓட்டம் அதாவது ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. பொதுவாக நம் உடல் உறுப்பு களிலேயே மூளைதான் அதிகப்படி. அதாவது 20 சதவிகிதத்திற்கும் குறையாமல் நம் இரத்தத்தில் கலந்துள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கிறது. சாப்பிட்ட பின் ஆக்ஸிஜனுக்கு அதிக டிமாண்ட் வயிற்றிலிருந்து வருவதால், மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் சப்ளை குறைகிறது. அதனால் தன் வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்ள கொஞ்சம் கண் அயர வைக்கிறது என்று கருதப்படுகிறது. இது ஒரு அரைமணி நேர ரெஸ்டாக இருப்பதில் தவறில்லை. இரண்டு, மூன்று மணி நேரம் இழுத்தடித்துவிட்டால் இராத் தூக்கத்தை மறந்துவிடுங்கள். ஏனெனில் பகல் பொழுது ஒரு மணி நேரத் தூக்கம் இரவு நேர இரண்டு மணித் தூக்கத்தை விழுங்கிவிடும்.
அதிக நேரம் பகல் தூக்கம் வருவது போலிருந்தால் சாப்பிட்டவுடன் வஜ்ராசனத்தில் 20 நிமிடங்களாவது அமருங்கள். மெத்தென்ற விரிப்பின் மீது காலை மடக்கி முட்டி போட்டு, அப்படியே அதன்மீது உட்காருவதே வஜ்ராசனம். காலுக்குப் போகும் இரத்த ஓட்டம் பெருமளவு தடைப்பட்டு வயிற்றுப் பகுதிக்கு வரும். ஜீரணத்திற்கு உறுதுணையாகும். பகல் தூக்கமும் குறையும்.
மற்றொரு வகையான பிற்பகல் தூக்கம் பெரும்பாலானவர்களுக்கு வருவது. அந்த நேரத்தைத்தான் ‘டீ’ டைம் என்று 2-3 மணி அளவில் புத்துணர்ச்சி பெறுவதற்கு பல ஆபீஸ்களிலும் கடைபிடிக்கிறார்கள். நாள் முழுவதும் வேலை செய்த களைப்பில் மூளை கேட்கும் ரெஸ்ட்தான் பிற்பகல் தூக்கம். இதற்கு தலைவணங்கி விடுவது நல்லது. இந்தத் தூக்கம் அவரவர்களுக்கு ஏற்றாற்போல அரை மணி முதல் ஒரு மணி வரை நீடிக்கும். இது இல்லாவிட்டால் பலருக்குத் தலைவலியே வந்துவிடும். நாளின் மீதிப் பொழுதில் புத்துணர்ச்சி இழந்து தவிப்பார்கள். சர்ச்சில் போன்ற பல உலகத் தலைவர்களும் இந்தப் பிற்பகல் தூக்கத்தை எக்காரணம் கொண்டும் விட்டதில்லை. அதனால்தான் இரவு பன்னிரெண்டு மணிவரை வேலை பார்த்துவிட்டு காலை நான்கு மணிக்கே சுறுசுறுப்பாக அவர்களால் எழ முடிகிறது.

