தீபாவளிக் கொண்டாட்டங்கள் – அன்றுபோல் இன்று இல்லையே?!

தீபாவளிக் கொண்டாட்டங்கள் – அன்றுபோல் இன்று இல்லையே?!

தீபாவளியென்றாலே 'உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீயாட, உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி' என்னும் மகிழ்ச்சிகரமான 'கல்யாணப் பரிசு' படப்பாடல்தான் நினைவுக்கு வரும்.

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்கள், கோலாகலங்கள்  அன்றுபோல்  இன்று இல்லையே என்று ஏங்கும் அளவுக்கு பல விதங்களிலும் மாறிவிட்டன.

எப்படி? பார்ப்போமா?

ஷாப்பிங்
ஷாப்பிங்

ஷாப்பிங்

அன்று:  

ரு மாதத்திற்கு முன்பே தி.நகர் பூராவும் அலசி ஆராய்ந்து புது மோஸ்தரில் துணிமணிகள் வாங்கப்படும்.  டீவியில் ரங்கநாதன் தெருவில் வெறும் மனிதத்தலைகள் மட்டும் காட்டப்படும். கூட்ட நெரிசலில் நம் தலைகளும் அப்போது கட்டாயம் இருந்திருக்கும்.  ஒரு கல்யாணத்திற்கு துணிமணி வாங்கும் அக்கறையுடன் வீட்டில் தாத்தா பாட்டியிலிருந்து கடைக்குட்டிகள் வரை கட்டாயம் கடைக்குச் சென்று புதிதாய் துணிமணிகள் வாங்கித்தான் தீபாவளியன்று உடுத்திக்கொள்வோம்.

இன்று: 

"அம்மா! தாயே! இந்த ட்ராஃபிக் நெரிசலில் என்னால் டூ வீலர் கூட ஓட்டமுடியாது.  நீ நம்ம ஏரியாவிலேயே ஏதாச்சும் கடையில் புது ட்ரெஸ் பார்த்து வாங்கிக்கோம்மா!" என்று கணவன் அலுத்துக்கொள்ள,  "நீங்க வேற! யாரால கடை கண்ணிக்கு அலைய முடியும்?  எங்க அண்ணா சஷ்டியப்த பூர்த்திக்கு நமக்கு வாங்கிக்கொடுத்த புதுப் புடவை வேஷ்டியே பிரிக்காம அப்படியேதானே இருக்கு.  அதுவே போதும் இந்த தீபாவளிக்கு" என்று மனைவி சலிப்பாகச் சொல்வதைக் கேட்கமுடிகிறது.   வருடம் முழுவதும் புதுசு புதுசாக 'ஆன் லைனில்' புது மாடல் ட்ரெஸ்கள் வாங்கிக்கொண்டே இருக்கும். நம் வீட்டுக் குழந்தைகள் மனதில் 'தீபாவளிக்கென்று வேறு புது ட்ரெஸ் எடுத்துத்தான் ஆக வேண்டுமா?' என்னும் கேள்வி எழுகிறது.  அவர்கள் ட்ரெஸ் என்ன பிரமாதம்? ஒரு ஷார்ட்ஸ், ஒரு டாப்ஸ் மட்டுந்தானே?

பட்சணம்
பட்சணம்

பட்சணம்

அன்று: 

ல்ல நாளிலேயே நம் வீடுகளில் ஓயாமல் சமையல், சாப்பாடு.  தீபாவளியென்றால் கேட்கவா வேண்டும்? மூன்று நாட்கள் முன்னதாகவே தீபாவளி வந்துவிடுகிறது. மெஷினுக்குச் சென்று மாவு அரைக்கிறதும்,  சலிக்கிறதும் என்று விதவிதமாக எவ்வளவு வேலைகள்?  குமுட்டி அடுப்பில் தணித்து வைத்த தணலில் ஒரு பக்கம் பால் கொதித்து திரட்டுப் பால் கிளறப்படும். லட்டு பிடிக்காமல் தீபாவளியா? வீட்டில் பாட்டியோ, அம்மாவோ பூந்தியை வறுத்து சர்க்கரைப் பாகில் போட்டு லட்டு பிடித்து ஒரு பெரிய தூக்கில் வைப்பார்கள். லட்டு பிடிக்க முடியாமல் மீந்து விடும் உதிரி பூந்திகளை தங்களுக்கு எப்படியும் சாப்பிட கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அடுக்களையில் சுற்றி சுற்றி வரும் குழந்தைகள்.

மைசூர்பாகு  தயாராகும் வாசம் வீட்டு வாசல் வரை வரும்.  குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டு ஆண்பிள்ளைகளும் சமையலறை உள்ளே எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.  இனிப்பு, கார பலகாரங்கள் முடித்தபின் கடைசியாக தீபாவளி லேகியம் கிளறப்படும் வாசனையில் அப்பொழுதே தீபாவளி வந்து விட்டாற்போல் தோன்றும்.

இந்த இனிப்புகளை எறும்பு வராமல் காப்பாற்ற எத்தனை பிரயத்தனப்படுவார்கள் தெரியுமா?  இனிப்பு வைத்திருக்கும் தூக்குகள், எவர்சில்வர் சம்புடங்கள் ஆகியவற்றைச் சுற்றி மஞ்சள் பொடியைத் தூவி வைப்பார்கள்.  அந்தப் பாத்திரங்களின் நடுப்பகுதியில் விளக்கெண்ணையைத் தடவி விடுவார்கள். எறும்பு ஏறினாலும் வழுக்கி விழுந்துவிடும், பாத்திரத்திற்குள் புகாது என்றெல்லாம் யோசித்து இனிப்பு வகைகளைப் பாதுகாப்பார்கள்.

இன்று: 

இப்போது ஊரெங்கிலும் இனிப்புக் கடைகள். எக்கச்சக்க விளம்பரங்கள். எந்தக் கடையில் எந்த பலகாரம் நன்றாக இருக்கும் என்று யோசித்து வாங்கிவிடுவது  மெதுவாக வழக்கத்தில் வர ஆரம்பித்திருக்கிறது. சும்மா பேருக்கு வீட்டில் ஒரு 'குலாப்ஜாமூன் மிக்ஸ்' வாங்கி 'நானும் ஸ்வீட் செய்தேன்' என்று சொல்லிக்கொள்வதே இன்றைய ‘டிரெண்ட்!’

குளியல்
குளியல்www.indiaherald.com

குளியல்

அன்று:      

தீபாவளி அன்று பூமியிலுள்ள எல்லாவிதமான நீரிலும், நம் வீட்டு மெட்ரோ வாட்டர் குழாய் உட்பட, கங்காதேவி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் வீட்டில் குளித்தாலே அது 'கங்கா ஸ்னானம்தான்!'. அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து நல்லெண்ணையில் மிளகு, ஓமம் போட்டு நன்றாக இலுப்பக் கரண்டியில் காய்ச்சி சின்னக் கிண்ணத்தில் விட்டு பூஜையறையில் வைத்தாகிவிடும்.   ஒவ்வொருவராக எழுந்து வர, கோலமிட்ட ஒரு மணைப் பலகையில் அமர வைத்து "கௌரி கல்யாணம் வைபோகமே!" என்று பாடி தலையில் எண்ணெய் வைப்பார்கள். அதிகாலையில் எழுந்திருந்துபொழுது விடிவதற்குள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரும் குளித்து புத்தாடை உடுத்தி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இதைத்தவிர தீபாவளிக்குக் காசி யாத்திரை செல்லும் பழக்கமும் அந்த நாட்களில் இருந்தது.  தீபாவளிப் பண்டிகையன்று கங்கா ஸ்னானம்,  கங்கையிலேயே செய்ய ஆர்வமுடன்,  மக்கள் ஆயிரக்கணக்கில் காசிக்குச் செல்வதும் வழக்கமாக இருந்தது.

இன்று: 

வீட்டுப் பெரியவர்கள் மட்டும் (அவர்களும் மெதுவாகத்தான் எழுந்திருக்கிறார்கள்) சாஸ்திரத்திற்கு தலையில் ஒரு ஸ்பூன் எண்ணெய் வைத்துக் குளிக்கிறார்கள்.  மற்றபடி குழந்தைகளுக்கு அது ஒரு விடுமுறை நாள் அவ்வளவுதான் என்பதால் அவர்கள் எப்போது எழுந்திருக்கிறார்களோ அப்போதுதான் குளியல்.  அன்று  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பதெல்லாம்கூட அவர்கள் இஷ்டந்தான்.

தீபாவளிப் பந்ததிகள்
தீபாவளிப் பந்ததிகள்

தீபாவளிப் பந்ததிகள்

அன்று:       

ரு இருவது வருடங்கள் முன்புகூட, தீபாவளி வீட்டுக்கு வீடு பந்ததி தவறாமல் அமர்க்களமாகக் கொண்டாடப் பட்டது. அடுத்த நாள் அதிகாலை தீபாவளி வைபத்திற்காக முதல்நாள் இரவே வாசலில் இழைகோலம் போட்டு அதைச்சுற்றி காவியிட்டு அழகுபடுத்த வேண்டும்.  முதல் நாள் மாலையே வீட்டில் வெந்நீர் போட வைத்திருக்கும் பாய்லருக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வைப்பார்கள்.  மறுநாள் அதில் போடும் வெந்நீரில் மகாலட்சுமி வாசம் செய்கிறாளே! அதே போல தீபாவளிக்கு முதல் நாள் இரவு சமையலில் வெங்காய சாம்பாரும், பஜ்ஜியும் கண்டிப்பாக உண்டு. 

தீபாவளிக்கு முதல் நாள் இரவு பூஜை அறையில் மாக்கோலமிட்டு அதன்மேல் ஒரு மணைப்பலகை வைக்கப்படும். அதில் வீட்டில் உள்ளவர்களுக்கு எடுத்த புது ஆடைகள் குங்குமம் தடவி வைக்கப்படும். பிறகு இரவு தூங்குவதற்கு முன் மருதாணியிடும் வைபவம் என்று ஒன்று தவறாமல் உண்டு. அடுத்த நாள் காலையில் யார் கை நன்றாக சிவந்திருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து குழந்தைகள் மகிழ்வார்கள். புத்தாடை அணிந்து மருதாணி பூச்சுடன் குழந்தைகள் கொள்ளை அழகாகத் திகழ்வார்கள். வீடே கோலாகலமாக இருக்கும்.  

இதையும் படியுங்கள்:
பறவைகளுக்காகப் பட்டாசுகளைத் தியாகம் செய்த கிராமங்கள்!
தீபாவளிக் கொண்டாட்டங்கள் – அன்றுபோல் இன்று இல்லையே?!

இன்று:     

வாசலில் இழை கோலம் போடும் பழக்கம் மெதுவாக வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.  பாதி வீடுகளில் வீட்டு வாசலில் 'ஸ்டிக்கர்' கோலம்தானே?  மருதாணி அரைத்து இட்டுக்கொள்வதெல்லாம் மறந்தே போய்விட்டது.  அதிகாலை எழுந்திருப்பதேயில்லை. வீட்டுப் பெரியவர்கள் மட்டும் (அவர்களும் மெதுவாகத்தான் எழுதிருக்கிறார்கள்) சாஸ்திரத்திற்கு தலையில் ஒரு ஸ்பூன் எண்ணெய் வைத்துக் குளிக்கிறார்கள். மற்றபடி குழந்தைகளுக்கு அது ஒரு விடுமுறை நாள் அவ்வளவுதான் என்பதால் அவர்கள் எப்போது எழுந்திருக்கிறார்களோ அப்போதுதான் குளியல்.

பட்டாசு வெடித்தல்
பட்டாசு வெடித்தல்

பட்டாசு வெடித்தல்

அன்று:       

நாங்கள் இருந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்த ஆறு வீடுகளில் பிள்ளைகளுக்குள் 'யார் தீபாவளியன்று முதலில் வெடிப்பது' என்பதில் போட்டா போட்டி. என் பிள்ளையை எண்ணெய் வைக்க அழைத்தால், மணையில் உட்கார்ந்தவுடன் எழ முயற்சிப்பான்.  நான்  'கௌரி கல்யாணம்......' என்று இழுக்க ஆரம்பித்தால் அவன் அலறுவான். "நீ பாடி முடிக்கிறதுக்குள்ள கீழ் வீட்டு சரவணனும், மோகனும் பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.  இந்த வருஷம் நான்தான் மொதல்ல வெடிக்கப்போறேன்." என்று.

என் பெண் சிரித்துக்கொண்டே, "அவனுக்கு கௌரி கல்யாண வைபோகமே பாடாதேம்மா! பட்டாசு வெடிக்கும் வைபோகமேன்னு பாடும்மா!" என்பாள்.  அப்படி வெறியாக குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு பட்டாசு வெடிப்பார்கள். அவர்களுக்கு புத்தாடை, பலகாரம் எல்லாமே துச்சம்.  ஊசிப்பட்டாசை ஒத்தை, ஒத்தை வெடியாக நாள் முழுக்க வெடித்துக் கொண்டேயிருப்பார்கள்.

இன்று: 

ளர்ந்து விட்ட குழந்தைகள்,"பட்டாசா? அதெல்லாம் வேண்டாம்.  சுற்றுச் சூழலுக்குக் கெடுதி" என்று நமக்குப் பாடம் எடுக்கிறார்கள். போட்டா போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது வளர்ந்து பெரியவர்களானதால், சுற்றுச் சூழலில் பட்டாசு ஏற்படுத்தும் மாசு, அதிகப்படியான சத்தத்தால் கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்பு என்று பேச ஆரம்பிக்க, படிப்படியாக பட்டாசு மோகமும் குறைந்து போனது. அரசாங்கமும் காலை ஆறு மணி முதல் ஆரம்பித்து குறிப்பிட்ட நேரம் வரைதான் பட்டாசு வெடிக்கலாம் என்று உத்திரவு வேறு பிறப்பித்திருக்கிறது. இன்று பட்டாசு சத்தம் குறைய ஆரம்பித்துவிட்டது. 

உறவினர் வீடு செல்லுதல்
உறவினர் வீடு செல்லுதல்

உறவினர் வீடு செல்லுதல்

அன்று: 

க்கம்பக்கம் வீடுகள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு தீபாவளி பலகாரங்கள் வினியோகம் ஆகும்.  தீபாவளியை சாக்கிட்டு உறவினர்கள், நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். தாத்தா பாட்டி, அத்தை மாமா என்று வீடுகளுக்குத் தேடிப்போய் புத்தாடை சரசரக்க அவர்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டு வருவார்கள்.

இன்று: 

தீபாவளி என்பது எல்லோருக்கும் ஒரு விடுமுறை நாள். அதற்கு மேல் அந்த நாளுக்கு மதிப்பில்லை. ஐடியில் வேலை செய்பவர்களுக்கு அதுவும் இல்லை.  அன்று வேலைக்குப் போயே ஆக வேண்டும். இதில் உறவினர் வீடுகளுக்கு எங்கே செல்வது?

லஷ்மி குபேர பூஜை
லஷ்மி குபேர பூஜை

பூஜை

அன்று:

தீபாவளியன்று வீடுகளில் லஷ்மி குபேர பூஜை கண்டிப்பாகச் செய்வார்கள்.  தீப ஒளித் திருநாள் என்று அன்று வீட்டு வாசலில் வரிசையாக தீபம் ஏற்றும் பழக்கமும் சில வீடுகளில் உண்டு.

இன்று:       

தீபாவளிக்கு எந்த சேனலில் பட்டிமன்றம், எதில் எந்த படம் என்று காலையிலேயே ஆவலோடு தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்து விடுவது வழக்கமாகிவிட்டது.  

ஆனால் எது எப்படியிருந்தாலும், பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் மாறிப்போனாலும், தீபாவளி நமக்கு என்றுமே 'உல்லாசம் பொங்கும்' முக்கியமானதொரு பண்டிகைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com