வேட்டங்குடி சரணாலயத்தில் காணப்படும் பல பறவைகள் தற்போது போடும், ‘கிரீச் கிரீச்’ சப்தத்தில், அவை வேட்டங்குடி மற்றும் கொள்ளுக்குடிப்பட்டி ஆகிய ஊர் மக்களுக்குச் சொல்லும் நன்றியும் அடங்கியிருக்கிறது. நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த இரு கிராமங்களிலும் சேர்ந்து வசிக்கின்றன.
பறவைகளுக்கு இடையூறாக இருப்பதால் இந்த ஊர் மக்கள் தீபாவளிக்குப் பட்டாசுகள் வெடிப்பதையே நிறுத்திவிட்டார்கள்!
மதுரை காரைக்குடி நெடுஞ்சாலையில் சிங்கம்புணரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கிளை பிரிந்து செல்லும் சாலை வழியே, நெல் வயல்களைத் தாண்டிச் சென்றால் கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தை அடையலாம். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலூகாவில் அமைந்திருக்கிறது இது. சிவங்கை மற்றும் மதுரை மாவட்டங்களின் எல்லையில் வேட்டங்குடி மற்றும் கொள்ளுக்குடிப்பட்டி கிராமங்கள் அமைந்திருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டமும் அண்மையில் உள்ளது.
கொள்ளுக்குடிப்பட்டி ஊருக்கு அருகே உள்ள அறிவிப்புப் பலகை ஒன்று, வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் இருப்பதை உணர்த்துகிறது. பறவைகளின் அகவல் ஓசை மென்மையாகக் காற்றை நிறைக்கிறது.
தென் தமிழ்நாட்டில் இருக்கும் மிகப் பழைமையான பறவைகள் சரணாலயம் இது. 38.40 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் இது அமைந்திருக்கிறது. 1977ம் ஆண்டு ஜூன் மாதம் வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்டங்குடிப்பட்டி மற்றும் கொள்ளுக்குடிப்பட்டி ஆகிய இரு கிராமங்களிலும் இருக்கும் மூன்று நீர்நிலைகள்தாம் வலசை போகும் பறவைகளுக்குப் பிடித்த ‘புகுந்த வீடுகள்.’
இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாடு மற்றும் வெளி மாநிலப் பறவைகள் வந்து, தங்கிப் போகும் புகலிடம் இது. நாரைகள், பாம்புத் தாராக்கள், முக்குளிப்பான்கள், நீர்க் காகங்கள், சாம்பல் கொக்குகள், சின்னக் கொக்குகள், நடுத்தரக் கொக்குகள், பெரிய கொக்குகள், உண்ணிக் கொக்குகள், மஞ்சள் மூக்கு நாரைகள், நத்தை குத்தி நாரைகள், செங்கால் நாரைகள், கரண்டி வாயன்கள், புள்ளி மூக்கு வாத்துகள், நீர் வாத்துகள், ஊசி வால் வாத்துகள், நீலச்சிறகி, கிளுவை, மீன் கொத்திகள் ஆகியன அவற்றில் சில.
குளிர்காலத்தில் வலசை போகும் பறவைகள் விரும்பித் தங்கிப்போகும் இடம் இது. ஆண்டொன்றுக்கு வலசைபோகும் பருவ காலத்தில், சுமார் 15,000 பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இவற்றின் வருகை தொடங்கும். வட இந்தியா, சைபீரியா, நியூஸிலாந்து, ஸ்ரீலங்கா, சீனா, மியான்மர் மற்றும் மாலத்தீவுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. குறைந்தது நான்கு மாதங்கள் இவை இங்கே தங்கியிருக்கும். (நமது தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடங்கும் நேரம்) அந்தக் காலகட்டத்தில் கூடுகட்டுவது, குஞ்சு பொரிப்பது ஆகியன நடைபெறும். இங்கே தங்கிக் கூடுகட்டிக் குஞ்சு பொரித்து அவை பறக்கத் தொடங்கியதும் தம்முடன் அழைத்துச் செல்வது அந்தப் பறவைகளின் வழக்கம்.
வெடிச் சத்தத்தால் பயந்துபோகும் பறவைகள் தாங்கள் அடைகாப்பதை விட்டுவிட்டுப் பறந்தே போய்விடும். இது இவற்றின் இனப்பெருக்கத்தையும் தாயின் பராமரிப்புத் தேவைப்படும் இளம் குஞ்சுகளையும் பெருமளவு பாதிக்கும். பட்டாசுகளின் வெடியோசைகள் பறவைகளை அச்சுறுத்தும் என்பதாலும், அவற்றின் புகை பறவைகளின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பதாலும் இந்த வட்டாரத்து மக்கள் பட்டாசுகள் வெடிப்பதையும் வாணங்கள் கொளுத்துவதையும் கடந்த பல பத்தாண்டுகளாகவே முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
தீபாவளி பண்டிகையில் பல மாநில அரசுகளும் பட்டாசு வெடிப்பதற்குப் பலவித நிபந்தனைகளை விதித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் பட்டாசு வெடிப்பது மற்றும் வாணங்கள் கொளுத்துவது ஆகியனவற்றை இந்த இரு கிராமவாசிகளும் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார்கள். இதனால் ஒலி மற்றும் மாசுக் கேட்டில் இருந்து பறவைகள் பாதுகாக்கப்படுகின்றன.
தங்கள் கிராமங்களுக்கு வருகைபுரியும் இந்தப் பறவைகளைத் தங்கள் விருந்தினர்களாக மதிக்கிறார்கள் இந்த கிராமிய மக்கள். இன்னும் ஒரு படி மேலே போய் அந்த ‘விருந்தினர்களை’ கடவுளாகவே கருதவும் செய்கிறார்கள்.
இந்தப் பகுதி பறவைகளின் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இவர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைப் பொறுத்தவரை தீபாவளி ஓர் அமைதிப் பண்டிகை. பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள இளம் சிறார்களுக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பக்குவமாகப் புரியவைக்கிறார்கள். இளம் தலைமுறையினரும் முகம் சுளிக்காமல் பட்டாசுகளைத் தியாகம் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பு!
தீபாவளியின்போது மட்டுமல்ல, கோயில் திருவிழாக்களிலும் இந்த ஊர் மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. இது இங்கு எழுதப்படாத சட்டம். அனைவரும் மதிக்கும் சட்டம். ஒலிபெருக்கிகள் மூலம் பாடல்களை ஒலிபரப்புவதையும் இவர்கள் கைவிட்டிருக்கிறார்கள்.
இந்த கிராம மக்களின் சிறப்பான இச்செயலைப் பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் வனத் துறையினர் இந்த கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் பாராட்டுதல்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.