தீபாவளி சிறப்பு ‘சிரி’கதை - வெடி வெங்கடாசலம்!

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்
Deepavali 2023
Deepavali 2023

திகாலை 5.30 மணிக்கு, நண்பன் நாநாவிடமிருந்து அவசர அழைப்பு வந்தபோது, வனமாலி திடுக்கிட்டான். அப்படி என்ன 5.30 மணிக்கு தலைபோகிற அவசரம் என்று யோசித்தபடியே, கைப்பேசியை விரல்களால் ஒற்றி, காதுடன் இணைத்தான்.

“வனமாலி. எங்களோட ஒண்ணுவிட்ட தாத்தா வெடி வெங்காடசலத்தோட உயில் கிடைச்சாச்சு” என்றான் நாநா.

“அத எதுக்குடா இப்ப அவசரமா எனக்கு காலங்கார்த்தால போன் பண்ணி சொல்லற. எதாவது சொத்து பத்து கிடைக்கப்போகுதா உனக்கு? அவரப் பத்தி நீ இதுவரைக்கும் என்கிட்ட எதுவுமே சொன்னதில்லையே” என்றான் வனமாலி.

“டேய் வனமாலி. எங்க ஒண்ணுவிட்ட தாத்தா வெடி வெங்கடாசலம், எங்க குடும்பத்தோட 'டூ' விட்டு, அதாவது, சண்டை போட்டு, தொடர்பு இல்லாம போச்சு. ஆனா, சின்ன வயசுல என்கிட்ட நாநா, நாநான்னு அன்பா இருப்பார்.  சாகற நேரத்துல, அவருக்கு என்னமோ தோணி, என் மேல இருக்கற பாசத்துல, அவரோட வெடிகளை எனக்கு உயில் எழுதி வச்சுருக்கறதா, அவரோட பேரன் ராம்ஜி இப்பத்தான் எனக்கு அவசரமா போன் போட்டு சொன்னான். அவன் எனக்கு அம்மாஞ்சி முறை. அடுத்த வாரம் தீபாவளி வருது. முதல் வேலையா, இப்பவே செங்கல்பட்டு போய், ஊருக்கு ஒதுக்குப்புறத்துல இருக்கற அவரோட பூர்விக வீட்டு பரண்ல ஏறி, அந்த வெடிய எடுக்கணும். இந்த தீபாவளியை பல தலைமுறையா சேமிச்சு வச்ச, வெடியோட கொண்டாடலாம்” என்றான் நாநா.

“பேரே வித்தியாசமா இருக்கு. வெடி வெங்கடாசலம். பல தலைமுறையா சேமிச்ச வெடின்னு வேற சொல்லற. எனக்கு கொஞ்சம் பயமா இருக்குடா. வெடி மருந்து பேக்டரி ஏதாவது வச்சுருந்தாரா?'' வனமாலியின் குரலில் நடுக்கம் இருந்ததை உணர்ந்த நாநா,  “அவர் சுதந்திர போராட்டத்துலகூட பங்கெடுத்துக்கிட்டார். அகிம்சாவாதிதான். வெடிமருந்து அப்படி இப்படின்னு பயப்படவேண்டாம். ஆனா, அவருக்கு எப்படி வெடி வெங்கடாசலம்னு பேர் வந்ததுன்னு அவரோட பேரன் ராம்ஜியை கேக்கலாம். முதல்ல காலேஜூக்கு லீவு போட்டுட்டு இப்பவே, காரை எடுத்துக்கிட்டு கிளம்பலாம். இப்ப சென்னைலேர்ந்து கிளம்பினா, ஒரு மணி நேரத்துல செங்கல்பட்டு போய்டலாம். தாத்தா வெடியெல்லாம் எனக்கு போகுதேன்னு ராம்ஜிக்கு எரிச்சல். அவன் குரல்லயே தெரியுது. நான் போறதுக்குள்ள அவன் வெடியை அப்புறப்படுத்தாம இருக்கணும்னு ஒரு மிரட்டல் கொடுத்துருக்கேன். மவனே, பரண்ல உன்னோட கைரேக, கால்ரேக எதாவது பாத்தேன், நீ தீந்தேன்னு ராம்ஜிக்கு ஒரு எச்சரிக்கை விட்டுட்டுத்தான் உனக்கு இப்ப போன் பண்ணறேன்” என்றான்.

னமாலியும், நாநாவும் ரஜினி படத்தின் முதல்காட்சிக்கு தயாராவது போல், படபடவென தயாராகி, அவசர அவசரமாக கல்லூரிக்கு விடுப்பு கடிதம் எழுதிவிட்டு, ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு, வனமாலியின் மாருதி ஸ்விப்ட் சிற்றுந்தியில், கிளம்பினர்.

“வனமாலி. வெடி வெங்கடாசலத்தோட உயில்ல நமக்கு எழுதியிருக்கறத, ராம்ஜி வாட்ஸ் அப்ல அனுப்பியிருக்கான். அத படிக்கறேன் கேளு” என்றான் நாநா.

'நான் எனது மூணாம் வகுப்பு முதல், தொண்ணூத்து மூணாம் வயசு வரையில், சேத்த எல்லா வெடிகளையும் பத்திரமாக, வீட்டின் சைடு ஓர சந்தின் மூலையிலுள்ள ரூமில், நுழைஞ்சவுடன் இடதுபக்க ஓர, முக்காலிக்கு மேலுள்ள பரணில், ஈசான்ய மூலையில், எனது பிரத்யேக கடவுள் அம்மா பிரத்யங்கரா தேவி படம் போட்ட பெரிய டிரங்க் பெட்டியில் வைத்துள்ளேன். அதிலுள்ள எல்லா வெடிகளும் எனது ஒண்ணு விட்ட மாமா பேரன் நாநாவிற்கு உரியது. பிரத்யங்கரா தேவியின் பிரத்யேக மந்திரத்தை உச்சரித்து விட்டு, பெட்டியைத் திறக்கவும். மந்திரத்தை ராம்ஜியிடம் கேட்கவும்எனது வெடிகளுக்கு பாத்தியதை உடையவன் நாநா ஒருவனே. அந்த பாக்கியசாலி நாநாவைத் தவிர, யாருக்கும் அந்த வெடிகளுக்கு உரிமை கிடையாது. வெடி வெங்கடாசலத்தோட திறமையை நாநா தெரிஞ்சுப்பான்.’

இப்படிக்கு,

வெடி வெங்கடாசலம்

“கிட்டத்தட்ட 85 வருஷமா சேத்து வச்ச வெடிலாம் ஒரு டிரங்க் பெட்டில இருக்கு. ஆனா, மழ கிழ பெஞ்சு அதெல்லாம் நமுத்து போயிருக்குமோன்னு ஒரு சந்தேகம் எனக்கு” என்றான் நாநா.

“எனக்கென்னவோ, இவ்வளவு பழைய கால வெடிகள அங்க இங்கன்னு நகத்தப் போக, படார்னு வெடிச்சு வச்சா என்ன பண்ணறது? வெங்காய வெடி மாதிரி வெடியெல்லாம், பல தலைமுறையா வெடிக்காம காஞ்சு கிடக்கறபோது, சின்ன அசைவுலகூட, அதுக்கு எசகுபிசகா கோபம் வந்து,  வெடிச்சுடுமோன்னு பயமா இருக்கு. அது தூங்கிகிட்டு இருக்கற எரிமலை மாதிரி. அது தவிர, லட்சுமி வெடி, குருவி வெடின்னு பல காலமா சேத்த வெடியெல்லாம் வேற இருக்கும். லட்சுமி வெடி மாதிரி பிரத்யங்கரா தேவி வெடிகூட இருக்குமோ?  உடனே, ஒரு பாம் ஸ்குவாடை கூப்பிடலாம்டா நாநா, முதல்ல நீ ராம்ஜிக்கு ஒரு போன் போட்டு இப்பவே, வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லு” என்றான் வனமாலி.

இதையும் படியுங்கள்:
தீபாவளியை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுங்க; ஆனால் உங்க பற்களையும் பாதுகாத்துக்கோங்க!
ஓவியம்: பிரபுராம்

“ஆமாம்டா. நீ சொல்றது சரி. நாம அத மறுபடியும் சென்னைக்கு கொண்டுவரதுக்கு பதிலா, செங்கல்பட்டுலயே, ஒரு கிரவுண்டுல வெடிச்சுடலாம். நம்ம பிரண்டு முருகேசன் மாமா அங்க இன்ஸ்பெக்டரா இருக்காரு. அவர் வழியா இதுக்கு ஏற்பாடு பண்ணலாம்” என்றான் நாநா.

நாநா முருகேசனை கைப்பேசியில் அழைத்து, விபரத்தைக் கூறினான். முருகேசன் தனது மாமாவிடம் பேசி, வெடிபொருட்களைக் கையாளும் குழு வருவதற்கு ஏற்பாடு செய்தான். வனமாலியும் நாநாவும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த, வெடி வெங்கடாசலம் தாத்தாவின் பூர்வீக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அந்த வீடு, ஏரியை ஒட்டி ஒதுக்குப்புறமாக இருந்தது. அங்கு சுற்றும் முற்றும் பெரிதாக வீடுகள் இல்லை. வயல்வெளிகளுக்கு நடுவே, அமைதியாக இருக்க, வெடிகளின் வெடி சத்தம் அந்த அமைதியைக் குலைத்து விடுமோ என்று நடுங்கினர் நாநாவும்,  வனமாலியும். அந்த வீட்டைச் சுற்றி, ஒரு பெரிய காவலர்கள் கூட்டமிருந்தது. வெடிமருந்துகளை செயலிழக்கச் செய்யும் ஒரு குழு மட்டும் வீட்டின் அருகே இருந்தது. வீட்டைச் சுற்றி, அவர்கள் பூனைபோல் நகர்ந்து சென்றனர். வாக்கி டாக்கி மூலம் தகவல்களை அருகிலிருந்த காவல் துறை அதிகாரிகளிடம் பரிமாறிக்கொண்டனர்.

'சைடு ஓர சந்து ஓவர்' என்றார் ஒரு காவல்காரர்.

'சந்து ஓர ரூம் ஓவர்' என்றார் மற்றொரு காவல்காரர்.

'நுழைஞ்சவுடன, முக்காலி மேல இருக்கற பரண். ஓவர்' என்றார் மூன்றாமவர்.

'ஈசான்ய மூலை பிரத்யங்கரா தேவி படம் போட்ட டிரங்க் பெட்டி ஓவர்' என்றார் காவல்காரர்.

வீட்டுக்கு முன்பு வயல்கள் சூழ இருந்த வெட்ட வெளியில் டிரங்கு பெட்டியை காவலர் கொண்டுவந்து வைத்தார். மொத்த காவலர் கூட்டத்தின் பார்வையும் பெட்டியின்மீது படிந்தது.

“பிரத்யங்கரா தேவி மந்திரத்தை நான் சொல்லட்டுமா” என்றான் ராம்ஜி.

“நான்தான் சொல்லுவேன். அந்த பெட்டி எனக்குத்தான்” என்றான் நாநா.

“சொல்லித் தொலைங்க. இது ரொம்ப ஓவர். ஓவர்” என்றார் ஒரு காவல்காரர், டென்ஷன் பொங்க!

ராம்ஜி கண்களை உருட்டி, கைகளைக் கூப்பி, கரகர குரலில் பிரத்யங்கரா தேவி மந்திரத்தைக் கூறியபோது, அந்தக் கரகர குரலின் கரகரப்பில் வெங்காய வெடி அதிர்ந்து, வெடித்துவிடுமோ என நடுங்கினான் வனமாலி. மந்திரம் ஓய்ந்தவுடன், மெலிதாகப் பெட்டி திறக்கப்பட்டது. அந்த வயல்வெளியில் அமைதி நிலவியது.

டிரங்கு பெட்டியைத் திறந்த காவல்காரர் நாநாவினை அருகில் கூப்பிட்டார். நாநா நடுங்கிக்கொண்டே டிரங்கு பெட்டியை நெருங்கினான்.

உள்ளே ஒரு 1940 ஆம் வருட நாட்குறிப்பு இருந்தது. அதைத் திறந்தபோது, முதல் பக்கத்தில்,

'குபீர் சிரிப்பு வெடிகள். தொகுப்பு - வெடி வெங்கடாசலம், 3 ஆம் வகுப்பு '

என்று கொட்டை எழுத்தில், அட்சர சுத்த கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com