20 களில் பணத்தைச் சேமிக்க ஆறு சிறந்த வழிகள்!

20 களில் பணத்தைச் சேமிக்க  ஆறு சிறந்த வழிகள்!

ம் கிராமப்புறங்களில் எல்லாம் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். இந்தப் பழமொழிக்குப் பெரும்பான்மை யானவர்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்கும். சிறுவயதில் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும், பெரியவர்களாக ஆனபிறகும் செய்ய முடியாது.

நீங்கள் எதிர்காலத்தில் ஒரு பணக்காரராக இருக்க விரும்பினால் உங்கள் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கு, உங்கள் 20-30களில், உங்கள் நிதிகளை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் நினைக்கலாம், ‘இன்னும் வேலையே கிடைக்கவில்லை. இதில் பணத்தைச் சேமிப்பதா?’ என்று.

நாம் முதலில் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். பணத்தைச் சேமிக்க வேலை மற்றும் வருமானம் இருந்தால் மட்டும் போதாது. பணத்தைச் சேமிக்க மற்றும் நிர்வகிக்க  மனப்பக்குவம் வேண்டும். அந்த மனப்பக்குவத்தை நமது 20-வது வயதிலேயே ஏற்படுத்திக்கொள்வது அவசியம். இளமையில் பணத்தை நிர்வகிப்பதற்கான சில நிதி விதிகளை இங்கே பார்ப்போம்.

1. பட்ஜெட்டை உருவாக்கவும்

ம் கையில் கொஞ்சம் பணம் இருந்தால்போதும், நம் வாழ்க்கைக்கு நாம்தான் ராஜா என்று எண்ணிப் பல செயல்களைச் செய்வது, பொருள்கள் வாங்குவது என்று பல செலவுகளைச் செய்து பணம் இருந்த இடத்தையே தெரியாமல் செய்துவிடுவோம். உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்க ஒரு பட்ஜெட்டை அமைக்கவும். இது உங்கள் பணம் எங்குச் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், தேவையான மாற்றங்களைச் செய்யவும் உதவும்.

2. சேமித்து முதலீடு செய்யுங்கள்

சிலர் சேமித்தால் பெரும் தொகையாக சேமிப்போம்; இல்லை என்றால் சேமிப்பு பக்கமே ஒதுங்க மாட்டோம் என்று இருப்பார்கள். அப்படி இல்லாமல் முதலில், சிறிய தொகையாக இருந்தாலும் தவறாமல் சேமிக்கத் தொடங்குங்கள். ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். காலப்போக்கில் உங்கள் செல்வத்தை அதிகரிக்க சேமித்த பணத்திலிருந்து கொஞ்சம் எடுத்து பிறவற்றில் முதலீடு செய்யுங்கள்.

3. ஒரு அவசர நிதியை உருவாக்குங்கள்

னிதனின் வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று தெரியாத ஒரு புதிர். பெரும் நன்மைகளும் எதிர்பாராத சில தீமைகளும் நடக்கலாம். அப்படிப்பட்ட காலங்களில் நாம் சிறுக சேமித்து வைத்த பணங்களை எல்லாம் அவற்றிற்காகச் செலவு செய்தால். மறுபடியும் முதலிலிருந்தே நம் சேமிப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.அப்படிப்பட்ட சூழலைத் தவிர்க்க. எதிர்பாராத அவசரநிலைகளை ஈடுகட்ட, குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாத சம்பளத்தை வாழ்க்கைச் செலவுகளுக்காகத் தனியாக எடுத்துச் சேமித்து வைத்துக்கொள்ளவும். அல்லது மருத்துவக் காப்பீடு போன்றவற்றிற்கு முதலீடு செய்யவும்.

4. கடனை அடைத்து விடுங்கள்

சேமிப்பு என்று சொன்னவுடன் சிலர் சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு பல முதலீட்டாளர்களை பார்த்துவிட்டு நானும் சேமிக்கப் போகிறேன் என்று சென்றுவிடுவார்கள்.  அப்படி சேமிக்க வந்தவர்களுக்கு தன் குடும்பச் சூழல் காரணமாகவோ அல்லது அவசரக் காலத்திற்காகவோ வாங்கிய கடன் மறந்திருக்கும். அது சேமிப்பு தொடங்கிய பின்னரே அவர்களுக்கு நினைவில் வரும். சேமிப்பைத் தொடங்கும் நபர் முதலில் மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் கடன்களை முடிப்பது. அல்லது கடனை சீக்கிரம் முடிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பது. மாதத் தவணைகள் போன்ற அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களைச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள். முடிந்தவரைத் தேவையில்லாமல் கடன்களைக் குவிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

5. நிதி இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள்

ல்லோருக்கும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், எவ்வளவு பணம் இருந்தால் நீங்கள் பணக்காரராக உணர்வீர்கள்? எவ்வளவு பணம் உங்கள் தேவைக்கு போதும் என்பதையெல்லாம் யாரும் நிர்ணயித்து இருக்க மாட்டார்கள் . முதலில் உங்கள் நிதி இலக்குகளை வரையறுக்கவும், அது வீடு வாங்குவது, பயணம் செய்வது அல்லது ஓய்வுக்காகச் சேமிப்பது. என்று எதுவாகவும் இருக்கலாம். தெளிவான குறிக்கோள்களைக் கொண்டிருப்பது உங்களுக்கு உந்துதலாக இருக்க உதவும்.

6. கல்வியில் முதலீடு செய்யுங்கள்

ல்வி என்றவுடன் தனது பள்ளியில் படிப்பது கல்லூரியில் படிப்பது மட்டும் என்ற எண்ணி விடாதீர்கள். திறன்களை வளர்க்கக்கூடிய எந்த ஒரு படிப்பாக இருந்தாலும் சரி அதனை கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். அதற்குச் செலவு செய்வதைக் கணக்கில் கொள்ளாதீர்கள். தொடர்ந்து கற்கும் திறன் பிற்காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வழிவகுக்கும்.

நண்பர்களே! அதிக செலவு செய்வதைத் தவிர்த்து, உங்கள் வருமானத்தை வைத்து உங்கள் வாழ்க்கை முறையைக் கட்டுப்படுத்துங்கள். ஒவ்வொருவரின் நிதி நிலையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு இந்த விதிகளை மாற்றியமைக்கவும்.  தேவைப்பட்டால் நிதி நிபுணர்களிடம் இருந்து ஆலோசனை பெறவும். எவ்வளவு விரைவாக நிதியை நிர்வகிக்க கற்றுக்கொள்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்கள் வாழ்க்கை நல்ல நிலைமையை அடையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com