சாரதி

சாரதி

 

 

 

கன்னாதனுக்கு வீடு ரொம்பவே பிடித்து விட்டது.

பெரிய ஹால்.... விஸ்தாரமான மூன்று அறைகள்... ஏ.ஸி. முதலான இணைப்புகளுடன்... மூன்றிலும் அட்டாச்ட் பாத்ரூம்... வசதியான மாடுலர் கிட்சன்... முக்கியமாக வீடு முழுவதும் நல்ல வெளிச்சம்... காத்தோட்டம்...

“வீடு பிடிச்சிருக்கு சாரதி... வாடகையும் ஓக்கே... ஓனரைப் பார்த்து உடனே அட்வான்ஸ் கொடுத்துரலாம்.”

சாரதி வீட்டு புரோக்கர். சுமார் நாற்பத்தைந்து வயது. நெற்றியில் விபுதிப் பட்டையும் மத்தியில் குங்குமப் பொட்டும்... வெள்ளை சட்டையும் வேஷ்டியும்... ஒரு லெதர் பையும்... எப்பவும் பளிச்சென்ற சிரிப்பும்... அவனைப் பார்க்கும் போதே மனதில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுவது நிச்சயம்.

தாம்பரத்திலிருந்து மைலாபூருக்கு ஜாகை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தவுடன் சாரதியைத்தான் ஜகன்னாதன் அணுகினார். சாரதி இளைஞனாக இருந்த காலத்திலிருந்தே அவருக்குப் பழக்கம். சாரதியின் திருமணத்துக்கு ஜகன்னாதன் மனைவியுடன் போயிருக்கிறார். அது நடந்து இருபது வருடங்கள் ஓடி விட்டன. இப்போது அவன் மகனுக்கே பதினேழு பதினெட்டு வயது இருக்கும்.

“சாரதி... நீ தாம்பரம் வாசி. உனக்கு மைலாபூர்ல வீடு பார்த்துத்தர முடியுமா?

ஜகன்னாதன் சந்தேகத்துடன் கேட்டபோது சாரதிக்கு கொஞ்சம் ரோஷமே வந்துவிட்டது.

“அண்ணா... என்ன அப்படிக் கேட்டுட்டீங்க. மைலாபூர் என்ன... சந்திரமண்டலத்துலயே வேணாலும் நான் வீடு பார்த்துத் தருவேன்.”

“ஐயையோ... சந்திரமண்டலம்லாம் வேண்டாம். ரொம்பக் குளிரும். ஏற்கனவே சென்னை குளிரையே தாங்க முடியலை. நீ மைலாபூர்லயே வீடு பாரு. வாடகையைப் பத்திக் கவலை இல்லை. வீடு நல்லா இருக்கணும். என் மகனோட உத்தரவு அது”

சொன்ன மாதிரியே ஒரே வாரத்தில் சாரதி இந்த வீட்டைப் பிடித்துவிட்டான்.

பக்கத்துத் தெருவிலிருந்த வீட்டு சொந்தக் காரரை மொபைலில் பிடித்து உடனே வரவழைத்து சம்பிரதாய அறிமுக விசாரிப்புகளுக்குப் பிறகு அட்வாஸ் செக்கைக் கொடுத்தார் ஜகன்னாதன்.

வெளியே வந்ததும்.

“சாரதி. ரொம்ப தேங்ஸ்.. வீடு ரொம்ப லெஷ்மிகரமா இருக்கு. உனக்கு எவ்வளவு புரோக்கரேஜ் தரணும்?”

சாரதி காவிப் பல் தெரிய சிரித்தான்.

“அண்ணா... உங்களுக்குத் தெரியாதது இல்லை. வழக்கமா ஒரு மாச வாடகைதான் புரோக்கரேஜா வாங்குவேன். ஆனா நீங்க அரை மாச வாடகை கொடுங்க போதும்.”

சாரதி சொன்னவுடன் ஜகன்னாதனுக்கு ஆச்சர்யம்.

“என்ன... ஏதாவது விழாகால சலுகையா?”

“அதெல்லாம் இல்லைண்ணா... இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... அதான்...”

“ஏன்... இன்னிக்கு அளவுக்கதிகமா புரோக்கரேஜ் கிடைச்சுருத்தா?”

மறுபடியும் ஒரு சிரிப்பு...

“அதெல்லாம் இல்லை.. அப்படியே அதிகமா புரோக்கரேஜ் கிடைச்சாலும் அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன். ஏன்னா இன்னிக்கு வரும்... நாளைக்கு வராது... அதானே எங்க பிழைப்பு.”

“அப்புறம் வேற என்ன சந்தோஷம்?”

“என் மகனுக்கு வெளி நாட்டுல படிக்க அட்மிஷன் கிடைச்சிருக்கு. அதுக்கு பேங்க்குல படிப்பு லோன் போட்டிருந்தேன். கிட்டத்தட்ட இருபது லட்ச ரூபா. அது இழுபறில இருந்தது. கிடைக்காதுன்னே நினைச்சேன். ஆனா மேனேஜர் ரொம்ப சிபாரிசு பண்ணி இன்னிக்கு லோன் சேங்ஷன் ஆயிட்டதா போன் பண்ணிச் சொன்னார்.”

குழந்தையைப்போல் சந்தோஷப்பட்டான்.

ஜகன்னாதனுக்கு ஆச்சர்யம்.

“ரொம்ப சந்தோஷம் சாரதி. ஆனா பேங்க்குல எப்படி லோன் சேங்ஷன் ஆச்சு? உனக்கு நிர்ந்தர வருமானம் கிடையாது. எப்படி கடனைக் கட்டுவேன்னு கேட்பாங்களே.”

“கேட்டாங்கண்ணா... என் சம்சாரம்தான் ரெவென்யு டிபார்ட்மெண்டுல கிளர்க்கா இருக்காளே. அவ சம்பளத்தைக் காட்டினேன்.. அதோட எங்கப்பா தன் ஒரே மகன் எனக்கு விட்டுட்டுப் போன ரெண்டே சொத்து. ஒண்ணு செங்கல்பட்டுல மெயின் ரோடுக்குப் பக்கத்துல அரை கிரௌண்ட் நிலம். அதை ஏழு லட்ச ரூபாய்க்கு வித்தேன். இன்னும் அதிகமாப் போயிருக்கணும். ஆனா அவசரத்துக்கு அவ்வளவுதான் கிடைச்சுது. அதைக் கட்டினேன். என் சம்சாரம் கையில, காதுல, கழுத்துல இருக்கிற நகையைத் தவிர்த்து மத்ததெல்லாத்தையும் எடுத்துக்கொடுத்தா. அது ஒரு மூணு லட்சம் தேறித்து. அப்புறம் இப்ப நான் இருக்கற வீடு. கட்டிடத்துக்கு மதிப்பில்லைன்னாலும் மனைக்கு மதிப்பு உண்டே. இன்னி தேதில கிட்டத்தட்ட எழுபது தேறும். அதை கொலாட்டரலா கொடுக்கறேன்னு சொன்னேன்...”

“ம்ம்...”

“மொதல்ல ரிஜக்ட் ஆகி வந்திருத்து. அப்புறம் மேனேஜரே ஹெட் ஆபீசுக்குப் போய் பெரிய ஆளுங்ககிட்டலாம் பேசி ஒரு வழியா சேங்ஷன் வாங்கிட்டார்.”

“ம்ம்.”

“அதென்னவோ சொல்லுவாங்களே... டோபெல்லோ என்னவோ... அதுல என் மகனுக்கு நல்ல மார்க். இஞ்சினீயரிங் தேர்விலும் காலேஜ் பர்ஸ்ட். அதனால அவனுக்கு ஆரம்பத்துலயே உதவித் தொகையும் கிடைச்சிருக்கு. அங்க அவன் செலவைப் பார்த்துக்க அது உதவியா இருக்கும். இங்க ரெண்டு வருஷம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். படிப்பு முடிஞ்சு வேலைல சேர்ந்து ஒரே வருஷத்துல லோன் அடைச்சிருவேம்பான்னு மகன் சொல்லிட்டான். என்ன சரி தானே?”

“ஆமா... ஆமா... ரொம்ப சரி”

“வாய் வார்த்தையாகச் சொன்னாலும் சாரதி ரொம்பவே அகலக் கால் வைக்கிறானோ” என்று ஜகன்னாதனுக்குப் பட்டது. ஓரளவு நல்ல பதவியில் இருக்கும் அவரே மகனை படிக்க வெளிநாடு அனுப்பிவிட்டு இங்கு மாதா மாதம் பேங்குக்கு பணம் கட்டுவதற்குள் முழி பிதுங்கியிருக்கிறார். இப்போது மகன் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து கடனையெல்லாம் அடைத்து விட்டான் என்பது வேறு விஷயம். ஆனால் அவன் வேலையில் சேறும் வரை எத்தனை முறை பேங்க் மேனேஜரைப் பார்த்து பல் இளித்து... அசடு வழிந்து... பணம் கட்ட வாய்தா வாங்கி...

சாரதியைப் பற்றி நினைக்கவே அவருக்கு பயமாக இருந்தது. நிரந்தர வருமானம் கிடையாது. மனைவியின் சம்பளம் குடும்பம் நடத்துவதற்கே சரியாக இருக்கும். அதுவே போறாது. பிறகு எந்த தைரியத்தில்…..

சாரதி சக்திக்கு மீறி ஆசைப்பட்டு தகுதிக்கு அதிகமாக பறக்க நினைக்கிறான். விழுந்தால் அடி ரொம்பவே பலமாக இருக்கும் என்பதை ஏன் புரிந்துக்கொள்ள மாடேன் என்கிறான்.

ஜகன்னாதனின் மனது கிடந்து அடித்துக் கொண்டது.. ஆனால் சாரதி அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை..

மகனின் உத்தரவுப் படி தாம்பரத்திலிருக்கும் சொந்த வீட்டிலிருந்து மைலாபூரில் வாடகை வீட்டுக்கு ஜாகை மாறி ஜகன்னாதன் செட்டில் ஆகி விட்டார்.. அவருடைய உறவினர்கள் பலர் மைலாபூரை சுற்றி இருந்தது முக்கிய காரணம்.. அதோடு மைலாலாபூரிலிருந்து அண்ணா சாலையில் இருக்கும் அவருடைய அலுவலகம் போய் வருவதும் சுலபம்..

சொல்லப் போனால் மைலாபூரில் செட்டில் ஆன பிறகு.. அலுவலக நேரம் போக உறவினர்கள், கோவில், சபா கச்சேரி என்று அவர் பிஸியாகி விட சாரதியை அறவே மறந்து போனார்..

கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜகன்னாதனின் மகன் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக அவனே ஒரு பெண்ணைத் தேர்வு செய்து ஓக்கே சொல்ல.. உடனே கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார் ஜகன்னாதன்..

தாம்பரத்தில் தெரிந்தவர்களுக்குப் பத்திரிகை விநியோக்க வேண்டும் என்று பட்டியல் இட்ட போது அவருக்கு சாரதியின் நினைவு வந்தது.. அவன் முகவரி தெரியாது.. ஆனால் சன்னதித் தெருவில் அவனுடைய வீடு தெரியும்.. நேரில் போய் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தார்..

மறுவாரம் தாம்பரம் கிளம்பி தெரிந்தவர்களுக்கு பத்திரிகை விநியோகம் முடித்த பிறகு சன்னதித் தெருவுக்குள் நுழைந்த ஜகன்னாதனுக்கு அதிர்ச்சி..

சாரதியின் வீடு இருந்த இடம் காலி மனையாக இருந்தது..

ஏன்? ஏன்?

புரியாமல் விழித்தபடி நின்றவரை பக்கத்து வீட்டுக்காரர் அழைத்தார்..

”யாரு சார் வேணும்?”

“இங்க சாரதின்னு…”

“அவனா? காலி பண்ணிண்டு போயிட்டான்.. தலைக்கு மேல கடன்.. வீட்டை ஏலம் விட்டுட்டாங்க”

ஜகன்னாதனுக்கு அதிர்ச்சி..

அவர் அன்று பயந்தது போலவே நடந்து விட்டதே.. ஒரு வேளை “வேண்டாம்” என்று அன்றே அவனை எச்சரித்திருக்க வேண்டுமோ? இப்படி நினைக்கும் போதே அவருக்குள் ஒரு வித குற்ற உணர்ச்சி எழுந்தது..

பாவம் சாரதி..

சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டுக்கு ஜாகை மாறிய அவருக்கே புது வீடு வசதியாக இருந்தாலும் சில நாட்களுக்கு மனதில் ஒரு சஞ்சலம் இருந்ததென்னவோ உண்மை.. ஆனால் சாரதிக்கு இப்போது சொந்த வீடே இல்லாமல் போய் விட்டதே..

நிச்சயம் சாரதி நிலை குலைந்து போயிருப்பான்.. போக்கிடம் இல்லாமல் எங்கு அல்லாடுகிறானோ?

மகனின் கல்யாண சந்தோஷத்தில் இருந்த ஜகன்னாதனின் மனதில் இப்போது பெரும் பாரம்..

சன்னதித் தெரு குறுகலாக இருக்கும் என்பதால் காரை மெயின் ரோட்டில் நிறுத்தச் சொல்லியிருந்தார்..

தளர்ச்சியுடன் நடந்து மெயின் ரோடை அடைந்து காரில் ஏறப் போனவரை..

“அண்ணா”

குரல் கேட்டுத் திரும்பிய ஜகன்னாதனின் முகத்தில் ஆச்சர்யம்..

வழக்கமான சிரிப்புடன் சாரதி.. தள்ளு வண்டிக்குப் பின்னால்..

“சாரதி நீ.. என்னப்பா.. ஏன் இப்படி?...”

ஜகன்னாதன் முடிக்கும் முன் சாரதியே ஆரம்பித்தான்..

“எல்லாம் வழக்கமா நடக்கறது தான்.. வெளிநாட்டுல படிப்பு முடிச்சு வேலை கிடைச்ச உடனே என் மகன் அங்கயே ஒரு கல்யாணத்தையும் பண்ணிண்டு பெத்தவங்களைக் கழட்டி விட்டுட்டான்.. அந்த அதிர்ச்சில என் சம்சாரம் சீக்காகி படுத்துட்டா.. வேலைய விட வேண்டி வந்துருத்து.. பார்த்தேன்.. நேர பேங்க் மேனேஜரைப் பார்த்து நடந்ததைச் சொல்லி.. சார் என்னால இனிமே பணம் கட்ட முடியாது.. அதனால வீட்டை ஏலத்துக்கு விட்டிருங்கன்னு சொன்னேன்.. அவரும் ஹெட் ஆபீசுல சொல்லி முறைப்படி ஏலத்துக்கு ஏற்பாடு பண்ணி அவங்களுக்கு சேர வேண்டியதை எடுத்துக் கிட்டு மீதியை எங்கிட்டக் கொடுத்தாங்க.. குறைச்சலா தான் வந்தது.. ஆனா அப்பன்னு பார்த்து  என் சம்சாரத்தோட நிலமை ரொம்ப மோசமாகி பொழைப்பாளா மாட்டாளாங்கற மாதிரி ஆயிருத்து.. ஆனா நான் விடலை.. பிரைவேட் ஆஸ்பத்ரில சேர்த்தேன்.. அவளுடைய மருத்துவச் செலவுக்கே கையில வந்த பணம் முக்காவசியும் கரைஞ்சு போச்சு.. அதனால என்ன.. இப்ப அவ நல்லா இருக்கா.. அதானே எனக்கு வேணும்.. வர வர புரோகர் பிஸ்னஸ் சரியில்லை.. போட்டி பொறாமை அதிகமாயிருச்சு.. அதான் அதுக்கு தலை முழுகிட்டு இப்பத் தள்ளு வண்டில டிபன் கடை ஆரம்பிச்சுட்டேன்”

படபடவென்று ரொம்பவே சகஜமாகச் சொன்னான் சாரதி..

ஜகன்னாதனுக்கு தாங்கவில்லை..

“எப்படி சாரதி? இவ்வளவு நடந்திருக்கு.. ஆனா ஒண்ணுமே நடக்காத மாதிரி ரொம்ப சாதாரணமா சொல்றே..”

இதைக் கேட்டு சாரதி வழக்கம் போல் காவிப் பல் தெரிய சிரித்தான்..

“அண்ணா.. சின வயசுலேர்ந்தே நான் ஒரு விஷயத்துல இறங்கறேன்னா.. மொதல்ல அந்த விஷயத்துல நான் தோத்துப் போனா என்ன நடக்கும்னு தான் யோசிச்சுப் பார்ப்பேன்.. அதுக்கு மனசை தயாராக்கிப்பேன்.. ஒரு வேளை உண்மைலயே தோத்துப் போனா.. ஏற்கனவே அதை நான் யோசிச்சு வெச்சதுனால அந்தத் தோல்வி அவ்வளவா என்னை பாதிக்காது.. நாம எதிர்பார்த்தது தானே நடந்திருக்குன்னு சாதாரணமா எடுத்துண்டிருவேன்”

“… …”

“என் மகன் விஷயத்துல அகலக் கால் வெக்கும் போதே.. வழுக்கி விழ நிறைய சந்தர்ப்பம் இருக்குன்னு நன்னாப் புரிஞ்சுண்டு தான் வெச்சேன்.. அதான் உச்சத்துலேர்ந்து விழும் போது லேசா சிராய்ப்பு கூட ஏற்படலை.. என்னைப் பொறுத்தவரை எப்பவும் எதுக்கும் தயாரா இருந்துட்டா.. மனசுல சஞ்சலங்களுக்கோ வருத்தங்களுக்கோ இடமே கிடையாது.. இப்ப என் முழு கவனமும் இந்தத் தள்ளு வண்டிக் கடையை சின்ன மெஸ்ஸா மாத்தறதுல தான் இருக்கு.. ஒரு வேளை அது சரிப்பட்டு வரலைன்னா ஏமாத்தமடையாம வேற ஏதாவது பார்க்க வேண்டியது தான்”

ஜகன்னாதன் பிரமிப்புடன் சாரதியைப் பார்த்தார்..

அவர் கண்களுக்கு சாரதி பார்த்தசாரதியாகத் தான் தெரிந்தான்..

அவன் சொன்னது அவருக்கு கீதோபதேசமாகப் பட்டது.. பெற்றவர்கள் எல்லோரும் உணர வேண்டிய கீதோபதேசம்..

ஜகன்னாதன் மேலே எதுவும் பேசுவதற்குள்..

“ஒரு பிளேட் இட்லி கொடுங்க”

“தோசை ஒரு பிளேட்”

சாரதியின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com