விண்ணில் கரைந்த வில்லுப்பாட்டு

விண்ணில் கரைந்த வில்லுப்பாட்டு

Published on

அஞ்சலி

‘வில்’ என்றால் அர்ஜுனனும், ‘வில்லுப்பாட்டு’ என்றால் சுப்பு.ஆறுமுகமும் நம் நினைவுக்கு வருவார்கள். முதுமை காரணமாக தனது 95வது வயதில் அவர் காலமானார்.  அவருக்கு நெல்லைச் சீமை. அதனாலேயே அவரை சந்திப்பவர்களது சொந்த ஊர் திருநெல்வேலியாக  இருந்தால் அவர் முகத்தில் ஒரு 100 வாட்ஸ் பல்ப் வெளிச்சம் உடனே பளிச்சிடும்.  எக்ஸ்டிராவாக ஒரு ஒட்டுதல் வந்துவிடும்.  தூர்தர்ஷன் கோலோச்சிய காலத்தில் அவர்தான் வில்லுப்பாட்டு தனிக்காட்டுராஜா.

வில்லுப்பாட்டில் கதை சொல்கிறபோது, நடுவில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.  போகிற போக்கில், “தமிழில் “ஃ”  என்ற எழுத்து எது மாதிரி இருக்கு?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு,  இதற்கு,  ஒரு போர் வீரனாக இருந்தால் ‘கேடயம்’ போல இருக்கு” என்பான்;  முருக பக்தன் ‘முருகன், வள்ளி, தெய்வயானை’ போல இருக்கு என்பான். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ போல இருக்கு என்பான் ஓர் அரசியல்வாதி. ஒரு சாப்பாட்டுராமன் என்ன சொல்வான் தெரியுமா? “ஃ” பார்த்ததும் எனக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை ஞாபகம் வருது” என்பான்”  என்று முடிப்பார்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய வில்லுப்பாட்டுக் கலையை பிரபலமாக்கிய பெருமை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு உண்டு. அவரை வில்லிசை மற்றும் சினிமா மூலமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் கலைவாணர்தான். அவர்தான் தன் படத்துக்கு காமெடி வசனங்களை எழுதுவதற்காக திருநெல்வேலியில் இருந்த ஆறுமுகத்தை சென்னைக்கு அழைத்துக்கொண்டு வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். வில்லுப்பாட்டை மேலும் ஜனரஞ்சகமாக்கி,  “அரசின் நலத்திட்டங்களை  வில்லுப்பாட்டு வாயிலாக சாமானிய மக்களுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று நிரூபித்தவர் சுப்பு ஆறுமுகம்.

1960ல் “கருணைக் கடல் காஞ்சி காமாட்சி” என்ற தலைப்பில் பக்தி மணம் கமழ, தான் எழுதிய வில்லுப்பாட்டினை அரங்கேற்றினார்.  அமரர் கல்கி, மகாத்மா காந்தியின் சுய சரிதையை தமிழில் மொழி பெயர்த்து எழுதினார். அதன் அடிப்படையில் இவர் உருவாக்கிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சி தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் நடைபெற்றது. அது இவருக்கு பேரும், புகழும் பெற்றுத்தந்தது. 

சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டில், அவர் சொல்லும் உவமைகள் மிகவும் வித்தியாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும். உதாரணமாக, “உள்ளொன்று வைத்து, புரமொன்று பேசுவது எதுபோல?” என்று கேட்டுவிட்டு, “அழகான பால் பவுடர் டப்பாவில் அரப்புத்தூளைப் போட்டு வைப்பது போல” என்று பதில் சொல்வதை கேட்பவர்கள் ரசிக்காமல் இருக்க முடியாது.

“தம்பதிகள் எப்படி இருக்கவேண்டும்” என்பதற்கு இவர் தரும் விளக்கம்:

“திருக்குறளின் ஈரடிகளைப் போல. ஒரு வரி இல்லாவிட்டால்,  மற்றது பொருளற்றுப் போய்விடும்”

அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம்தான். பழைய விஷயங்கள் பலவற்றை சுவைப்படச்சொல்லுவார். என்.எஸ்.கே. உடன் அவருக்கு ஏராளமான  அனுபவங்கள் உண்டு.  அவர் சொன்ன ஒரு சம்பவம்:

”ஒரு முறை கலைவாணர் கல்கியின் அட்டையில் இடம்பெற்றார். அந்த கல்கி இதழ் வெளியான தினத்தன்று காலை சென்னையிலிருந்து சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் கலைவாணர். சென்னையிலிருந்து புறப்படும்போதே அன்று வெளியான கல்கி பத்திரிகை பிரதியை ஞாபகமாக எடுத்து வைத்துக் கொண்டார்.  கார் செங்கல்பட்டை அடைந்தபோது, காரை நிறுத்தி, ஒரு கல்கி பிரதியை வாங்கிக்கொண்டு வரச்சொன்னார்.

நான், “ஏற்கெனவே வாங்கிவிட்டீர்களே!” என்று சொன்னதும், “ என்னை அட்டையில் போட்டு கௌரவிச்சிருக்காங்க! இன்னொரு பிரதி வாங்கிட்டு வா!” என்று சொன்னார்.

நானும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன்.  கலைவாணருக்கு மிகுந்த சந்தோஷம். பயணம் தொடர்ந்தது. விழுப்புரத்தில், காரை நிறுத்தி,  மறுபடியும் கல்கி பிரதி ஒன்று வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். நானும் மறுபேச்சு பேசாமல் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து, அவர் முகத்தில் பூத்த மகிழ்ச்சியை ரசித்தேன்.

இப்படியே வழி நெடுக ஒவ்வொரு சிறு நகரத்திலும் காரை நிறுத்தியதும், நானே இறங்கிப் போய் , கல்கி பிரதிகளை வாங்கிக்கொண்டு கொடுக்கத் துவங்கினேன்.  நாங்கள் நாகர்கோவிலை அடைந்தபோது, காரில் பத்துப் பதினைந்து கல்கி பிரதிகள் சேர்ந்துவிட்டன. இதை நான் எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், “கல்கி அவர்களுக்கு, கலைவாணர் மீது எப்படிப்பட்ட ஒரு அபிமானம் இருந்தது என்பதையும், எழுத்துலக ஜாம்பவான் கல்கி மீதும், கல்கி பத்திரிகை மீதும் கலைவாணர் அப்படிப்பட்ட ஒரு மரியாதை கொண்டிருந்தார் என்பதையும் விளக்குவதற்காகத்தான்.”

 சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் காந்தி கதை எழுதியதற்குக்கூட ஒரு சுவையான பின்னணி உண்டு. கலைவாணர் காரில் பயணம் செய்கிறபோது, வழியில் கிராமங்களில் காரை நிறுத்தி பொது மக்களோடும், விளையாடிக்கொண்டிருக்கிற சிறுவர்களோடும் பேசுவது வழக்கம். அப்படி ஒரு ஊரில் காரை நிறுத்தியபோது, சிறுவர்களிடம், “உங்களுக்கெல்லாம் என்ன கதை தெரியும்?” என்று கேட்க, அவர்கள் ஏதேதோ சொன்னார்கள். கலைவாணர், “ உங்களில் யாருக்குமே காந்தி கதை தெரியாதா?” என்று வருத்தத்துடன் கேட்டுவிட்டு, மறுகணமே, என்னைப்பார்த்து, “நீ வில்லுப்பாட்டுல காந்தி கதையை எழுது! நான் அதை மேடையில சொல்லுறேன்!” என்றார்.

அதன்படி நான் காந்தி கதை எழுதி முடித்தேன். இதுபற்றி அறிந்த கல்கி அவர்கள், காந்தி கதையின் முதல் நிகழ்ச்சியை சேத்துப்பட்டு “கல்கி கார்டன்ஸ்ஸில்தான் நடத்த வேண்டும்” என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். அதன்படி கலைவாணர், ஒரு சுபயோக சுபதினத்தில் காந்தி கதையை ராஜாஜி,  பேராசிரியர் கல்கி, பெரியவர் சதாசிவம், எம்.எஸ்.அம்மா ஆகியோர் முன்னிலையில் அமோகமாக அரங்கேற்றினார். அடுத்தவாரம், கலைவாணரது காந்தி கதையைப் பாராட்டி கல்கியில் ஒரு உப தலையங்கம் எழுதி கலைவாணரை கௌரவித்தார்.

காஞ்சி மகா பெரியவரின் அணுக்கத் தொண்டர் சுப்பு ஆறுமுகம்.  அவர் காஞ்சி மகானின்  வாழ்க்கையை வில்லுப்பாட்டில் சொல்லி இருக்கிறார். அதில் அவர் சொல்லுவார், “நான்  அந்த மகானின் வாழ்க்கையை வில்லுப்பாட்டாக சொல்வது  எப்படி இருக்கிறது தெரியுமா? காமாட்சி அம்மன் கோவில் கோபுரம் எவ்வளவு உயரம் என்று பார்க்க ஒரு எறும்பு புறப்பட்டது மாதிரிதான்!”

அவரை சந்திக்கும்போதெல்லாம் பரமாச்சாரியார் பற்றி நிறைய அனுபவங்களை நெகிழ்ச்சியோடு சொல்லக் கேட்ட நான், “ஐயா! உங்களோட பரமாச்சாரியார் அனுபவங்கள் எல்லாம் கல்கியில் ஒரு தொடராக எழுதலாமே?” எனக் கேட்டபோது, “ ஓ! பேஷாக செய்யலாமே!” என்றார்.

அதன் பிறகு அவரோடு பேசி எழுதிய தொடர்தான் “அருளே! அறிவே! அமுதே!”

அதில் இடம்பெற்ற ஒவ்வொரு அனுபவத்தையும் சொல்கிறபோது பலமுறை அவர் நெகிழ்ந்திருக்கிறார்; ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்; மெய் சிலிர்த்திருக்கிறார். மானசீகமாக பெரியவரை நினைத்து கைகூப்பி தொழுதிருக்கிறார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com