ராகுல் காந்தியின் நடைப்பயணம் பலனளிக்குமா?

கவர் ஸ்டோரி
ராகுல் காந்தியின் நடைப்பயணம் பலனளிக்குமா?
Published on

ஆதித்யா 

டந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டபடி, 'பாரத் ஜோடோ யாத்திரையை' கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை மாலையில் தொடங்கினார்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், 150 நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தமது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின்  கன்னியாகுமரி சென்று அங்கிருந்து  பயணத்தை தொடங்கினார்.

பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் அளித்து தொடங்கி வைத்தார். தேசியக் கொடியுடன் கடற்கரை சாலையில் தொண்டர்களுடன் ராகுல் காந்தி  மாலை 5 மணியளவில் 'இந்திய ஒற்றுமைப் பயணத்தை' ஆரம்பித்தார்.

ஏன் இந்த நடைப் பயணம் ?

"இந்த நடைபயணத்தின் பிரதான நோக்கமே இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாப்பதுதான். 5,000 ஆண்டுகளாக இந்திய சமூகம் ஏற்றத்தாழ்வுகளால் நிரப்பப்பட்டது. இந்த ஏற்றத்தாழ்வுகளை சனாதன தர்மம் 'சரி' என்கிறது. அன்றைய சமூகம் அதை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களினால் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இப்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.  இந்த சனாதன தர்மத்தை வளர்த்தெடுக்கிறது. இந்த தவறான சனாதன நம்பிக்கையை தகர்க்கவே ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை துவக்கியிருக்கிறார். எனவே, ராகுல் மேற்கொண்டிருக்கும் இந்த நடைப்பயணம் என்பது புரட்சிகரமான,  மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடியது" என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ். அழகிரி.

ஆனால்,  இந்த நடைப்பயணத்தின்  முக்கியக் காரணம்  2924 தேர்தலுக்குள்  துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிதான்.  இந்த நீண்ட பயணத்தை கட்சி ரீதியாக நடத்தினால் கூட்டணி கட்சிகள் இதில் பங்கேற்க முடியாது என்பதால், “இது எங்கள் கட்சி பேரணி இல்லை; ஒற்றுமையை வலியுறுத்தும் பயணம். நடைப்பயணத்தில் கட்சி கொடி கை சின்னம் பயன்படுத்தமாட்டாது” என அறிவித்திருக்கிறார்கள்.

இதன் முதல் அடையாளம் தான் தி.மு.க. தலைவர் தேசிய கொடியை கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.  தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கூட  அவர் பங்கேற்கவில்லை.

மற்றொரு காரணம் இந்திய அரசியலில் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடத்தப்பட்ட பெரும்பாலான யாத்திரைகள், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் நடத்தப் பட்டவை. பாரதிய ஜனதா கட்சி 1990களில் நடத்திய “ரத யாத்திரை” சோம்நாத்தில் துவங்கி அயோத்தியில் நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.  அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க. வலுப்பெற்றதற்கு இந்த ரத யாத்திரையும் ஒரு காரணம்.  வேறு பல கட்சிகளும் பல யாத்திரைகளையும் நீண்ட நெடும்பயணங்களையும் நடத்தி தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில்தான் இந்தப்பயணமும்.

"இது அரசியல் யாத்திரை அல்ல. நாட்டை ஒற்றுமையாக்கும் யாத்திரை. எப்படி இருந்த இந்தியாவை இப்படி ஆக்கிவிட்டார்களே என்று மக்களிடம் சுட்டிக்காட்டும் யாத்திரை" என்று சில காங்கிரஸ் தலைவர்கள் சொன்னாலும் உண்மை நிலை கட்சியை வலுப்படுத்துவது என்பதுதான்.

கட்சி தேர்தலுக்கு முன் ஏன் இந்த நடைப்பயணம் ?

நீண்ட இடைவெளிக்கு பின்னர்  காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அந்தத் தேர்தலில் ராகுல் தலைவரான பின்னர் இப்படி ஒரு பயணம் அறிவிக்கப்பட்டு தொடங்கியிருந்தால் கட்சிக்காரர்களிடம் ஒரு எழுச்சி ஏற்படும்  என்பது சில காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம். ஆனால்,   கடந்த பொதுத்  தேர்தலில் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று தன் கட்சி தலைவர்  பதவியை ராஜினாமா செய்த ராகுலின் எண்ணம் வேறாக இருக்கிறது.  இதுவரை எந்த கட்சியும் முன்னெடுக்காத பல மாநிலங்கள் தழுவிய நீண்ட பயணத்துக்கு பின் காங்கிரஸ் கட்சியில் தனக்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகள் குறையும். வெளியேறிய தலைவர்களைத் தவிர மற்றவர்களின் கண்ணோட்டமும் மாறும்  என்று கருதுகிறார். அந்தப் பின்னணியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை  ஏற்பது நல்லது என நினைக்கிறார். இதை அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் தனது நம்பிக்கைக்குரிய  கட்சிப் பிரமுகர்களிடம் விவாதித்திருக்கிறார்.

இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு தரப்பினரின் மனநிலையைப் புரிந்துகொள்வதுதான் ராகுல் காந்தியின் நோக்கமாக இருக்கக்கூடும். இந்தப் பயணத்திற்கு முன்னேற்பாடாகவும் பல்வேறு தரப்பினரின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் விதத்திலும் 150க்கும் மேற்பட்ட சிவில் குழுவினரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியிருக்கிறார்.பல தரப்பினரையும் சந்திப்பதோடு, அவர்களது பார்வைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்  இந்த யாத்திரை, “மக்கள் மனதை புரிந்துகொள்ளவும் மக்கள் தன்னைப்புரிந்து கொள்ளவும்  உதவும்” என்று ராகுல் நம்புகிறார்.

தமிழ் நாட்டில் தொடங்கிய பயணம் எப்படியிருக்கிறது?

இந்த பயணத்தை தமிழ் நாட்டில் தொடங்க வேன்டும் என்ற ஐடியா ராகுலினுடையது. காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இருக்கும் தி.மு.க.வின் பலமும்  ஒரு காரணம். மேலும் இந்த உறவின் அடிப்படையில் இப்போது இருப்பதைவிட அதிக அளவில் காங்கிரஸ் உறுப்பினர்கள்  நாடாளுமன்றத்துக்கு செல்ல உதவும் என்பது அவர் கணிப்பு.

“பிரமிப்பூட்டும் பேரணி, பெரிய அளவில் கட்சி தொண்டர்களின் கூட்டம்” என்ற ஆர்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப் பயணம் இப்போது கேரளாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திட்டமிட்டபடி இந்தப் பயணம் தொடர்ந்து முடிந்தால். இந்திய அரசியல் தலைவர்களில்  ராகுல் புதிய சாதனையைப் படைப்பார்.

அது எந்த அளவுக்கு அவரது கட்சிக்கு பலனளிப்போகிறது  என்பதைக் காண இந்திய அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com