

ஹாலிவுட் படங்களில் வருவது போல, கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பல்களையும், அதில் இருக்கும் தங்கக் குவியல்களையும் தேடிச் செல்லும் பயணம் எப்போதுமே மெய்சிலிர்க்க வைக்கும். அப்படியான ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும்? சுமார் மூன்று நூற்றாண்டுகளாகக் கடல் தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த உலகின் ஆகப்பெரிய பொக்கிஷக் கப்பலான 'சான் ஜோஸ்', தற்போது நவீன அறிவியலின் உதவியால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த இருண்ட நாள்!
1708-ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் கடல் வழியே ஆதிக்கம் செலுத்தி வந்த காலம். தென் அமெரிக்காவின் சுரங்கங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, மரகதக் கற்கள் எனப் பெரும் செல்வத்தை ஏற்றிக்கொண்டு, 'சான் ஜோஸ்' (San José) என்ற பிரம்மாண்ட கப்பல் ஸ்பெயின் நாட்டை நோக்கிப் பயணித்தது. ஆனால், விதி வேறு வடிவில் காத்திருந்தது.
கரீபியன் கடற்பகுதியில் வைத்துப் பிரிட்டிஷ் கடற்படையினருக்கும் ஸ்பெயின் நாட்டினருக்கும் இடையே நடந்த பயங்கர போரில், சான் ஜோஸ் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீயினால் கப்பல் வெடித்துச் சிதறி, சுமார் 600 மாலுமிகளுடன் கடலின் ஆழமான இருளில் மூழ்கிப்போனது.
ரோபோட்கள் நிகழ்த்திய அதிசயம்!
சுமார் 300 ஆண்டுகளாக இந்தக் கப்பல் எங்கே மூழ்கியது என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், கொலம்பியக் கடற்கரையிலிருந்து வெகு தொலைவில், சுமார் 2,000 அடி ஆழத்தில் இந்தக் கப்பலின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இவ்வளவு ஆழத்தில், நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆழ்கடல் ரோபோக்கள் அனுப்பப்பட்டன.
இந்த ரோபோக்கள் அனுப்பிய மிகத் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கப்பல் அடையாளம் காணப்பட்டது. குறிப்பாக, அங்குச் சிதறிக் கிடந்த வெண்கலப் பீரங்கிகள், பீங்கான் பாத்திரங்கள் மற்றும் 'கோப்ஸ்' (Cobs) எனப்படும் பழமையான தங்க நாணயங்களில் உள்ள சிலுவை சின்னங்கள், இது 'சான் ஜோஸ்' கப்பல் தான் என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தின.
யாருக்குச் சொந்தம்?
இந்தக் கப்பலில் உள்ள பொக்கிஷங்களின் இன்றைய மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மலைக்க வைக்கும் தொகையைக் கேட்டதும், "புதையல் யாருக்குச் சொந்தம்?" என்ற சர்ச்சை சர்வதேச அளவில் வெடித்துள்ளது.
"கப்பல் எங்களுடையது, எங்கள் நாட்டுக் கொடியுடன் பயணித்தது, அதனால் தங்கம் எங்களுக்கே" என்று ஸ்பெயின் வாதிடுகிறது. மறுபுறம், "எங்கள் கடல் எல்லைக்குள் கண்டெடுக்கப்பட்டதால் இது கொலம்பியா நாட்டுச் சொத்து" என்று அந்நாடு உரிமை கோருகிறது. இதற்கிடையில், பொலிவியா நாட்டு மக்களோ, "எங்கள் முன்னோர்களைக் கட்டாயப்படுத்திச் சுரங்கங்களில் வேலை வாங்கிக் கொள்ளையடிக்கப்பட்ட செல்வம் இது, எனவே இது எங்களுக்குத்தான் சேர வேண்டும்" என்கிறார்கள்.
சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, யுனெஸ்கோ அமைப்பு இதை வணிக ரீதியாகப் பார்க்காமல், மனித குலத்தின் வரலாற்றுச்ச் சின்னமாகக் காக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொலம்பியா தற்போது இந்த இடத்தைப் பரம ரகசியமாகப் பாதுகாத்து வருகிறது.