நோபல் பரிசு 2025 – ஒரு பார்வை... 1.1 மில்லியன் டாலர் யார் யாருக்கு?
நோபல் பரிசுகள் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளில் சாதனைகளைப் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளாகும். இந்த விருதில், பதக்கம், தனிப்பட்ட டிப்ளமா மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனார் (சுமார் 1,168,783 அமெரிக்க டாலர்) அடங்கும். ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளாதார அறிவியல் ஆகியவற்றிற்கான விருது பெறுபவர்களைத் தேர்வு செய்யும். மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரை கரோலின்ஸ்கா நிறுவனம் முடிவு செய்யும். இலக்கியத்திற்கான விருதின் பொறுப்பு ஸ்வீடிஷ் அகாடமியைச் சேர்ந்தது. நார்வே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஐவர் குழு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவரை முடிவு செய்யும்.
ஸ்வீடிஷ் தொழிலதிபர் ஆல்பிரட் நோபல், டைனமைட்டைக் கண்டு பிடித்தார். 1896ஆம் ஆண்டு அவர் இறந்த போது, நோபல் பரிசுகள் அளிப்பதற்காக, 31 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனார் விட்டுச் சென்றார். இன்று அதன் மதிப்பு 2.2 பில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனார் (233 மில்லியன் அமெரிக்க டாலர்). இந்த விருதுகள் 1901 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறுபவர்கள் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு, விருது வழங்கும் விழா, நோபல் இறந்த தினமான டிசம்பர் 10 அன்று நடை பெறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Prize 2025) நார்வேயின் ஆஸ்லோவில் வழங்கப்படுக்கிறது. மற்ற நோபல் விருதுகள் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அக்டோபர் 6ஆம் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. விருதை வென்றவர்கள் மேரி பிரன்கோவ் 64 வயது, இன்ஸ்டிடியூட் ஆஃப் சிஸ்டம்ஸ் பையாலஜி, சியாட்டில், பிரெட் ராம்ஸ்டெல், வயது 65, சோனோமா பையோதெராப்டிக்ஸ், சான் பிரான்சிஸ்கோ, ஷிமோன் சகாகுச்சி, 74 வயது, ஒசாகா யுனிவர்சிடி, ஜப்பான். உடலின் சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அது நமது சொந்த உறுப்புக்களைத் தாக்கக்கூடும். இந்த நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு, குவாண்டம் மெகானிகல் சுரங்கப்பாதை குறித்த ஆராய்ச்சிக்காக மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி சிறந்த செல்போன் மற்றும் அதி வேகமான கணினிகளுக்கான அடித்தளத்தை உருவாக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விருதினைப் பெற்றவர்கள் ஜான் கிளார்க், வயது 83, கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி; மைக்கேல் எச்.டெவோரெட், வயது 72, கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டாபார்பரா; ஜான் எம்.மார்டினிஸ், வயது 67, கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டாபார்பரா ஆகியோர். இந்த விருது அக்டோபர் 7ஆம் தேதி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு, அக்டோபர் 8 புதன்கிழமை, ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் அறிவிக்கப்பட்டது. அவர்கள் சுசுமு கிடகாவா, வயது 74, கியோட்டோ பல்கலைக் கழகம், ஜப்பான்; ரிச்சர்ட் ராப்சன், வயது 88, மெல்போர்ன் பல்கலைக்கழகம், உமர் எம்.யாகி, வயது 60, கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி, ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர். இந்த விஞ்ஞானிகள் புதிய மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த கட்டுமானங்களில், உலோக அயனிகள் கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளால் இணைக்கப்பட்டு உள்ளன. இவை எதிர்காலத்தில் பாலைவனக் காற்றிலிருந்து நீரைப் பிரித்தெடுக்க, கார்பன் டை ஆக்ஸைடை சேமிக்க, நச்சு வாயுக்களை சேகரிக்க, வேதியல் எதிர்வினைகளை ஊக்குவிக்கப் பயன்படும் என்று நம்பப்படுகிறது.
இலக்கியத்திற்கான நோபல் விருது, ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய், வயது 71, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது அக்டோபர் 9 வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. "அவரது படைப்புகள் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில் கலையின் சக்தியை நிலை நிறுத்துகிறது.
அவரது சர்ரியல் மற்றும் அராஜக நாவல்கள் இருண்ட உலகக் கண்ணோட்டத்தையும், மரண நகைச்சுவையையும் இணைக்கின்றன” என்பது இந்தப் பரிசுக்கான நீதிபதிகளின் மதிப்பு. இந்த ஆசிரியர் 20க்கும் மேற்பட்ட படைப்புகளை அளித்துள்ளார். சூதாட்டத்திற்கு அடிமையான பிரபுவின் கதையான “பரோன் வென்கெய்மின் வீடு திரும்புதல்” மற்றும் பயண சர்க்கஸ் மற்றும் திமிங்கலத்தை மையமாகக் கொண்டு எழுதிய “தி மெலஞ்சலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்” ஆகியவை அவரது சிறந்த கதைகளாகப் போற்றப்படுகின்றன. இவருடைய கதைகளில் முற்றுப்புள்ளி இல்லாமல் ஒரு வாக்கியம் ஒரு பத்தி வரை நீளும் என்பது சிறப்பு அம்சம்.
அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் வெனிசூலா நாட்டைச் சேர்ந்த மரியா கோரினா மசாடோ, வயது 58. அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த விருதிற்கு 244 நபர்களும், 94 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டன. வெனிசூலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகவும், சர்வாதிகார ஆட்சியிலிருந்து, ஜனநாயக ஆட்சிக்குத் திரும்புவதற்கு அவர் மேற்கொண்டுள்ள சமாதான போராட்டத்திற்காகவும் அவர் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ஜனாபதித் தேர்தலில் அவர் போட்டியிட முடிவு செய்தார். ஆனால், அரசாங்கம் அவரை போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்தது. தற்போது மசாடோ தலைமறைவாக இருக்கிறார்.
பொருளாதர அறிவியலுக்கான நோபல் பரிசு மூன்று நபர்களுக்குப் பிரித்து வழங்குவதாக, அக்டோபர் 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” இந்த விருது. இதில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயல் மோகிர், வயது 79, “தொழில் நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான முன் நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக” பரிசுத் தொகையில் பாதியைப் பெறுகிறார். மீதி பரிசுத் தொகை பிரான்சின் பிலிப் அகியோன், வயது 69 அவர்களுக்கும் கனடாவின் பீட்டர் ஹோவிட், வயது 79 அவர்களுக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. “படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சி என்ற கோட்பாட்டிற்காக” இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இந்த வருடம் நோபல் விருது பெற்றவர்களில் ஐவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். இருவர் ஜப்பானிய நாடு. மற்ற ஏழு நபர்கள் முறையே பிரிட்டன், ஜோர்டான், ஹங்கேரி, வெனிசூலா, நெதர்லாந்த், ப்ரான்ஸ், மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

