நோபல் பரிசுகள் ஆல்ஃப்ரட் நோபல் நினைவாக உலக அளவில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் புரியப்பட்ட சாதனைகளுக்காக வழங்கப்படுகின்றன. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு ஒரு பதக்கம், ஒரு சான்றிதழ், கூடவே பரிசுத்தொகையாக பணமும் வழங்கப்படும். இந்தப் பரிசுத்தொகை சுவீடனின் பணமான ஸ்வீடிஷ் க்ரோனாவில் வழங்கப்படும்.
ஒவ்வொரு துறைக்கும் முழு பரிசுத்தொகை 1.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனாக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்) வழங்கப்படுகிறது. ஆம், ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் 9 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அறிவியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அதிகபட்சம் மூன்று பேருக்கு பகிர்ந்து கொடுக்கப்படலாம். இலக்கியத்திற்கு பெரும்பாலும் ஒருவருக்கே முழு பரிசும் வழங்கப்படுகிறது.
நோபல் பரிசுத் தொகை பணமாக மட்டுமே தரப்படும். நோபல் பரிசு ஒருவருக்கு மட்டும் என்றால் முழுத் தொகையும் அவருக்கே. ஒரே துறைக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டால். அப்போது பரிசுத் தொகையை சரி பாதியாக பிரித்து வழங்குவர்.
சில நேரங்களில் ஒரே துறைக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது மொத்த பணத்தையும் இரண்டு பங்காகப் பிரித்து, அதில் ஒரு பங்கை மிக முக்கியமான கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும், மீதி உள்ள மற்றொரு பங்கை இரண்டாகப் பிரித்து மீதமுள்ள இருவருக்கும் வழங்கப்படும். யாருக்கு எவ்வளவு பணம் என்பதை நோபல் அறக்கட்டளை முடிவு செய்யும்.
நோபல் பரிசைப் பெற்றவருக்கு பத்திரம் எனும் ‘டிப்ளமோ’ வழங்கப்படும். ஒவ்வொரு பாராட்டு பத்திரமும் சுவீடிஷ் மற்றும் நார்வே மொழியில் அச்சிட்டு இருப்பார்கள். பத்திரத்தைப் பெறுபவரின் பெயரும், அவர் செய்த சாதனையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இது உலகின் தலைசிறந்த கலைஞர்களால் உருவாக்கப்படுகிறது.
நோபல் பரிசுப் பதக்கத்தில் என்ன இருக்கும்? நோபல் பரிசுடன் வரும் பதக்கம் தங்கத்தால் செய்யப்பட்டது. 6.6 செ.மீ விட்டம் கொண்ட இந்தப் பதக்கம், ஆரம்பத்தில் சுமார் 200 கிராம் எடை கொண்டிருந்தது. 1980ம் ஆண்டு வரை இந்தப் பதக்கங்கள் 23 காரட் தங்கத்தால் செய்யப்பட்டன. அதன்பின் 18 காரட் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தால் செய்யப்படுகின்றன. அவற்றின் எடை 175 கிராமாகக் குறைக்கப்பட்டது.
இந்தப் பதக்கங்களில் ஒருபுறம் ஆல்ஃப்ரட் நோபலின் முகம் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபுறம், பரிசுக்கான துறைக்கேற்ப ஒரு உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான பரிசுப் பதக்கங்களில், ஒரு பெண் தெய்வமாக உருவகிக்கப்பட்டிருக்கும். இயற்கையின் முகத்திரையை, மற்றொரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட அறிவியல் திறப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
மருத்துவத்திற்கான பரிசுப் பதக்கத்தில் ஒரு பெண், தாகமெடுத்த ஒரு சிறுமிக்காக நீர் பிடிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இலக்கியத்துக்கான பரிசுப் பதக்கத்தில், ஒரு லாரல் மரத்தின் அடியில் (மருத மரம்) அமர்ந்திருக்கும் இளைஞன், ‘ம்யூஸ்’ என்று அழைக்கப்படும் பெண் கடவுள் பாடும் வரிகளைத் தனது ஏட்டில் எழுதுவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த மூன்று பதக்கங்களிலும், ‘தான் புதிதாகக் கண்டடைந்த மேதைமையால் பூமியில் வாழ்க்கையை மேம்படுத்தியவர்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.
அமைதிக்கான பரிசுப் பதக்கத்தில், மூன்று ஆண்கள் சகோதரர்களைப் போன்று அரவணைத்துக் கொண்டு நிற்பதுபோன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதில் ‘மனித அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். பொருளாதாரத்துக்கான பதக்கத்தில், ஒரு மகுடமும் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தப் பதக்கங்களில் பரிசு பெறுபவரது பெயரும் ,உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
1901ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில், அமெரிக்கா அதிகபட்ச நோபல் பரிசுகளின் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. மொத்தம் 411 பரிசு பதக்கங்களைப் பெற்றுள்ளது . அதனைத் தொடர்ந்து, யுனைடெட் கிங்டம் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளது. 139 பதக்கங்கள். மூன்றாவது இடத்தை ஜெர்மனி பெற்றுள்ளது 113 பதக்கங்கள்.