
பழந்தமிழ் இலக்கியங்களில் யாழ், கின்னரம், குழல், முழவு, சங்கு, கிணை, துடி போன்ற பல இசைக்கருவிகள் (Musical instruments) குறிப்பிடப்பட்டுள்ளன. இசைக்கருவிகள் ஒலி எப்படி உருவாகிறது என்பதைப் பொறுத்து முக்கியமாக நரம்புக்கருவிகள் (தந்தி வாத்தியங்கள்), துளைக்கருவிகள் (காற்று வாத்தியங்கள்), தோற்கருவிகள் (தாள வாத்தியங்கள்) மற்றும் கனக்கருவிகள் (கஞ்சக் கருவிகள்) என 4 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
1) நரம்புக் கருவிகள்(தந்தி வாத்தியங்கள்):
நரம்புக் கருவிகள் என்பது ஒரு கலைஞர் இசைக்கும் பொழுது அல்லது ஏதேனும் ஒரு வகையில் சரங்கள் அல்லது நரம்புகள் அதிர்வுறும்போது ஒலியை உருவாக்கும் இசைக்கருவிகளாகும். நரம்புகள் அல்லது தந்திகளில் ஏற்படும் அதிர்வுகளால் ஒலி உண்டாகும் கருவிகள் - யாழ், தம்புரா, வீணை, வயலின், கிதார், கோட்டு வாத்தியம்,
நரம்புக் கருவிகளில் இசை எழுப்ப பல வழிகள் உள்ளன. விரல்களால் தட்டுதல், வில் போன்றக் கருவியை பயன்படுத்தி சரங்களை தேய்த்து இசைப்பது, மரச் சுத்தியல் கொண்டு சரங்களை அடித்து இசையெழுப்புவது என பல வழிகள் உள்ளன.
2) துளைக்கருவிகள் (காற்றுக் கருவிகள்):
துளைக்கருவிகள் என்பவை காற்று துளைகள் வழியாக செலுத்தப்பட்டு ஓசையை உருவாக்கும் இசைக்கருவிகளாகும். இவை மூங்கில் மரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டு புல்லாங்குழல், நாதஸ்வரம், சங்கு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. காற்று பாய்வதால் ஏற்படும் அதிர்வுகளால் ஒலி உண்டாகும் கருவிகள். புல்லாங்குழல், நாதஸ்வரம், சங்கு, தூம்பு, எக்காளம்.
எக்காளம் என்பது காற்று மூலம் ஒலி எழுப்பும் இசைக்கருவி. இது பொதுவாக பித்தளையால் செய்யப்பட்ட, ஒரு முனையில் வாய் வைத்து ஊதும் பகுதியும், மறுமுனையில் மணி வடிவமும் கொண்ட ஒரு நீண்ட குழாயாகும். இது சமய சடங்குகள், வழிபாட்டு ஊர்வலங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும்.
3) தோற்கருவிகள் (கொட்டு வாத்தியங்கள்):
தோல் இசைக்கருவிகள் (Musical instruments) என்பவை தோலால் மூடப்பட்டிருக்கும். தோலால் போர்த்தப்பட்ட, தாளத்தை இசைக்கும் இசைக்கருவிகளாகும். இவை மரத்தால் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட உருளை வடிவ உடலைக் கொண்டு, அதன் திறந்த பகுதியில் இழுத்துக் கட்டப்பட்ட தோல்களைக் கொண்டிருக்கும். அடித்து ஒலி எழுப்பும் இந்த இசைக் கருவிகள் மிருதங்கம், உடுக்கை, தவில், பம்பை போன்றவை. முரசு பண்டைய காலத்திலிருந்து செய்தி அறிவிக்க, போர்ப்பறையாக, இறைவழிபாட்டிற்கு மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகளாகும்.
தோலினால் செய்யப்பட்டு ஒலி உண்டாக்கும் கருவிகள். உறுமி, தவில், பறை, முரசு, மிருதங்கம், உடுக்கை.
4) கனக்கருவிகள் (கஞ்சக் கருவிகள்):
கனக்கருவிகள் எனப்படும் கஞ்சக் கருவிகள் வெண்கலம் அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட மணி, சேகண்டி, ஜால்ரா போன்ற இசைக்கருவிகளை (Musical instruments) குறிக்கிறது. இவற்றை நுணுக்கமாக இசைக்க வேண்டும். கஞ்சம் என்றால் வெண்கலம் என்று பொருள். தூய வெண்கலத்தால் தயாரிக்கப்படும் கஞ்சக் கருவிகளை தகுந்த இலக்கண வரம்பறிந்து மிக நுணுக்கமாக இசைக்க வேண்டும். கருவியின் உடலே அதிர்வுற்று ஒலி எழுப்பும் கருவிகள். ஜால்ரா, கஞ்சிரா, மணி.