இந்தியாவில் ஏராளமான கோவில்கள் இருப்பதை நாம் அறிவோம். இது இந்தியாவின் கலாச்சாரத்தையும், ஆன்மீகத் தேடலை உலகுக்கு பறைசாற்றும் சான்றாக அமைந்திருக்கிறது. இத்தகைய தனித்துவமான கோவில்கள் இந்தியர்களை மட்டுமில்லாமல், வெளிநாட்டினரையும் கோவில்களை நோக்கி ஈர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய பண்டைய காலத்து கலாச்சாரத்தை உலகுக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் 5 குடைவரை கோவில்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த அஜந்தா குகைகள் புத்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை கொண்டிருக்கிறது. இங்கே 30 குகை நினைவு சின்னங்கள் உள்ளன. இந்தியாவின் கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அஜந்தா குகை சிற்பங்களும், ஓவியங்களும் இருக்கின்றன. இந்த அற்புதமான குகையை காண ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அஜந்தா குகை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவினுள் அமைந்துள்ளது. பல பாறை சிற்பங்கள் மற்றும் குகைகளை உள்ளடக்கியதாக இந்த கான்கேரி குகை உள்ளது. பவுத்தர்களின் புடைப்பு சிற்பம் மற்றும் ஓவியங்களை கொண்டிருக்கிறது. கி.மு முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை வரையிலான காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. கான்கேரி என்பது சமஸ்கிருதத்தில் கிருஷ்ணகிரி என்று பொருள். 'கிருஷ்ணா' என்றால் கருப்பு, 'கிரி' என்றால் மலை என்று பொருள்படும். கான்கேரி மலை 'கருப்பு மலை' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவில் இமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. வடஇந்தியாவில் அமைந்திருக்கும் இக்கோவில் இமயமலை பிரமிட், இமாச்சத்தின் எல்லோரா என்றும் அழைக்கப்படுகிறது. இது 15 ஒற்றைக்கல் பாறை சிற்பங்களை உள்ளடக்கி உள்ளது. இங்குள்ள அனைத்து சிற்பங்களும் இந்தோ ஆரிய கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் சிவன், விஷ்ணு, தேவி ஆகிய மூவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் அருகில் மஸ்ரூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கோவிலின் பிம்பம் அழகாக தெரியும். அதைப்பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
அமர்நாத் குகைக்கோவில் காஷ்மீரில் சுமார் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத்தலமாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கம் பக்தர்களை ஆச்சர்யப்படுத்துகிறது. இவ்விடத்தில் தான் சிவபெருமான் பார்வதிதேவிக்கு வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பின் ரகசியத்தை போதித்தார் என்று நம்பப்படுகிறது. 11ஆம் நூற்றாண்டில் 'சூரியமதி' என்ற அரசி இக்கோவிலுக்கு சூலம் மற்றும் இதர புனித சின்னங்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
கர்நாடக வடக்குப்பகுதியில் இந்த பதாமி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவில் ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கிய ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. இக்குகை கோவில் நான்கு குகைகளைக் கொண்டது. அவை இந்து மற்றும் சமணக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு குகையில் சிவபெருமான், அர்த்தநாதீசுவரர், நடராஜர் சிற்பங்கள் உள்ளன. இன்னொரு குகையில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. பதாமி குகை 'அகத்தியர் ஏரி' என்ற செயற்கை ஏரியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.