
வரலாற்றை பொறுத்த வரை எந்த நாடாக இருந்தாலும் நாட்டை ஆண்டதில் ராணிகளை விட ராஜாக்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். ஆனாலும் உலக அளவில் ஒரு சில ராணிகள் தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியலின் வளர்ச்சி மற்றும் வடிவமைப்பில் பெரும் செல்வாக்கை செலுத்தி நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.
அவர்கள், தங்கள் நாடுகளை வடிவமைத்ததோடு மட்டுமல்லாமல், தங்களுடைய அரசாங்கத்தின் உள் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கை அளித்திருக்கிறார்கள். ஒரு சில ராணிகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆட்சி செய்த போதிலும் அவர்களுடைய அடையாளத்தையும் தலைமைதுவத்தையும் முன் உதாரணமாக வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
சில ராணிகள் அவர்களுடைய நீண்ட ஆட்சிக்காலத்தில், போர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்களுக்கு மத்தியில், மிகவும் சிக்கலான அரசியல் சூழல்களைக் கடந்து சென்று அவர்களுடைய மீள்தன்மையையும் மற்றும் ஞானத்தையும் உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு, உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த 5 ராணிகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1952 முதல் 2022 வரை ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணி அவர்கள், பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னராக திகழ்கிறார். இவர் 70 ஆண்டுகள் பதவி வகித்தார். இவருடைய ஆட்சியில் சமூகம், அரசியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கடுமையான மாற்றங்களைக் கண்டது. இவர் தன்னுடைய விசுவாசத்திற்கும், உறுதிக்கும் பெயர் பெற்றவர்.
1837 முதல் 1901 வரை ஆட்சி செய்த விக்டோரியா மகாராணி அவர்கள், பிரிட்டிஷ் பேரரசு அதன் உச்சத்தில் இருந்த காலத்தில் 63 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் ஆண்டுகள் விக்டோரியன் யுகம் என்று குறிப்பிடப்படுகின்றன. மேலும் இவருடைய ஆட்சி காலம், தொழில்மயமாக்கல், கலாச்சார வளர்ச்சி மற்றும் பிரிட்டிஷ் பேரரசின் உலகளாவிய விரிவாக்கம் ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுகிறது.
நெதர்லாந்தின் ராணியான வில்ஹெல்மினா அவர்கள், 1890 முதல் 1948 வரை 58 ஆண்டுகள் ஆட்சி செய்தார் மற்றும் இரண்டு உலகப் போர்களிலும் தனது நாட்டை வழி நடத்தினார். அவரது தலைமையின் கீழ் நெதர்லாந்து ஒற்றுமையாகவும், வலுவாகவும் இருந்தது மற்றும் நெருக்கடி காலங்களில் தனது நாட்டு மக்களை அவர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டிருந்தார். இவர் நவீன ஐரோப்பாவில் மிக முக்கியமான மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
டென்மார்க்கின் ராணி இரண்டாம் மார்கிரேத், டென்மார்க் நாட்டின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் ஆவார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். ராணி இரண்டாம் மார்கிரேத் அவர்கள், முடியாட்சியை நவீனமயமாக்குதல் மற்றும் படைப்பு அம்சங்கள் மற்றும் முடியாட்சியின் சமகால மற்றும் பாரம்பரிய அம்சங்களை இணைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு ஆட்சி செய்தார்.
இவர் தன்னுடைய ஈடுபாட்டினால், டேனிஷ் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும், ராஜதந்திரத்தை ஊக்குவிப்பதிலும், டேனிஷ் அரச குடும்பத்தில் பொது நலனைப் பேணுவதிலும் தனது ஆட்சியை மையப்படுத்தி இருக்கிறார்.
இங்கிலாந்தின் ராணி முதலாம் எலிசபெத் 45 ஆண்டுகள் ஆட்சி செய்தார், மேலும் எலிசபெத் அவர்கள் ஒரு சகாப்தத்தை உருவாக்கியதற்காகப் பெயர் பெற்றவர். ராணி முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியல் மற்றும் இராணுவ சக்தியை அதிகரித்தார். அதே நேரத்தில் வலுவான உலகளாவிய இருப்பை உருவாக்கினார்.
இங்கிலாந்தை ஒரு மகத்தான கலாச்சார அடித்தளத்தையும் வலுவான உலகளாவிய அந்தஸ்தையும் கொண்ட உலகத் தரம் வாய்ந்த நாடாக மாற்றுவதில், கலை மற்றும் இலக்கியத்திற்கான அவருடைய ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது.
இந்த ராணிகள் எல்லோருமே அவர்களுடைய நாடுகளின் வளர்ச்சியிலும், கலாச்சாரங்களை செழிக்க வைப்பதிலும் மேலும் செல்வாக்கை மேம்படுத்துவதிலும் தன்னுடைய திறமைகளை வெளிபடுத்தினார்கள். மேலும் எதிர்கால தலைமுறை பெண்களுக்கு உதவும் வகையில் தங்களுடைய தனித்துவமான தலைமைத்துவத்தையும் ஆளுமை திறனையும் முன் உதாரணமாக விட்டு சென்றார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை.