

இந்தியாவின் வட எல்லையான லடாக்கில், அதிக வளர்ச்சிகள் இல்லாத கிராமங்களை நோக்கி வெளிநாட்டுக்காரர்கள் சுற்றுலாவிற்கு வருகிறார்கள் என்பது சாதாரண செய்தியாக இருக்கும். ஆனால், இங்குள்ள ஆரிய ஆண்களிடம் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக, ஏராளமான ஐரோப்பிய பெண்கள் வருவதாக பரவும் செய்திகள் விநோதமாக இருக்கும். ஆனால் இந்த செய்திகள் உண்மையா?
1990களின் பிற்பகுதியில் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பயண இதழ்களின் மூலம் இந்த வதந்தி பரவ தொடங்கியுள்ளது. அந்த காலக் கட்டத்தில் இந்த பகுதிகள் 'கடைசி ஆரியக் குடியிருப்புகள்' என்று பிரபலப்படுத்தப்பட்டன. லடாக் பீடபூமியில் உள்ள டா, ஹனு, கார்கோன் மற்றும் டார்ச்சிக் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 'ப்ரோக்பா' என்னும் இன மக்கள் ஆரியர்களாக விளம்பரப் படுத்தப்பட்டார்கள்.
'ப்ரோக்பா' என்றால் உயரமான மலைகளில் வாழும் மக்கள் என்று அவர்கள் மொழியில் பொருள். இந்த மக்கள் ப்ரோக்ஸ்கட் என்ற மொழியைப் பேசுகிறார்கள்; இந்த மொழியை லாடக் பகுதி மக்களில் சிலரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இவர்களின் கவர்ச்சிகரமான பாரம்பரிய உடைகள், பூக்கள், வெள்ளி மற்றும் டர்க்கைஸ் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட கம்பளி அங்கி ஆகியவை பார்வையாளர்களை இழுக்கின்றன. குறுகிய தெருக்களில் உள்ள இவர்களின் வீடுகள் மரத்தில் கூரை வேயப்பட்டு கற்களினால் கட்டப்பட்டு இருக்கின்றன.
இவர்கள் இமயமலைப் பகுதியில் பார்லி மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் பழங்குடியின மக்களாவர்கள். இவர்கள் வழக்கமான திபெத்திய-மங்கோலிய தோற்றம் கொண்ட லடாக்கியர்களைப் போலல்லாமல், இந்தோ- ஆரிய தோற்றங்களை கொண்டுள்ளனர். இவர்களின் பழுப்பு நிற கண்கள், கூர்மையான மூக்கு மற்றும் வெள்ளையான சருமம் ஆகியவை ஆரியர்களின் சந்ததியினராக இருக்கலாம் என்ற யூகத்தை கொண்டு வந்தன.
இந்த கிராமங்களுக்கு ஐரோப்பிய பெண்கள் இயற்கை அழகை ரசிக்க மட்டுமின்றி உள்ளூர் ஆண்களிடம் குழந்தைகளைப் பெறுவதற்காகவும் வருகிறார்கள் என்றும், அவர்களே உண்மையான ஆரியர்கள் என்றும் கதைகள் பறந்தன. இந்த கதை சுற்றுலாப் பயணிகளையும், திரைப்பட தயாரிப்பாளர்களையும் மிகவும் ஈர்த்தது. காலப் போக்கில் காஷ்மீரின் சூழ்நிலைகள் பாதுகாப்பு பிரச்னைகள் அதிகமானதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலும் நின்று போனது.
ஒரு கட்டத்தில் இந்த கதைகள் அனைத்தும் மறைந்து போயின. ஆனால், சமீப காலமாக ஆன்லைன் மூலம் பரவிய இந்த தகவல்கள் மீண்டும் உலகம் முழுக்க பரவ தொடங்கியுள்ளது. ஆனால், டார்ச்சிக்கின் கிராமவாசிகள் இந்த வதந்தி, தங்களுக்குள் குழப்பம், அசௌகரியம், தவறான புரிதலை கொடுத்ததாக நினைவு கூறுகிறார்கள்.
இது பற்றி உள்ளூர் கிராமவாசி ஒருவர் கூறுகையில் "அவரது இளமைக் காலத்தில் ஒரு சில வெளிநாட்டுப் பெண்கள் மட்டுமே இங்கு வந்தார்கள். அவர்கள் புகைப்படம் எடுத்தார்கள். எங்கள் உடைகள், பாடல்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்துக் கொண்டார்கள். ஆரியர்கள் பற்றியும், அவர்கள் வம்சாவளிகள் பற்றியும் பேசினார்கள். எங்களுக்கு ஆரியர்களைப் பற்றி எல்லாம் தெரியவில்லை." என்று கூறினார்.
ஃபன்சோக் லோப்சாங் என்ற கிராமவாசி கூறுகையில், "நாஜி கோட்பாட்டாளர்கள் எங்களை ஆரியர்கள் என்று நினைத்துக் கொண்டு செய்திகளை பரப்பி விட்டார்கள். இங்கு சுற்றுலா வந்த ஒரு சில பெண்கள் இங்குள்ள ஆண்களின் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். மற்றப்படி 'கர்ப்ப சுற்றுலா' எல்லாம் இங்கு இல்லை, அது போன்ற விஷயம் எங்கள் இனத்திலும் இல்லை," என்றார்.