
வரலாற்றின் ஆழத்தில் புதைந்துள்ள ரகசியங்கள், நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் வெளிச்சத்துக்கு வருகின்றன. தெற்கு சைபீரியாவின் உறைபனிப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான ஒரு மம்மியில், நுட்பமான பச்சை குத்தப்பட்ட கலைப்படைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரும்புக்காலத்தைச் சேர்ந்த பஸிரிக் கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் எச்சங்களாகக் கருதப்படும் இந்த உடல், அல்டாய் மலைகளின் உறைந்த மண்ணில் வியக்கத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டிருந்தது. மம்மியின் வயது இரண்டாயிரம் ஆண்டுகள் என்றாலும், அவரது தோல் மற்றும் அதில் பொறிக்கப்பட்ட விரிவான பச்சை குத்தல்கள் அப்படியே இருந்ததால், ஆராய்ச்சியாளர்கள் விரிவான புதிய ஆய்வை மேற்கொள்ள முடிந்தது.
இந்த ஆய்வு, 'ஆன்டிக்விட்டி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், High-resolution near-infrared photography மற்றும் 3D மாடலிங் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, பச்சை குத்தல்களை டிஜிட்டல் முறையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. வெறும் கண்ணுக்குத் தெரியாத சில பச்சை குத்தல்கள் கூட இந்த மேம்பட்ட இமேஜிங் மூலம் வெளிப்பட்டன. புதிய இமேஜிங் நுட்பங்கள், அந்தப் பெண்ணின் வலது முன்கையில் இருந்த பச்சை குத்தல்கள், இடது கையை விட மிகவும் சிக்கலானதாகவும், அதிக நுணுக்கங்களுடனும், கலைநயத்துடனும் இருந்ததைக் காட்டின.
இந்தப் பச்சை குத்தல்களில், ஸ்டைலான பூனை, குதிரை போன்ற விலங்கு உருவங்கள் மற்றும் பல்வேறு குறியீட்டு அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வடிவமைப்புகள், பெண்ணின் உடலின் வளைவுகளுடன் இயற்கையாகவே ஒன்றிணைந்து, குறிப்பாக மணிக்கட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில், பச்சை குத்திய கலைஞரின் திட்டமிடப்பட்ட அழகியல் தேர்வு மற்றும் தொழில்நுட்பத் திறமையைப் பறைசாற்றுகின்றன. இத்தகைய துல்லியமான மற்றும் சீரான கோட்டு வேலைகள், நவீன பச்சை குத்தும் கலைஞர்களுக்கும் சவாலாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இந்தப் பச்சை குத்தல்கள் நவீன கருவிகள் இல்லாமல், கையால் குத்தும் முறைகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்டிருக்கலாம்.
பச்சை குத்தப்பட்ட தோலில் ஒரு வெட்டு இருப்பதைக் கண்டறிந்ததன் மூலம், இந்த உடல் கலைகள் குறிப்பாக இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மாறாக, இந்தப் பச்சை குத்தல்கள் அந்த நபரின் வாழ்நாளில் தனிப்பட்ட, சமூக அல்லது குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டிருந்திருக்கலாம்.