
சில சமயங்களில் நம் பூமியில் நடக்கும் வினோதமான விஷயங்களுக்கு விளக்கம் இருக்காது. இருப்பினும் அது நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். அதுப்போன்ற ஒரு சம்பவம் தான் 12 ஆம் நூற்றாண்டில் Woolpit village Englandல் நடந்தது. ஒரு நாள் Woolpit கிராமத்திற்கு இரண்டு குழந்தைகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பேசிய மொழி, அவர்களின் உடை அனைத்தும் வித்தியாசமாக இருந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர்கள் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருந்திருக்கிறார்கள்.
ஆமாம். அவர்களுடைய சருமம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருந்திருக்கிறது. அந்த ஊரில் இருந்த மக்களுக்கு இவர்களை பார்த்து ஒரே ஆச்சர்யம். யார் இந்த வித்தியாசமான குழந்தைகள்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? என்று புரியாமல் அந்த குழந்தைகளுக்கு உணவு அளித்துள்ளனர். ஆனால், அந்த குழந்தைகள் எதையும் சாப்பிடவில்லை. பச்சை பீன்ஸை தவிர எந்த உணவையும் தொடவில்லை.
இப்படியே கொஞ்சம் நாள் போகிறது. அந்த இரண்டு குழந்தைகளில் அந்த பையனுக்கு அந்த இடத்தில் வாழ்வது ஏற்றுக்கொள்ளாமல் இறந்து விடுகிறான். ஆனால், அந்த பெண்ணுக்கு இந்த சூழ்நிலை ஒத்துப் போகிறது. அந்த பெண் குழந்தை மற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய மொழியையும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அந்த பெண் குழந்தையின் சருமமும் நம்முடைய சரும நிறத்திற்கு மாற தொடங்கியிருக்கிறது.
அந்த பெண் இவர்களின் மொழியை கற்ற பிறகு என்ன சொல்லியிருக்கிறாள் என்றால், 'அவர்கள் St.martin என்ற இடத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இருக்கும் இடத்தில் சூரியனே கிடையாது. நிலம் முழுவதும் பச்சையாகவும், வானம் பச்சையாகவும் இருக்குமாம். அங்கு வாழும் மக்களும் பச்சை நிறத்தில் தான் இருப்பார்கள்' என்று கூறியிருக்கிறாள்.
ஒருநாள் இந்த பெண்ணும், அந்த பையனும் விளையாடிக் கொண்டிருந்த போது மணி அடிக்கும் ஓசை கேட்டிருக்கிறது. அதை பின்தொடரந்து ஒரு குகைக்கு வந்திருக்கிறார்கள்.
அங்கிருந்து வெளியிலே வந்து பார்த்தால் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்ததாக சொல்லியிருக்கிறாள். சிலர் அந்த St.Martin என்பது பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு இடம் என்று சொல்கிறார்கள். அங்கே மக்கள் வாழ்கிறார்கள். அந்த இடத்தில் சூரிய ஒளியில்லாததால் மக்கள் பச்சை நிறமாக இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்.
சிலர் இந்த குழந்தைகள் வேறு உலகை சேர்ந்தவர்கள் என்று நம்பினார்கள். இன்னும் சிலர் இவர்கள் ஏதோ நோயினால் பாதிக்கப்பட்டு பச்சை நிறத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அந்த பெண் ஊர் மக்களுடன் சேர்ந்து வாழ பழகிக்கொண்டாள். பிறகு அந்த ஊரில் இருந்த ஒரு பணக்கார நபரை திருமணமும் செய்துக் கொண்டாள் என்று சொல்லப்படுகிறது.