பெங்களூருவில் உள்ள, ‘மண்பாண்ட நகரம்’ ஒரு பாரம்பரிய மண்பாண்டத் தயாரிப்பின் சாரத்தை உள்ளடக்கிய ஒரு கலாசார பொக்கிஷமாகும். இது திறமையான கைவினைஞர்களின் கலைத்திறன் மற்றும் கைவினைத்திறனைக் வெளிக்காட்டுகிறது. மேலும், இப்பகுதியானது வரலாற்று முக்கியத்துவம், கலை நயம் மற்றும் பார்வையாளர் அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பெங்களூரு பகுதியின் ஒரு தனித்துவமான இடமாக இந்த மண்பாண்ட நகரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
நூறாண்டுகள் பழைமையான நகரம்: இந்த மண்பாண்ட நகரத்தின் வரலாற்று வேர்கள் பல தசாப்தங்களுக்கும் முந்தையவை. அவை களிமண் கலைத்திறனின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நகரத்தில் மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கான வரலாறு 100 ஆண்டுகளுக்கு முந்தையது. மைசூர் மன்னர் ஆட்சியின்போது குடும்பங்கள் இப்பகுதியில் குடியேறின. களிமண் கலையில் நிபுணத்துவம் பெற்ற தலைமுறையைச் சேர்ந்த கைவினைஞர்கள் எண்ணற்ற களிமண் கலைப்பொருட்களை உருவாக்கும் மையமாக இந்த நகரம் செயல்பட்டு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள், தங்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்களைப் பாதுகாத்து, நிலைநிறுத்திக் கொண்டு, மண்பாண்ட நகரத்தில் குடியேறியுள்ளனர். இதுபோன்ற வரலாற்று பாரம்பரியம் மிக்க சூழலானது, மண்பாண்ட நகரத்தின் சாரத்தை வரையறுக்கும் கலை, கலாசாரம் மற்றும் ஒரு சமூகத்தின் இணைவை பிரதிபலிக்கிறது.
கைவினைக் கலைஞர்களின் கைவண்ணம்: இரசாயனங்கள் கலக்கப்படாமல் பெறப்பட்ட களிமண்ணை இங்கு மின்சார பானை செய்யும் சக்கரத்தின் மூலமாக வடிவமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி. களிமண்ணை சரிவர வடிவமைத்தல் மற்றும் கைவினைஞர்களின் கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குதல் ஆகியவையும் இதில் அடங்கும். நேர்த்தியான கைவினைஞர்கள், மண்பாண்ட நகரத்தில் பாரம்பரிய களிமண் விளக்குகள், தண்ணீர் பானைகள், கோப்பைகள், பூந்தொட்டிகள், குவளைகள், மெழுகுவர்த்தி தாங்கிகள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான களிமண் பொருட்களை திறமையான முறையில் உருவாக்கி வருகின்றனர். அகல் விளக்குகள் முதல் பானைகள் வரையிலான பல்வேறு வகையான களிமண் பொருட்கள், மண்பாண்ட நகரத்தில் உள்ள குயவர்களின் கலை படைப்பாற்றலைக் காட்டுகின்றன.
சமூகத்திற்கான வாழ்வாதாரம்: மண்பாண்ட நகரம் என்பது கலை படைப்பிற்கான இடமாக மட்டுமில்லாமல், ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு முதுகெலும்பாகவும் இருக்கிறது. இந்தப் பகுதியில் குடியேறிய குடும்பங்கள், மண்பாண்டத் தொழிலை தங்களின் பரம்பரைத் தொழிலாகவும், பாரம்பரியத் தொழிலாகவும் பார்க்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அவர்களின் படைப்பாக்கத் திறன்களையும் நுட்பங்களையும் எடுத்துச்செல்கின்றனர். மண்பாண்ட நகர, குயவர்களிடையே சமூக உணர்வும் பகிரப்பட்ட பாரம்பரியமும் அவ்வூர் மக்களின் கலாசார செழுமையை மேம்படுத்துகிறது. இது இந்திய கைவினைத்திறனின் நீடித்த மரபுகளுக்கு வாழும் சான்றாக அமைகிறது.
பார்வையாளர்கள் அனுபவம்: இந்த நகரானது ஒரு பாரம்பரிய சுற்றுலாத் தலமாகவும் கருதப்படுகிறது. இங்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு, மண்பாண்டங்களை உருவாக்கும் கலையை நெருக்கமாகக் காணும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
குறுகிய பாதைகள் வழியாகச் செல்லும்போது, பார்வையாளர்கள் குயவர்கள் வேலை செய்வதை கவனித்துக்கொண்டே செல்கின்றனர். அங்கிருக்கும் களிமண்ணின் நறுமணம் மற்றும் சுழலும் சக்கரங்களின் தாள ஒலியால் நிரப்பப்பட்ட மண்பாண்ட நகரத்தின் சூழலானது பார்வையாளர்களை குயவர்களின் உலகில் மூழ்கடிக்கச் செய்கிறது.
மண்பாண்ட நகரத்தின் தற்போதைய நிலை: பெங்களூருவில் உள்ள மண்பாண்ட நகரமானது, தற்போது நகரமயமாக்கலின் காரணமாக பலவிதமான சவால்களை எதிர்கொள்கிறது. மேலும், இந்தக் கலையானது வேகமாக மறைந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மண்பாண்டங்கள் தயாரிக்கும் பாரம்பரியத்திற்காக அறியப்பட்ட இந்த கலாசார மையம் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஆரம்ப காலத்தில் களிமண் பாத்திரங்களின் தேவைக்கேற்ப 40 முதல் 45 கடைகள் வியாபாரத்தில் தீவிரமாக இயங்கி வந்தன. இந்நிலையில் ஸ்டீல் மற்றும் மெலமைன் தயாரிப்புகள் பிரபலமடைந்ததால், கடைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படத் துவங்கியது. தற்போது 15 முதல் 20 கடைகள் மட்டுமே மீதமுள்ளது. ஆனால், அதுவும் கூட மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி உள்ளது. எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் இருந்தபோதிலும், குயவர்கள் தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளின்போது அவர்களின் பணிக்குத் தொடர்ந்து தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது. இது மண்பாண்ட நகரத்தின் முக்கியத்துவத்தையும் மற்றும் தயாரிப்பின் நீடித்த பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.