‘யாளி’ என்னும் மிருகத்தை பழங்கால கோயில் சிற்பங்களில் பார்த்திருப்போம். அதன் பிரம்மாண்ட உருவத்தைக் கண்டு வியந்திருப்போம். ஆனால், உண்மையிலேயே இந்த யாளி உலகில் வாழ்ந்த ஒரு மிருகமா? இல்லை வெறும் கற்பனை சிலையா? கற்பனைதான் என்றால் ஏன் பல கோயில் சிற்பங்களில் இதற்கு இடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் பழந்தமிழர்கள் நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதுவரை நாம் கோயில்களில் பார்த்த யாளி உருவங்களை கற்பனை வடிவம் என்று கூறினாலும், ஹரப்பா, மொஹஞ்சதாரோ காலகட்டத்தில் கிடைத்த யாளியின் ஓவியத்தை எப்படி கற்பனை என்று தட்டிக்கழித்துவிட முடியும்? அப்போதே அவர்கள் யாளியின் உருவத்தை வரைந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது.
பொதுவாக, நம் கோயில்களில் மூன்று விதமான யாளிகளை காணலாம். சிங்க முகத்துடன் இருக்கும் யாளி சிம்ம யாளி, யானை முகம், சிங்க உடல் கொண்ட யாளி கஜயாளி, மான் முகம், சிங்க உடலை கொண்டது மகர யாளி என்றும் நாய் முகம் கொண்ட யாளியை ஞமலி யாளி என்றும், எலி முகம் கொண்ட யாளியை மூஷிக யாளி என்றும் பிரிக்கலாம்.
உலகப் புகழ் பெற்ற அங்கோர்வாட் கோயிலிலும் யாளியின் சிலை செதுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சர்யமான விஷயமாகவே உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் உத்ஸவ மூர்த்திகள் யாளி போன்ற வாகனத்தில் உலா வருவதை இன்றும் காணலாம்.
‘இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர்
நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும்’
இந்தப் பாடலின் பொருள்: வாள் போன்ற வரிகளை தனது உடலிலே கொண்டிருக்கும் புலியானது, எப்போதுமே தனது வலப்பக்கத்திலிருக்கும் இரையைத்தான் பாய்ந்து அடிக்குமாம். இடப்பக்கம் இருக்கும் இரையை அடிக்காதாம். அப்படிப்பட்ட புலியே பயந்து நடுங்கும் அளவிற்கு யாளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியுடைய யானையை முகத்தில் தாக்கி அதன் வெண்மையான தந்தத்தை பெயர்த்து எடுக்குமாம். இதுதான் இந்தப் பாடலை இயற்றிய நக்கண்ணையார் தரும் விளக்கம். இதை வைத்துப் பார்க்கும்போது யாளிகளுக்கு யானை விருப்ப உணவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அனைத்து கோயில்களிலும் யாளியின் சிற்பத்திற்கு கீழே யானையின் சிற்பம் அமைந்திருக்கிறது.
மூவாயிரம் வருடத்திற்கு முன்பு இருந்த யானைகள் உருவத்திலும், அளவிலும் தற்போது இருக்கும் யானைகளை விட பெரியதாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட யானைகளே யாளிகளின் கால்களுக்குக் கீழ் இருக்கிறது என்றால், யாளி எவ்வளவு பெரியதாக இருந்திருக்க வேண்டும். அகத்தியரும் தன்னுடைய பாடலில் யாளியை பற்றி எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள பல கோயில்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை செங்கற்களாலே அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. 8ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட கோயில்களில் சிம்ம யாளி செதுக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் கட்டடக்கலையில்தான் முதன் முதலில் யாளிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கி.பி. 10 முதல் 12ம் நூற்றாண்டில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களில் சிம்ம யாளி, மகர யாளி, கஜயாளி, சுருள் யாளி ஆகியவற்றைப் பார்க்க முடியும்.
ஆனால், சில தமிழ் ஆய்வாளர்கள் யாளியை பற்றி வேறு கருத்துகளை முன்வைக்கிறார்கள். யாளி என்பதை ஆளி என்று குறிப்பிட வேண்டும் என்றும் அப்படிக் குறிப்பிட்டால் ஆளி என்பது சிங்கத்தை குறிக்கும் என்று கூறுகிறார்கள். ‘சிங்கம் பழங்காலத்தில் மிகவும் பெரிதாக இருந்திருக்க வேண்டும். புலிகளையும், யானைகளையும் வேட்டையாடும் அளவிற்கு வலிமை வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். கோயில்களில் உள்ள யாளி சிற்பங்களில் முகத்தில் வேறுபாடுடன் இருந்தாலும் உடல் சிங்கத்தை ஒத்திருக்கிறது. எனவே, அது சிங்கமாகத்தான் இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். யாளி என்பது தென்னிந்திய சிற்பங்களில் மட்டுமே உள்ளது என்ற கூற்று ஒன்று உள்ளது. ஆனால், யாளியின் உருவம் இலங்கை, கம்போடியா, ஜாவா, சீனா, மலேசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
யாளி என்பது குமரிக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு மிருகம் என்றும் குமரிக் கண்டம் கடற்கோளால் அழிந்தது என்றும் அதைப்பற்றி பெரிதும் ஆராயாததாலும் யாளி என்பது இன்று வரை ஒரு கற்பனை உயிரினமாகவே பார்க்கப்படுகிறது. எதையும் ஆராயாமலே அப்படி ஒன்று இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.