மணிக்கூண்டிற்குள் ஒர் இசைக்கருவியா?

canadaparliament
canadaparliament
Published on

- ஸ்வர்ண ரம்யா, கனடா

கனடாவின் தலைநகரம் ஒட்டாவா நகரம். டெல்லி நகரைப் போல் அரசாங்க கட்டிடங்கள் நிறைந்த நகரம். இங்கு கனடா நாட்டின் பாராளுமன்றக் கட்டிடம் உள்ளது. இதன் கம்பீரத்திற்கு மேலும் அழகு சேர்ப்பது, ‘பீஸ் டவர்’ எனப்படும் அமைதி மணிக்கூண்டு. முதலாம் உலகப் போரில் உயிரிழந்த 65,000-க்கும் மேற்பட்ட கனடா வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மணிக்கூண்டு 1927ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்த மணிக்கூண்டில் ஐந்து கிலோ முதல் பத்தாயிரம் கிலோ வரை எடை கொண்ட வெவ்வேறு அளவுடைய 53 மணிகள் உள்ளன. இவற்றை ‘கேரிலான்’ என்கின்றனர். வடஅமெரிக்காவின் மிகப் பழமையான இந்த கேரிலான் இசைக்கருவி ஒரு மனிதரால் வாசிக்கப்படுகிறது. 'என்ன? யானை எடை கொண்ட மணிகளை எப்படி மனிதர்கள் வாசிக்க முடியும்’ என அதிர்ந்தேன். ‘‘கைகளால்தான்.’’ என்றார் இந்த மணிக்கூண்டைப் பற்றி விளக்கியவர்.

இந்த ஒவ்வொரு மணியும் ஒரு குறிப்பிட்ட ‘மியூசிக்கல் நோட்’ அதாவது இசை ஒலியை எழுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மணிகளில் மிகப்பெரிய மணி ஏழு அடி உயரம் கொண்டுள்ளது. இது கர்நாடக இசை ஒலிகளான ‘ஸரிகமபதநி’ யில் ‘க’ ஒலியை எழுப்பும். 14 செ.மீ உயரமுள்ள மிகச்சிறிய மணி ‘த’ ஒலியை எழுப்பும். இவை கம்பிகள் வழியாக மற்றுமொரு அறையில் இருக்கும் ஒரு கீ-போர்ட் இசைக்கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கீ-போர்டை வாசிப்பதன் மூலம் மணிகளின் ஒலி வழியாக அழகிய பாடல்களை கேட்கலாம். இந்த கேரிலான் கருவியை மக்கள் நேரில் பார்க்கும் வகையில் ‘லிஃப்ட்’ வசதியும் உள்ளது.

கேரிலான் கருவியை முறையாக பயிற்சி பெற்ற கேரிலானர் என்பவர் தேசிய விடுமுறை நாட்களில் வாசிப்பார். கடந்த பதினாறு வருடங்களாக ஆண்ட்ரியா மெக்ராடி என்னும் பெண்மணிதான் கனடா பாராளுமன்றத்தின் கேரிலானர்.

இதையும் படியுங்கள்:
கேரள பாணி வீடுகளின் அழகுக்கு காரணம் என்ன தெரியுமா?
canadaparliament
musical instrument
musical instrument

கனடாவில் இது போன்ற கேரிலான் மொத்தம் பன்னிரண்டு உள்ளன. தேவாலயங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இந்த இசைக்கருவியைக் காண இயலும். பெரும்பாலும் கேரிலான் மணிகள் வெண்கலத்தால் உருவாக்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற கேரிலான் கருவிகள் ஐரோப்பா நாடுகளான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் உள்ளன. உலகில் மொத்தம் 600 கேரிலான்கள் உள்ளன. அதில் 180-க்கும் மேற்பட்ட கேரிலான்கள் வட அமெரிக்காவில் உள்ளன. ஒரு சிறிய கேரிலான் கருவியை உருவாக்க இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் பதினேழு லட்ச ரூபாய் செலவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com