

நீலகிரி மலையில் இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர், கோத்தர், தோடர் என ஆறு வகையான பழங்குடி இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரித்தான உடை, உணவு, மொழி, வழிபாடு, இசை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை இன்றளவும் மாறாது கடைபிடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் இந்த தோடர் (Toda tribe) இன மக்கள், 'தொதவம்' என்ற மொழியைப் பேசுகிறார்கள். இது தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளுடன் தொடர்புடையது. இவர்கள் தங்களுடைய தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சடங்குகளை பின்பற்றி வாழ்கின்றனர். இவர்கள் வசிக்கும் இடங்கள் 'மந்து' என்று அழைக்கப்படுகின்றன.
மலைகள், ஆறுகள், மரங்கள், நட்சத்திரங்கள், சூரியன், நிலவு, காற்று, மழை இவையே இவர்களின் கடவுள். உருவ வழிபாடு கிடையாது. வளைவு வடிவ வழிபாட்டு தலத்திற்குள் ஒளியை மட்டுமே கடவுளாக வைத்து வழிபடுகிறார்கள்.
குளிர் நிறைந்த நீலகிரி மலை உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் ஆயர் சமூகமாக அறியப்படுகிறார்கள். உலகின் தனித்துவமான எருமை இனமாக அறியப்படும் தோடா எருமைகளை வளர்ப்பதையே முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். இவை பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் அனைத்து சடங்குகளிலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே திகழ்கின்றன.
இவர்களின் வாழ்க்கை முறை:
ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரம்பரிய குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் தோடா பழங்குடியினர் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் நீலகிரியின் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளனர். இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முன்பே வாழ்ந்து வரும் இவர்களின் இருப்பு 18 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது என்றும், அவர்கள் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான திராவிடக் குழுக்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்கள். இவர்கள் எருமை மேய்த்தல், விவசாயம் மற்றும் எம்பிராய்டரி போன்ற பாரம்பரிய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
தோடா குடிசைகள் முண்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. அவை மூங்கில், கரும்பு மற்றும் புல் ஆகியவற்றாலான அரை-பீப்பாய் வடிவ கட்டமைப்புகளாகும். இந்த குடிசைகள் நீலகிரியின் உயரமான தட்பவெப்ப நிலைக்கு நன்கு பொருந்துவதுடன் பழங்குடியினரின் தனித்துவமான கட்டடக்கலை பாணியையும் எடுத்துரைக்கின்றது. இயற்கையில் கிடைக்கும் குறிப்பிட்ட ஒரு வகையைச் சேர்ந்த புற்கள், மூங்கில், மரப் பட்டைகள், கற்கள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி கட்டுகிறார்கள். அவர்களுடைய குடிசைகளைப் போலவே ஒரு ஓலைக் கூரை மற்றும் செதுக்கப்பட்ட நுழைவாயிலுடன் கோவிலை கொண்டுள்ளனர்.
தோடா எம்ராய்டரி அல்லது புகுர்:
இவர்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் கைவினை திறனுக்காக அறியப்படுகிறார்கள். இவர்களின் சிக்கலான எம்ராய்டரி கலை அவர்களுடைய கலாச்சாரத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும்.
உள்ளூரில் புகுர் என்று அழைக்கப்படும் இந்த தனித்துவமான ஊசி வேலைப்பாடு தோடர் பெண்களின் தலைமுறைகள் வழியாக வழி வழியாக வந்து இன்றும் அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.
வெள்ளை நிற துணியில் சிவப்பு மற்றும் கருப்பு அக்ரிலிக் கம்பளியை பயன்படுத்தி வடிவமைக்கிறார்கள். துணியின் இருபுறமும் எம்ராய்டரி செய்யப்படுகிறது. சால்வைகள், துப்பட்டாக்கள், பைஜாமாக்கள், பாவாடைகள் மற்றும் ஜாக்கெட்டுகள் போன்ற பல்வேறு துணிகளில் எம்ராய்டரி செய்யப்பட்ட உருவங்கள் பழங்குடியினரின் படைப்புகளின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன.
காலப்போக்கில், எம்ராய்டரி பாரம்பரிய ஆடைகளுக்கு அப்பால் விரிவடைந்து இப்பொழுது சாவிக் கொத்துகள், மஃப்ளர்கள், பர்ஸ்கள் மற்றும் பிற சிறிய பொருட்களை உருவாக்குவதிலும் எம்பிராய்டரி பயன்படுத்தப்படுகிறது.