

டிசம்பர் பிறந்து விட்டால் சென்னையில் குளிர் மட்டுமல்ல, குதூகலமும் பெருகி விடும். அக்குதூகலத்தின் பிறப்பிடம் இசையும், நடனமும்! ஆங்காங்கே உள்ள சபாக்கள் அசுர கதியில் இயங்க ஆரம்பித்து விடும்.
உண்மையில் இசை ஓர் உயிர் காக்கும் மருந்து. ஒளிந்து கிடக்கும் இதயத்தையும், மூளையையும் ஒருசேர வருடி, உடலெங்கும் அமைதியைத் தவழச் செய்யும் அற்புத காயகல்பம் அது! மருந்து கலப்படமற்றதாக இருந்தால்தான், உடலின் நோயைப் போக்கி, உறுதி அளித்து, உடலை வலுவுள்ளதாக்கும். வலுவுள்ளவையே வாழ்வில் நிலைக்கும்.
’தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆக முடியாது!’ என்ற பழமொழிக்கிணங்க, பாடுகின்றவர்களும், ஆடுகின்றவர்களும் அதனை முறையாகப் பயின்ற பிறகே அரங்கேற வேண்டுமென்ற ஆர்வம் காரணமாகவே விமர்சகர்கள் உருவானார்கள். எந்தப் பாரபட்சமும் இன்றி, பாடுபவர்கள், ஆடுபவர்களின் பின்புலங்கள் பற்றிய விபரங்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், திறமைகளைப் பாராட்டியும், குறைகளைச் சுட்டிக் காட்டியும் விமர்சனம் எழுதிய விமர்சக முன்னோடி கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
‘கர்நாடகம்’ என்ற புனை பெயரில் அவர் எழுதிய சங்கீத விமர்சனங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை! அப்படி அவர் விமர்சனம் எழுதி வரும் நேரத்தில் ஒரு வாசகர் கடிதம் வருகிறது. முற்போக்குச் சிந்தனையாளரான கல்கி அவர்கள் அந்தக் கடிதத்தை அப்படியே வெளியிடுகிறார்.
’சாத்தூர் ஏ.ஆர்.சுப்பிரமணியம் ஐயர் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான்!ஆனால், தாயே நீ இரங்காவிடில் என்று பாடும்போது, ஏன் இற்றங்காய்? என்று பாடுகிறார்?’
என்று கேட்கிறது அந்தக் கடிதம்!அதனை எழுதியது வேறு யாருமல்ல. சுப்புடு என்று பின்னாளில் புகழ்பெற்ற பி.வி.சுப்பிரமணியம் தான்!
கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு அடுத்தபடியாக, நேர்மையான, நியாயமான, எந்தவிதப் பாரபட்சமும் காட்டாமல் விமர்சனம் எழுதிய வித்தகர் என்ற சிறப்புக்குரியவர் இந்த பிவிசு! கோவைக்கு அருகிலுள்ள தாராபுரம் சொந்த ஊராக இருந்தாலும், இவரின் தந்தையார் திரு.வெங்கட்ராமன் பர்மாவில் சிறை கண்காணிப்பாளராக இருந்த காரணத்தால் அங்கேயே சிறு வயது வாழ்க்கை ஓடியது.
இளமையிலேயே இசை வாத்தியங்களைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றார் அவர். ஒரு முறை ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ஹரிகதா கலாட்சேபத்திற்காக பர்மா சென்றார். மேடையில் தனக்கு ஹார்மோனியம் வாசிக்கத் தகுந்த ஒருவரைத் தேடியபோது, அங்குள்ளவர்கள் பிவிசுவை அழைத்து வந்தார்கள். ஹார்மோனியத்தைத் தூக்கும் வயதைக் கூடத் தாண்டாத இவனா நமக்கு வாசிக்கப் போகிறான் என்ற சந்தேகத்தில், அவர் பல ராகங்களைக் கூற, அத்தனையையும் அழகாக வாசித்துக் காட்டி அசத்தினாராம் பிவிசு! அப்பொழுது அவர் வயது எட்டு மட்டுமே!பாகவதருக்கோ, சரியான ஆள் கிடைத்து விட்டதில் மட்டற்ற மகிழ்ச்சியாம்!
ஒரு காலக் கட்டத்தில் இந்தியர்கள் பர்மாவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட, பல நாட்கள், பல மைல் தூரம் நடந்தே வந்து நம் நாட்டை அடைந்தார்கள் அங்கு வாழ்ந்த நம்மவர்கள். அப்படி வந்தவர்களில் பிவிசுவும் ஒருவர். சிம்லாவில் வந்து தங்குகிறார். அங்கிருந்தே தன் விமர்சன வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். பின்னர் டெல்லி வந்து, மத்திய அரசின் நிதித்துறையில் சார்புச் செயலராகப் பணியாற்றுகிறார்.
ஐயா கல்கி கிருஷ்ணமூர்த்தியும், திரு சதாசிவம் அவர்களும் கல்கியில் முழுமையான மதிப்பாய்வை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு சுப்புடு அவர்கள் ‘தி ஸ்டேட்ஸ்மேனி’ல் நடன மற்றும் இசை விமர்சகராகப் (Classical music critic) பணியாற்றுகிறார்!
ஹார்மோனியம், மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய அவரால், இசை மற்றும் நடனக் கலைஞர்களின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகளை எளிதாகவே அறிய முடிந்தது. ஒவ்வொரு கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் கொடுக்கும் பர்பார்மன்சை வைத்து, நூல் பிடித்தாற்போல் விமர்சிப்பார். ப்ளஸ் இருந்தால் பாராட்டவும், மைனஸ் இருந்தால் சுட்டிக் காட்டவும் அவர் என்றுமே தயங்கியதில்லை!
இதன் காரணமாகச் சிலரின் வெறுப்புக்கும், மிரட்டல் விடுகின்ற அளவுக்கும், ஆளானார்! இதற்கெல்லாம் பயந்து அவர் தன் நிலையை எப்பொழுதுமே மாற்றிக் கொண்டதில்லை. அதன் காரணமாகவே பத்திரிகைகள் பலவும் அவர் விமர்சனத்தைப் போட்டி போட்டுக் கொண்டு பிரசுரித்தன. திறமையான பலரைப் பாராட்டி அவர் எழுதியதால், ’வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’ பட்டம் பெற்றதைப்போல் அவர்களெல்லோரும் மகிழ்ந்தனர்.
இசை ஞானியைப் பாராட்டியதுடன், அவர் முதல்முறையாகச் சிம்பொனி வெளியிட்டபோது (1993ல் லண்டனில்), ஓடி வந்து முதல் ஆளாக வாழ்த்துச் சொன்னவரும் சுப்புடுதான்!
எத்தனை முறை மேடைகள் ஏறி எவ்வளவுதான் அனுபவம் பெற்றிருந்தாலும், முதல் வரிசையில் சுப்புடு சார் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டால், சிறப்பான கலைஞர்களும் சற்றே விக்கித்துத்தான் போவார்களாம்! ஏனெனில், சிறு தவறு நேர்ந்தால்கூட அதனைச் சரியாகக் கண்டுபிடித்துக் கிழித்துத் தொங்க விட்டு விடுவாராம் நம் விமர்சக பிதாமகர்!
பல பெரும் புகழ் படைத்த முக்கியமானவர்கள்கூட அவர் இருப்பதைப் பார்த்துவிட்டால், ரொம்பவும் உஷாராகி விடுவார்களாம். 90 வயது வரை வாழ்ந்த சுப்புடு அவர்கள் (27-03-1917 – 29-03-2007) 2007 ல் இவ்வுலகிலிருந்து விடை பெற, ஏற்பட்ட வெற்றிடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை.
டெல்லியில் அவர் இறந்ததும், அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் உடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதிலிருந்தே சுப்புடுவின் புகழை உணரலாம். கலாம் அவர்கள்தான் இசை விமர்சகருக்கான விருதையும் அவருக்கு வழங்கினார்.
சுப்புடுவின் பார்வையில்,1960 லிருந்து இசையுலகம் மெல்லத் தேய்ந்து 2000 க்குப் பிறகு மேலும் மோசமடைந்து விட்டது என்கிறார். ஒருமுறை பிரபல நடனமணியின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்க, அவர் கோபமுற்று 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தாராம். நீதி மன்றத்தில் அது எடுபடாது போனது வேறு விஷயம்.
ஒரு பிரபல கர்நாடக வித்வான், ஓகோ என்று இருந்த காலம். அவர் முன் உட்காரக் கூட மற்றக் கலைஞர்கள் தயங்குவார்களாம். ஆனால், அவர் கச்சேரிகளில் செய்கின்ற சிறு தவறுகளையும் சுட்டிக்காட்டி சுப்புடு விமர்சிப்பாராம்.
ஒருமுறை அந்தக் கலைஞரே, ”நானும் வருஷா வருஷம் வெக்கமில்லாம பாடிண்டிருக்கேன்! நீயும் வெக்கமில்லாம வருஷா வருஷம் எழுதிண்டிருக்கே!” என்று நேருக்கு நேராகச் சொன்னாராம்.
விமர்சிப்பதில்தான் பொறி பறக்குமாம்! கலைஞர்கள் சுப்புடுவைச் சந்திக்கையில் அன்புடனும், அக்கறையுடனும் விசாரித்து, நகைச்சுவை உணர்வுடன் பாசத்தையும் பொழிய அவர் தவறியதில்லையாம்!
மார்கழி என்றதும் மனதை நிறைப்பவர் சுப்புடுதான்! ஆண்டுகள் தோறும் மார்கழி வரும், அத்தோடு அவர் நினைவுகளும் வரும்!கலைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை விமர்சித்தவர்களுக்கும் என்றும் அழிவில்லை! அந்த விதத்தில், கல்கி ஐயாவும், சுப்புடுவும் என்றும் நம் மனதில் நிற்பவர்கள்! நெஞ்சத்தை நிறைப்பவர்கள்! வாழட்டும் அவர்கள் புகழ்! அவர்கள் வழியில் நல்ல விமர்சகர்கள் தோன்றட்டும்!