காரைக்குடியின் அடையாளமாக விளங்கும், ‘ஆயிரம் ஜன்னல் வீடு’ சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒன்று. சுமார் 20,000 சதுர அடியில் விசாலமாக அமைந்துள்ளது. 1941ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டில் 25 பெரிய அறைகளும், 5 பெரிய கூடங்களும், 20 கதவுகளும், 100 ஜன்னல்களும் உள்ளன. இதன் கட்டுமான கலையழகும், பிரம்மாண்டமும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆத்தங்குடி எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆயிரம் ஜன்னல் வீடு. இந்த ஆத்தங்குடி கிராமம் கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பிலபலமானது. சிமெண்ட், மணல், சிந்தடிக் ஆக்சைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் இந்த ஓடுகள் முதலில் வடிவமைக்கப்பட்டு பின்பு வெயிலில் நன்கு காய வைத்து கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பலவித வண்ணங்களில் செய்யப்படுவது இதன் தனிச் சிறப்பு. ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை அழகுபடுத்த இந்த ஓடுகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.
ஆத்தங்குடி பங்களா, கானாடுகாத்தான் அரண்மனை, கொத்தமங்கலம் பெரிய வீடு, ஆயிரம் ஜன்னல் வீடு ஆகிய எல்லா வீடுகளுமே நான்கு கட்டு, ஐந்து கட்டு என்றும், தூண்கள், தாழ்வாரங்கள், முற்றங்கள், ஜன்னல்கள் என்று ஒரு சாதாரண வீடே இரண்டு தெருக்களின் நீளத்துக்கு இருக்கும் என்றால் அதன் பிரம்மாண்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
காரைக்குடியைச் சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட இதுபோன்ற வீடுகள் உள்ளன. செட்டிநாடு கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல மாளிகைகளும், அரண்மனைகளும் மிகவும் பழைமையானவை. 100 வருடங்கள், 150 வருடங்கள் என ஒவ்வொரு மாளிகையும் காலம் கடந்து நிற்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்லாமல், பர்மா, மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் தாங்கள் செல்வத்தை ஈட்டினாலும் அவர்களின் பூர்வீக வீடுகள் செட்டிநாட்டில்தான் உள்ளன. இந்த அரண்மனைகள் முழுக்க முழுக்க மிக விலை உயர்ந்த பொருட்களால் இழைக்கப்பட்டுள்ளன. பர்மா தேக்கு மரத்தால் ஆன கதவுகளும், தூண்களும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. பெரிய பெரிய தூண்கள் கொண்ட நடைபாதைகள், பளிங்கு தரைகள், நகாசு வேலைபாடுகளுடன் அமைந்த வீடுகள் நம் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்றன. அதுவும் காரைக்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கானாடுகாத்தான் எனும் கிராமத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அரண்மனையில் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
இதுபோன்று நிறைய மாளிகைகள் இங்கு உள்ளன. ஒவ்வொன்றும் செட்டிநாட்டு பாரம்பரியத்தை, கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. அவற்றில் பல மாளிகைகளுக்குள் நாம் சென்று பார்க்க அனுமதி உண்டு. காலை முதல் மாலை வரை இந்த மாளிகையை சென்று சுற்றி பார்க்கலாம். அதற்குக் கட்டணமாக சிறு தொகையை வசூலிக்கிறார்கள்.
செட்டிநாடு, கோட்டையூர், காரைக்குடி, கானாடுகாத்தான் ஆகிய ஊர்களில் பிரம்மாண்டமான வீடுகளை பார்க்க முடியும். இந்த வீடுகளின் கட்டடக்கலை உலகப் புகழ் பெற்றவை. தங்கள் வீட்டு விசேஷங்களை வீட்டிலேயே வைத்து நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் செட்டியார்கள். அதனால் வீடே பெரிய மண்டபம் போல் காட்சி அளிக்கும். இந்த வீடுகளில் குறைந்தது முப்பது அறைகளாவது இருக்கும். ஒவ்வொரு தூண்களும் கலையம்சம் பொருந்தியதாக இருக்கும். முன்வாசல் கதவுகள் நுட்பமான மர வேலைப்பாடுகள் நிரம்பியதாக இருக்கும். மற்றொரு சிறப்பு வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் அழகாக பதிக்கப்பட்டு இருக்கும். சில மாளிகைகள் இடிந்து உரிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன. ஒரு சில மாளிகைகள் ஹோட்டல்களாகவும், அருங்காட்சியகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த அரண்மனைகளை சுற்றிப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாக பாரம்பரியத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.