நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் அம்பாசமுத்திரம் ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சிங்கம்பட்டி அரண்மனை சமஸ்தானம் உள்ளது. இந்த அரண்மனை 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அரண்மனையில் ஜமீன்தார் குடும்ப வாரிசுகள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மன்னர் தீர்த்தபதி மகாராஜா காலத்தில் இருந்த ஒரு பெரிய தர்பார் மண்டபம் இன்றும் உள்ளது. இதன் அருகில் மன்னரை காண வரும் பார்வையாளர்களுக்கு காத்திருப்பு மண்டபமும் உள்ளது. மன்னரின் வீர தீர செயல்களை பாராட்டும் வகையில் பட்டயங்கள், படங்கள், நூல்கள், ஓவியங்கள் என ஹால் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. தற்போது இந்த மண்டபத்தில் உள்ளூர் பொதுமக்கள் தங்கள் வீட்டு சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு பகுதி முழுவதும் கலைப்பொருட்கள், சிலைகள், மன்னர் பயன்படுத்திய உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள் பேணி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த மன்னர் காலம் கிபி 1100 ஆம் ஆண்டு. 1952 இல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரும் வரை 74 ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த ஜமீனுக்கு சொந்தமாக இருந்தது. இப்போது அரண்மனையும் எஞ்சிய சில நிலப்பகுதிகளும் உள்ளன.
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகட்ட நிலம் தானமாக வழங்கியதால் மன்னரின் பெயரான தீர்த்தபதி பெயரில் மருத்துவமனையும் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. தந்தை தீர்த்தபதி மகாராஜா இறந்தபின் 1934 ஆம் ஆண்டு முருகதாஸ் தீர்த்தபதி ராஜா தனது இளம் வயதில் பட்டம் சூட்டிக்கொண்டார். அந்தக் காலத்தில் அவர் இலங்கை சென்று உயர் கல்வி பயின்றார்.
முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, வில்வித்தை, வாள் வீச்சு, துப்பாக்கி சுடுதல், வர்மக்கலை இவற்றில் சிறந்து விளங்கினார். ஆடி அமாவாசை அன்று மகாராஜா தனது பாரம்பரிய உடையில் பொது மக்களுக்கு காட்சி தருவார். சொரிமுத்தையனார் கோவில் உட்பட 8 கோவில்கள் சமஸ்தானம் வசம் உள்ளன.
இதன் பரம்பரை அறங்காவலர் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா இருந்து வந்தார். 1983இல் ஈழ போர் உச்சகட்ட நிலையில் இருந்தபோது விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இங்குள்ள வனப்பகுதியிலும் சில காலம் தங்கி பின்னர் அரண்மனையில் ராஜாவின் விருந்தினராக தங்கி இருந்தார் என வக்கீல் கே எஸ் ராதாகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா மரணத்துக்குப் பின் இந்த ஜமீன் முடிவுக்கு வந்துவிட்டது. இங்கு 'சீம ராஜா', 'அவன் இவன்' போன்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. இன்றும் அரண்மனை கம்பீரமாக காட்சி அளிக்கிறது.