ஒரே தலத்தில் நான்கு நிலைகளில் பெருமாளை தரிசிக்கக் கூடிய கோவில்...

Thiruneer malai
Thiruneer malai
Published on

சென்னைக்கு அருகில் 2000 வருடம் பழமையான பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் பெருமாளை நான்கு விதமான வடிவங்களில் தரிசிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

சென்னை பல்லாவரத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருநீர்மலை. இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். மலையடிவாரத்தில் ஒரு பெருமாள் சன்னதியும், மலைக்கு மேலே மூன்று பெருமாள் சன்னதிகளும் இருக்கின்றன. ஒரே இடத்தில் நான்கு பெருமாள் சன்னதிகள் இருக்கும் கோவில் திருநீர்மலை மட்டுமேயாகும். 

ஒருமுறை திருநீர்மலையில் இருக்கும் பெருமாளை தரிசிப்பதற்காக திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தார். அப்போது மலையை சுற்றி நீர் இருந்தது. திருமங்கையாழ்வாரால் அந்த நீரைக் கடந்து சென்று பெருமாளை தரிசிக்க முடியவில்லை.

திருமங்கையாழ்வார் பெருமாளை தரிசித்துவிட்டுதான் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து திருநீர்மலைக்கு எதிரேயுள்ள மலையில் தங்கினார். நாட்கள் உருண்டோடின. இருப்பினும் தண்ணீர் சிறிதுக்கூட குறைவில்லை.

எனினும், பெருமாளை தரிசிக்காமல் இவ்விடத்தை விட்டு போவதில்லை என்று உறுதியாக இருந்தார் திருமங்கையாழ்வார். பல நாட்களுக்கு பிறகு நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்ற தொடங்கியது. நீர் குறைந்ததும் பெருமாளை தரிசிக்க சென்றார் திருமங்கையாழ்வார். இதனால் மனம் குளிர்ந்த பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு திருநீர்மலையில் தனது நான்கு கோலத்தை காட்டி காட்சித் தந்தார்.

தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ண பெருமாளாகவும், இருந்த கோலத்தில் நரசிம்மராகவும், சயனக்கோலத்தில் ரங்கநாதராகவும், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாளாகவும் நான்கு கோலங்களில் காட்சித் தந்தார். 

இந்த நால்வரையும் இக்கோவிலில் தரிசிக்கலாம். நீர்வண்ண பெருமாளை மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலில் தரிக்கலாம். ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாளை மலையில் இருக்கும் கோவிலில் தரிக்கலாம். நீர் சூழ்ந்த இடத்தில் பெருமாள் இருந்ததால் இந்த பெருமாளுக்கு நீர்வண்ண பெருமாள் என்றும் இந்த தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் வந்தது.

இத்தகைய தனித்துவம் வாய்ந்தக் கோவிலுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று தரிசித்து விட்டு வருவது சிறப்பைத் தரும்.

இதையும் படியுங்கள்:
முருகனுக்கு சுருட்டு நிவேதனமாக வைக்கப்படும் விராலிமலைக் கோவில்! காரணம் என்ன?
Thiruneer malai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com