கூகுள் டூடுளில் இன்று அக்கார்டியன் இசைக்கருவி!

Google Doodle
Google Doodle

கேலிப்படம் (Doodle) வரைவது என்பது தற்போது தோன்றியதில்லை, நம் முன்னோர்கள் குகைச் சுவர்களில் இலை, தழைகளைக் கொண்டு எளிமையான அடையாளங்களை வரையத் தொடங்கிய போதே கேலிப்படம் தோற்றம் பெற்றுவிட்டது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக, கதாநாயகர்கள், நிகழ்வுகள், பண்பாடுகள், இடங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டாடும் நிகழ்வாக, கேலிப்படங்கள் (Doodles) அமைப்பது வளர்ச்சியடைந்திருக்கிறது.

கூகுள் வலைத்தளத்தின் முதன்மைப் பக்கத்தில் ஒவ்வொரு நாளுக்குமான சிறப்புகளை, பன்னாட்டு அளவில், நாடுகள் அளவில் வெளிப்படுத்தும் விதமாக, கேலிப்படங்கள் உருவாக்கப்பட்டு நாள்தோறும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. கூகுள் வலைத்தளத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான இலச்சினைக் கேலிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

1998 ஆம் ஆண்டில் கூகுளின் முதல் கேலிப்படம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, 2000 ஆம் ஆண்டு மே 1 முதல் கூகுள் இலச்சினையின் வழியாக, பல்வேறு நிகழ்வுகள், பண்பாடுகள், இடங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வழியில் இன்றைய (மே 23) நாளில், அக்கார்டியன் (Accordion) எனும் இசைக்கருவி கூகுளின் இலச்சினைக் கேலிப்படமாக (Doodle) இடம் பெற்றிருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டறியப்பட்ட அக்கார்டியன் இசைக்கருவிக்கு, வியன்னாவைச் சேர்ந்த சிரில் டாமியன் (Cyrill Demian ) என்பவர் 1829 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாளில் காப்புரிமை பெற்றார். தற்போது பயன்பாட்டிலிருந்து வரும் நவீன அக்கார்டியன் கருவிகளுடன், சிரில் டாமியன் காப்புரிமை பெற்ற அக்கார்டியன் கருவி சிறிய அளவிலான ஒற்றுமையையேக் கொண்டிருக்கிறது.

அக்கார்டியன் என்பது கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு காற்றிசைக் கருவியாகும். இதிலுள்ள காத்தூதிகளை கையால் இயக்கினால், காற்றானது உள்ளிருக்கும் மாழைத்தகடுகளை அதிர்வடையச் செய்து ஒலி எழுப்பும். இந்த இசைக்கருவியில் உயர் சுருதி (Higher Pitch) ஒலிகளை எழுப்பும் தகடுகளை வலக்கை இயக்குகிறது. இடக்கை காற்றூதியையும் (Bellows), குறைவான சுருதி (Lower Pitch) ஒலிகளை எழுப்பும் பொத்தானைகளையும் இயக்குகிறது.

இதையும் படியுங்கள்:
ஓவியக் கலை ரசிகர்களுக்கான ஓவியக் கலைக்களஞ்சியத் தளம்!
Google Doodle

பேச்சுவழக்கில் இந்த இசைக்கருவி அமுக்குப்பெட்டி (Squeezebox) என அழைக்கப்படுகிறது. கான்செர்டினா, ஆர்மோனியம் மற்றும் பேண்டோனியன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். இவையனைத்தும் ஒரே ஆர்மோனியக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ஆனால், ஆர்மோனிய இசைக்கருவிகள் அக்கார்டிய வகை இசைக்கருவிகளை விடப் பெரியவை. மேலும் அவை நிலையாகத் தரையின் மேல் அமைக்கப்பட்டிருக்கும்.

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு வாழ்வாதாரம் தேடிப் புலம் பெயர்ந்தவர்களின் வழியாக, அக்கார்டியன் இசைக்கருவி இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, டொமினிகன் குடியரசு, மெக்சிகோ மற்றும் பனாமா நாடுகளின் பிரபலமான இசையில் இக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இசைக்கருவி அர்ஜென்டினாவில் சாமமே, பிரேசிலில் கவுச்சோ, ஃபோர்ரோ மற்றும் செர்டனேஜோ, கொலம்பியாவில் வல்லேனாடோ, டொமினிகன் குடியரசில் மெரெங்கு, மற்றும் மெக்ஸிகோவில் நார்டெனோ வகை நடனம், பாப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புற இசைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com