தேனி மு.சுப்பிரமணி
தேனி மு. சுப்பிரமணி
தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.