அச்சு பிச்சு தெரியும், 'மச்சு பிச்சு' தெரியுமா?

Machu Picchu
Machu Picchu
Published on

- கமலா முரளி

சற்று வெகுளியாக, ஒன்றும் தெரியாமல் இருப்பவர்களை, 'அச்சு பிச்சு' என்று சொல்வது உண்டு. ஆனால், 'மச்சு பிச்சு' என்றால் என்ன? பார்ப்போமா குட்டீஸ்?

மச்சு பிச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, அதிசயமான, பல சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு நகரம்! எங்கே இருக்கிறது மச்சு பிச்சு?

தென் அமெரிக்க நாடான பெருவில், செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கிட்டத்தட்ட 2400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த தொன்மை நகரம். பதினைந்தாம் நூற்றாண்டில், இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்டது இந்தப் பழமையான நகரம். 

’மச்சு’ என்றால் ’பழைய’ என்றும், 'பிச்சு' என்றால் ‘பிரமிடு' அல்லது 'கூம்பு போன்ற அமைப்பு’ எனவும் பொருள். இரு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்த நகரத்தை ‘மச்சு பிச்சு’ என அழைக்கின்றனர்.

இன்கா பேரரசர்கள் போரிட்டு, வெற்றி வாகை சூடி , நாடு திரும்புகையில், வழித்தடத்தில் தங்குவதற்காக அமைக்கப்பட்ட தலமாக அறியப்படுகிறது. ஸ்பானிஷ் படைகள் இன்கா பேரரசைத் தாக்கிய பின், இந்நகரத்தில் யாரும் இருந்திருக்கவில்லை எனவும் தெரிகிறது.

கைவிடப்பட்ட, யாரும் வசிக்காத இந்நகரம் பல நூற்றாண்டுகள் யாருக்கும் தெரியாமலே இருந்துள்ளது. அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிரம் பிங்ஹாம் என்பவர் 1911 ஆம் ஆண்டு இந்த அதிசய மர்ம நகரத்தைப் பற்றி வெளியுலகம் அறியச் செய்தார்.

மச்சு பிச்சு நகரம் அடர்ந்த காட்டுக்குள், மிக செங்குத்தான மலைகளின் ஊடே அமைந்திருப்பதே ஒர் அதிசயம். உலர் கற்களால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களும் , அவைகளின் வடிவமைப்பும், ஒரு சிறு சமுதாயம் வாழக்கூடிய நகரக் கட்டமைப்பும்… தொழில்நுட்பமோ, இயந்திரங்களோ இல்லாத காலத்தில் எப்படி இத்தனை துல்லியமாக நகரத்தை வடிவமைத்தனர் என நம்மை வியக்க வைக்கிறது !

மச்சு பிச்சு நகரம், இரு பகுதிகளைக் கொண்டது. மலையின் மேலடுக்கில் நகரப்பகுதி. கீழடுக்கு  விவசாயம் மற்றும் தளவாட சேமிப்பு பகுதிகளாக பயன்பட்டுள்ளது. மேலும், கிழக்குப்பகுதி, மேற்குப்பகுதி, தெற்குப்பகுதி நகரங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு அவை, சதுர வடிவ கற்தளங்களால் பிரிக்கப்பட்டுள்ளன.

தெற்குப்பகுதியில் மிக அற்புதமான இறை வழிப்பாட்டு (சூரிய) கோவில் உள்ளது. அதை விட உயரத்தில் கம்பீரமாக படை வீடுகள், மேலும் அலங்கார அமைப்புகள், வான் ஆராய்ச்சிக்கான உயரமான ஆய்வு உச்சிகள், அரண்மனை வாசிகளுக்கான தங்குமிடங்கள், வேலையாட்களுக்கான தங்குமிடங்கள் மேலும், மிக நேர்த்தியாக வடிவமைக்கமைப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்பு! மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் பல படிகளாக அமைக்கப்பட்டு இருக்குமே, அது போல துல்லியமான கட்டடக்கலை. மேற்குப்பகுதியில் காணப்படும் முத்துவார கோவில் என அழைக்கப்படும் கோவிலும் சிறப்பானது.

இதையும் படியுங்கள்:
தஞ்சை பெரியகோயில் ரகசியங்களும் மர்மங்களும்: ஒரு அலசல்!
Machu Picchu

செங்குத்தான மலைப்பகுதியில் காணப்படும் மச்சுபிச்சு நகரம் அதனை நிர்மாணித்த கட்டடக்கலை வல்லுநர்களின் திறனைப் பறை சாற்றுகிறது.

சுமார் ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய அளவில் நகரம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே  மக்கள் வசித்ததை அவர்கள் வாழ்ந்த காலத்து ஆவணங்கள் ஏதும் இயம்பவில்லை எனினும், அகழ்வாய்வில் கண்டெடுத்த பொருட்களைக் கொண்டும், மச்சு பிச்சு நகரத்தின் சற்றே உருக்கலைந்த கற்கட்டடங்களின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது.

பெருவின் வரலாற்றுச் சின்னமாக 1982 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மச்சு பிச்சு நகரம், 1983 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமா? 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணையவழித் தேர்தலில், மச்சு பிச்சு 'புதிய ஏழு உலக அதிசயங்களில்' ஒன்றாகத் தேர்வு பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com