சமீபத்திய செயல்பாடுகள் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தமிழ்நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் எனுமிடத்தில் அமைந்துள்ள இத்தொல்லியல் களம் 126 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையிலிருந்து ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இக்களம் கி.மு 1600 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூரில் முதன் முதலாக 1876 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் என்பவர் அகழாய்வு நடத்தினார். அதன் பின்னர், 1896 ஆம் ஆண்டிலும், 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரியா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்துப் பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். 2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
126 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன.
இங்கு கருப்பும் சிவப்பும் கலந்த பானையோடுகள், சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒரு பானையின் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக்களுடன்கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை 'கறிஅரவனாதன்' என்று படித்து 'நச்சுடைய பாம்பை மாலையாக அணிந்து கொண்ட சிவன்' என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன். ஆனால், அந்தத் தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி என்பவர், அதை 'கதிஅரவனாதன்' என்று படித்து, அதற்கு 'கதிரவன் மகன் ஆதன்' என்று பொருள் தருகிறார். ஆனால், அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும், அவை எழுத்துகள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் ஆய்வாளர்கள் சேட்டர்ஜியும் குப்தாவும் பதிமூன்று எலும்புக் கூடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டுள்ளனர். அந்த எலும்பு கூடுகளில் எட்டு ஆண்களின் மண்டை ஓடுகளும், ஐந்து பெண்களின் மண்டை ஓடுகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலனவை உடைந்தும் சிதைந்தும் உள்ளன.
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களேத் தென்னிந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும், அவர்கள் மத்திய தரைக்கடல் மக்கள், தென்னிந்தியா என்னும் பகுதி வரும் முன்னர் இருந்தே, அங்கு வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஆய்வாளர் செரோம் சேக்கப்புசன். மேலும், செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த எலும்புக் கூடுகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்த சூக்கர்மேனும் சுமித்தும் அவற்றுள் ஒரு மண்டை ஓடு முந்து ஆஸ்த்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகவும், மற்றொரு மண்டை ஓடு மத்திய தரை கடல் மண்டை ஓடு என்றும் கணிக்கின்றனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சீவலும், குகாவும் அவை சிந்துசமவெளியின் மொகஞ்சதாரோவில் கிடைத்த முந்து ஆஸ்த்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகக் கூறியுள்ளனர்.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905 என்றும், மற்றொன்றின் வயது கி.மு. 791 என்றும் தெரிய வந்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
குதிரைகளை பயன்படுத்த கற்றிருந்தனர்.
இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. (இப்பகுதியில் இன்றும் இரும்பு கருவிகள் விவசாய தளவாடங்கள் கால்வாய் கிராமத்தில் இன்றளவும் நடைபெறுவது குறிப்பிடதக்கது.)
முருகனை தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல் முருகு வழிபாட்டின் எச்சம்.
கொற்றவையை போரில் வெற்றி பெறவும் வெற்றியின் கடவுளாகவும் வழிபட்டனர்.
ஆதிச்சநல்லூர் மக்களின் இயலும் இசையும் போரின் வீரச்செயல்களை போற்றிப்பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்ப்பறையை சடங்குகளில் இசையாக வாசித்திருக்க வேண்டும்.
ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.
ஆதிச்சநல்லூரில் கடந்த 1876, 1902, 1905, 2004, 2005-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டினர் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பாக 5 கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்திய செயல்பாடுகள் :
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தக் கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017 ஆம் ஆண்டில் பொதுநல வழக்கு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து, பழங்காலப் பொருட்களைக் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதிகளில் மாநிலத் தொல்லியல் துறை சார்பில் 2020 ஆம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. அதன் பின்னர், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வுப் பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், தங்க நெற்றிப் பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு, ஆதிச்சநல்லூரில் இருந்து திருவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் ஐந்தரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார்.
தற்போதைய நிலையில் B Site எனப்படும் இரண்டாவது தலத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பகுதி, தல அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப் பெற்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல் தல அருங்காட்சியகமாக அமைந்த இந்த அருங்காட்சியகத்தைப் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் பார்வையிட்டு வருகின்றனர்.