

இந்திய வரலாற்றில் முகலாயர், ஆங்கிலேயர் போன்ற மையப் பகுதி ஆட்சியாளர்கள் அதிகம் பேசப் படுகின்றனர். ஆனால் 1228 முதல் 1826 வரை 598 ஆண்டுகள் அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் ஆட்சி செய்த அகோம் பேரரசு, இந்தியாவின் நீண்டகால ஆட்சியைக் கொண்ட வம்சமாக இருந்தும், வடகிழக்கு எல்லைப்பகுதியில் இருந்ததனால் வரலாற்றுப் பக்கங்களில் புறக்கணிக்கப்பட்டது என்பதை இந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் எண்ணற்ற சாம்ராஜ்யங்கள் எழுந்து விழுந்துள்ளன. ஆனால் வரலாற்று பக்கங்களில் முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்ததன் காரணமாக அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் இந்தியாவில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமை இந்தியாவின் வடகிழக்கு இந்தியாவை ஆண்ட வரலாற்று சிறப்புமிக்க வம்சத்தையே சேரும். அந்த சுவாரசியமான வரலாறையும் வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் இப்பதிவில் காண்போம்.
1228 -1826 வரை சுமார் 598 ஆண்டுகள் அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை அகோம் பேரரசு (Ahom Kingdom) ஆட்சி செய்துள்ளது. முகலாய மன்னர்கள், மௌரியர்கள், குப்தர்கள்,டெல்லி சுல்தான்கள், ஆங்கிலேயர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆட்சி செய்த காலங்களைவிட அகோம் பேரரசின் ஆட்சி காலமே மிகவும் நீளமானதாகவும் ஆழமானதாகவும் பார்க்கப்படுகிறது.
தாய் வம்சாவளியை சேர்ந்த `சுகப்பா` (Sukhaphaa) என்ற இளவரசர் பாட்காய் (Paykai) மலைகளைக் கடந்து அசாமிற்குள் தனது ஆதரவாளர்கள் சுமார் 9000 பேருடன் நுழைந்து ராஜ்யத்தை நிறுவினார். பல தலைமுறைகளாக முகலாயர்களின் படையெடுப்புகளை முறியடித்து வெற்றிகரமாக திகழ்ந்த இந்த பேரரசின் தலைநகரமாக ஜோர்ஹாட் நகரம் விளங்கியது. 1826 ல் இறுதியாக நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய - பர்மிய போரின் முடிவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
பெரும்பாலும் கங்கைச் சமவெளி, தக்காண பகுதிகளான மகதா, டெல்லி, ஆக்ரா, மும்பை, கல்கத்தா என இந்திய வரலாறு இதனை மையப்படுத்தியே எழுதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் ஆட்சி செய்த வரலாறுகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. சுந்தர புருஷர்களாக இந்தியாவின் மையப் பகுதியை ஆட்சி செய்தவர்களே திகழ்ந்து வருகின்றனர்.
டெல்லி அதிகாரத்தை அகோம் பேரரசு குறி வைக்காமலும் முகலாயர்களுடன் நேரடியாக போர் புரியாமலும் இருந்ததால்தான் பிரசித்தி பெற்று விளங்கவில்லை. இதனால் தான் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறாமல் போயினர். ஆனால் இந்தியாவின் மையப் பகுதியை ஆட்சி செய்தவர்களைவிட அதிக காலம் ஆகும் பேரரசு ஆட்சி செய்துள்ளது.
1228-1826 வரை ஆகோம் பேரரசு ஆட்சி செய்த அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சோழர்கள். பாண்டியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர பேரரசு, நாயக்க வம்சங்கள், மராத்தியர்கள், முகலாயர்கள் மற்றும் மூன்று நான்கு ஐரோப்பிய சக்திகள் என பல்வேறு ஆட்சியாளர்களின் பிடியில் மாறி மாறி பயணித்து கடைசியாக ஆங்கிலேயர்களின் வசம் வந்தது.
போர்த்துக்கேய படையெடுப்பும் இந்திய வரலாற்றில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. இந்தியாவில் நுழைந்த முதல் ஐரோப்பியர்களாகவும் கடைசியாக வெளியேறிய காலனித்துவ சக்தியாகவும் இருந்த போர்த்துகேயர்கள் 1505-1961 வரை சுமார் 456 ஆண்டுகள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இறுதியாக 1961 டிசம்பர் 19ஆம் தேதிதான் கோவாவை விட்டு வெளியேறினர். கோவா, டையு, டாமன் என ஆங்கிலேய பேரரசுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய பகுதியில் மட்டுமே ஆட்சி செய்தனர்.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலமான 190 வருடங்கள் அதாவது பிளாசி போர் தொடங்கி இந்திய பாகிஸ்தான் பிரிவினை வரையிலான காலகட்டத்தை விட போர்த்துக்கேயர்களின் ஆட்சி காலம் இரண்டு மடங்கு அதிகமானது. கோவா, கடற்கரைகள், தேவாலயங்கள் காலனித்துவ கட்டிடக்கலை என சுற்றுலா சார்ந்த அடையாளமாகவே போர்த்துக்கேயர்களின் வரலாறு மக்கள் மனதில் சுருங்கி நிலைத்துவிட்டது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியான அசாமில் ஆட்சி செய்ததன் காரணமாக அகோம் பேரரசு நீண்ட காலம் ஆட்சி செலுத்தி இருந்தாலும் மையப்பகுதியில் ஆட்சி செய்த பேரரசுகளைவிட முக்கியத்துவம் பெறாமல் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறாமலும் மறைந்து விட்டது. இதிலிருந்து இந்தியாவின் மையப் பகுதியில் இருந்தவர்கள் மட்டுமே வரலாற்று பக்கங்களில் இடம்பெற்றும் ஓரங்களில் ஆட்சி செய்தவர்கள் மறைக்கப்பட்டதும் தெளிவாகத் தெரிகிறது.