பெருமைமிகு துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்த ஆலம்பரை கோட்டை!

Proud Alamparai Fort
Proud Alamparai Fort
Published on

சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 106 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கடப்பாக்கம் என்ற ஊர். இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலம்பரைக்கோட்டை. கடப்பாக்கத்திற்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் கடப்பாக்கம் குப்பம் தீவு போன்று அமைந்துள்ளது. ஊரின் உள்ளே கோட்டை, கோட்டையின் கீழ்த்திசையில் உப்பங்கழி (Back Water Area), உப்பங்கழியில் படகுத் துறை, அதைத் தாண்டி மணல் திட்டு, அதற்கு அப்பால் கடற்கரை அமைந்துள்ளது.

கடற்கரைக்கு உப்பங்கழியின் வழியே நடந்தே செல்லும் வண்ணம் மணல்மேடு தனிப்பட்ட புவியியல் அமைப்பு உள்ளது. முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி (ஆற்காடு நவாப் - ஐதராபாத் நிசாம்) டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது.

கர்நாடகம் என்பது தற்கால ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் குறிக்கின்றது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால், உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப் பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது.

நிசாமின் மருமகன் சந்தா சாகிபும், ஆற்காடு நவாப் அன்வாருதீன் முகமதுகானும் கர்நாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரிட்டானிய கிழக்கிந்திய கம்பெனியும் களமிறங்கின.

கி.பி.1735ல் நவாப் தோஸ்த் அலிகான் இக்கோட்டையை ஆண்டார். கி.பி. 1750ல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதி டியுப்ளக்சுக்கு, சுபேதார் முசாபர்ஜங் இந்தக் கோட்டையைப் பரிசளித்தார். கி.பி. 1760ல் பிரெஞ்சு படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப் படை, இக்கோட்டையைக் கைப்பற்றி சிறிதளவு சிதைத்து விட்டது. சிதைவுகளின் மிச்ச சொச்சம், சில ஆண்டுகள் முன்பு வரை நம் கண் முன் காட்சி அளித்துக்கொண்டிருந்தது.

இந்த எஞ்சிய பகுதிகளை கி.பி. 2004ம் ஆண்டு சுனாமி வந்து தகர்த்தது. கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை கோட்டை, பண்டைய நாளில் ஒரு துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் இப்பகுதி ‘இடைக்கழிநாடு’ எனப் பெயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தொப்பை கொழுப்பை 5 வழிகளில் குறைக்கும் சீரகம்!
Proud Alamparai Fort

18ம் நூற்றாண்டில் முகமதியர்களால் ஆலம்பரையில் கோட்டை கட்டப்பட்டது. செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டையின் கீழ்ப்புறம், படகுத்துறை ஒன்று, கப்பலுக்குப் பொருட்களை ஏற்ற, இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத்துறையின் நீளம் சுமார் 100 மீட்டர். அவற்றின் பகுதிகள் இப்போதும் காணப்படுகின்றன. ஆலம்பரைப் படகுத் துறையிலிருந்து சரிகைத் துணி வகைகள், உப்பு, நெய் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஆலம்பரையில் அமைந்துள்ள நாணயச்சாலையில் ஆலம்பரைக் காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த நாணயச் சாலையின் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன், கிழக்குக் கடற்கரை வழியாக காசி, ராமேஸ்வரத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்காக ஒரு சிவன் கோயில், பெரியகுளம், சத்திரம் ஆகியவற்றைக் கட்டினார். இந்தப் பெருவழி, இப்போது கோட்டைக்கு மேற்கில் 2 மைல் தொலைவில் செல்கிறது. இந்தப் பகுதியை தமிழ்நாடு தொல்லியல்துறை இப்போது பராமரித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com