தமிழகத்தில், கண்டுகளிக்க எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. சுற்றுலா செல்ல நினைப்பவர்கள், முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப் பாருங்கள். இந்த சுற்றுலா, நம் முன்னோர்களின் சிற்பக்கலைத் திறமைகளை அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக அமையும். ஆம், இது சாத்தியமா என்று வியக்க வைக்கும் அளவுக்கு கலைத்துறையில் பல சாதனைகளை புரிந்துள்ளனர் நம் முன்னோர்கள். அவை, பல நூற்றாண்டுகள் கடந்தும், கம்பீரமாய் காட்சியளிக்கின்றன. குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமான கோயில்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் என நான்கு வகையான சிற்பக்கலை வடிவமைப்புகள் காணப்படும், ஒரே இடமான மாமல்லபுரம் உருவான வரலாற்றைப் பற்றி இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது மாமல்லபுரம் என்றழைக்கப்படும் மகாபலிபுரம். இது, 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் சிறுவயதில், தன் தந்தை மகேந்திர வர்மனுடன் மாமல்லபுர கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாறையின் நிழல் யானை போலவும், ஒரு குன்றின் நிழல் கோவில் போலவும் காட்சியளித்ததைக் கண்டு வியப்புற்றார்.
"இந்தக் குன்றினை கோவிலாகவும், இந்தப் பாறையை கோவில் முன் நிற்கும் யானையாகவும் மாற்றினால் சிறப்பாக இருக்குமே" என்று தந்தையிடம் கூறினார். "அதுமட்டுமல்ல மகனே, இங்குள்ள அனைத்துப் பாறைகள் மற்றும் குன்றுகளையும் நந்தி, சிங்கம் என மாற்றி, இந்தக் கடற்கரையையே ஒரு சிற்பக்கலை கூடமாக மாற்றி விடலாம்" என்றார் தந்தை. மற்போரில் சிறந்து விளங்கியதால், நரசிம்மவர்மனுக்கு "மாமல்லன்" என்ற சிறப்பு பெயருண்டு. நரசிம்மவர்மன் மனதில் உதித்த சிந்தனையால் எழுந்த சிற்பக்கலை கூடமாதலால், அவரின் பெயரால் மாமல்லபுரம் என்றழைக்கப்படுகிறது.
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தேர் போன்ற வடிவமைப்பைக் கொண்ட இரதக்கோயில், காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இங்குள்ள 2 பாறைகளில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் உயிருள்ளவை போல் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இவற்றிற்கு புடைப்புச் சிற்பங்கள் என்று பெயர். கண்களை மூடி இரு கைகளையும் உயர்த்தி வணங்குவது போல் இருக்கும் சிற்பம், அர்ச்சுனன் தவம் செய்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அர்ச்சுனன் தபசு என்றும், பகீரதன் தவம் என்றும் பெயர். மேலும் இங்கு இரு பாறைகளுக்கு இடையே, ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இதன் வழியே மழைநீர் பாய்ந்து வரும்.
ஒற்றைக்கல் யானை, சிங்கம், புலி, அன்னப்பறவை, உடும்பு, குரங்குகள் மற்றும் முகவாயை சொறிந்து கொண்டிருக்கும் மான் என அனைத்துச் சிற்பங்களும் உயிருள்ளவை போல் செதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, புலிக்குகை, திருக்கடல் மல்லை, கண்ணனின் வெண்ணெய்ப் பந்து, கலங்கரை விளக்கம் என அனைத்தும் காண்போரை கவர்ந்திழுக்கும் அதிசயங்கள் நிறைந்தவை. வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு நீங்களும் ஒருமுறை மாமல்லபுரத்திற்கு சென்று வாருங்கள்.