அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், டல்லாஸ் நகரில் உள்ளது ஆறாவது மாடி அருங்காட்சியகம் (ஸிக்ஸ்த் ஃப்ளோர் மியூசியம்). இந்த அருங்காட்சியகம் 1989ம் வருடம் திறக்கப்பட்டது. உலகமெங்குமிருந்தும் வருடத்திற்கு சுமார் மூன்றரை லட்சம் மக்கள் இந்த அருங்காட்சியகத்தைக் காண வருகின்றனர். இந்த மியூசியத்துக்கு ஏன் இப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள்? இந்த மியூசியத்தின் சிறப்பு என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
இந்த அருங்காட்சியகம், ‘டீலி ப்ளாசா’ என்ற மாவட்டத்தில், ‘டெக்ஸாஸ் ஸ்கூல் புக் டெபாசிடரி’ என்ற கட்டடத்தில் உள்ளது. இந்தக் கட்டடத்தின் ஆறாவது மாடியிலிருந்து தான் அன்றைய குடியரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடி, கொலையாளியால் சுடப்பட்டு மரணமடைந்தார். அவருடைய நினைவைப் போற்றும் வகையில் கொலையாளி மறைந்திருந்த ஆறாவது மாடியை அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார்கள்.
‘கென்னடியும் தேசத்தின் நினைவாற்றலும்’ என்ற தலைப்பில் 1960ல் அமெரிக்காவில் இருந்த அரசியல் மற்றும் சமுதாய சூழ்நிலை, அவர் சுடப்பட்ட பின்பு நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு, அமெரிக்க மக்கள் மத்தியிலும், உலக சமுதாயத்திலும் கென்னடி அவர்களால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை இந்த அருங்காட்சியகம் விவரிக்கிறது.
இந்த மியூசியத்தில் பார்வையாளர்களுக்கு ஒலிநாடா மற்றும் இயர்போன்கள் தருகிறார்கள். பார்வைக்கு வைத்துள்ள படங்களில் எண்கள் பொறித்தியிருக்கும். ஒலிநாடாவில், அந்த எண்ணை அழுத்தினால், அந்த படங்களைப் பற்றிய விவரங்கள் ஆங்கிலத்தில் ஒலிக்கும். கென்னடியின் வாழ்க்கை வரலாறு, கொள்கைகள், சுடப்பட்டவுடன் அவர் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மருத்துவமனை, பிடிபட்ட கொலையாளி விவரம், அரசு மேற்கொண்ட விசாரணை விவரங்கள் ஆகியவை இங்கே, காட்சிப்பொருளாக வைத்துள்ளார்கள்.
1917ம் வருடம் பிறந்த ஜான் எஃப் கென்னடி, ஜனநாயகக் கட்சியின் சார்பாக 1960ம் வருடம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் வயதில் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர். இந்தப் பதவிக்கு வந்த முதல் ரோமன் கத்தோலிக் பிரிவைச் சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த கென்னடி, இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றியவர். போரில் நிகழ்த்திய வீரச்செயலுக்காகப் பரிசு பெற்றவர்.
1962ம் வருடம் சோவியத் ரஷ்யா, அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக, அதன் அண்டை நாடான க்யூபாவில் அதனுடைய ஏவுகணைகளை நிறுத்தியது. அந்த ஏவுகணைகளை க்யூபாவிலிருந்து அப்புறப்படுத்தாவிட்டால், அணு ஆயுதங்களை உபயோகப்படுத்தத் தயங்க மாட்டேன் என்று கென்னடி சோவியத் அரசுக்கு விடுத்த எச்சரிக்கையால், அவை விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால் அமெரிக்க மக்களிடம், கென்னடியின் மதிப்பு கூடியது.
கம்யூனிசம் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார். அடிமைத் தளத்தை எதிர்த்தார். விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். போட்டி மனப்பான்மை இல்லாமல் அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் கருத்துத் தெரிவித்தார். உலக சமாதானத்திற்கு பாடுபட்டார்.
மூன்று வருடங்களே பதவியிலிருந்த கென்னடி, உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றார். இந்தியாவிற்கு நல்ல நண்பனாக விளங்கினார். கென்னடியின் கொலைக்கு, லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றபோது, ஜாக் ரூபி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசு ஏற்பாடு செய்த விசாரணைக் கமிஷன் ஆஸ்வால்ட் ஒற்றைக் கொலையாளி என்றும், இந்தக் கொலையில் சதித்திட்டம் எதுவும் இல்லையென்றும் கூறியது. ஆனால், இதை நம்ப மறுப்பவர்கள் அதிகம். கென்னடியின் கொலைக்கான காரணம், உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சதியினால் நடந்ததா என்பதற்கான பதில் இதுவரை இல்லை.
இந்த அருங்காட்சியகத்தில் கென்னடி சம்பந்தமான 40000க்கும் மேற்பட்ட சரித்திர ஆவணங்கள் உள்ளன. கென்னடியின் கொள்கைக்கு மாறுபட்டு, அவரை எதிர்த்தவர்கள் பற்றியும் விவரங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பெரிய அளவிளான கென்னடி மற்றும் அவர் துணைவியார் ஜாக்குலின் உள்ள ஒரு படம் வைக்கப்பட்டுள்ளது. கென்னடியின் படம் முழுவதும் சிறிய அளவிலான ஜாக்குலின் புகைப்படங்களாலும், ஜாக்குலின் படம் முழுவதும் சிறிய அளவிளான கென்னடியின் புகைப்படங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படத்தின் சிறப்பு.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள படிக்கும் அறையில் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், படச்சுருள்கள் உள்ளன. நினைவுப் பரிசுகள் வாங்கக் கடை உள்ளது. டெல்லாஸ் சென்றால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய அருங்காட்சியகம் இது.