முகத்தில் பச்சை, மூக்கில் மரக்குச்சி! இந்தியாவின் விசித்திரமான 'அபதானி' பழங்குடியினரின் மர்ம வரலாறு!

Apatani tribe - அபதானி பழங்குடியினர்
Apatani tribe - அபதானி பழங்குடியினர்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

அபதானி (Apatani) மக்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் வசிக்கும் தனித்துவமான பழங்குடியினர் ஆவார்கள். இயற்கை சார்ந்த விவசாய முறைகள், தனித்துவமான ஈர நெல் விவசாயம்-மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வண்ணமயமான ஆடைகள், மூங்கில் கைவினைத்திறன் மற்றும் தனித்துவமான முக அடையாளங்கள் ஆகியவற்றிற்காக இவர்கள் உலகளவில் அறியப்படுகிறார்கள்.

மூத்த தலைமுறைப் பெண்களின் முகத்தில் காணப்படும் பச்சை மற்றும் மூக்குச் செருகிகள் அவர்களின் முக்கியமான கலாச்சார அடையாளங்களாகும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம்:

அபதானிகள் உழவு விலங்குகள் அல்லது நவீன நீர்ப்பாசன முறைகள் இல்லாமல் நெல் மற்றும் மீன் வளர்ப்பை வெற்றிகரமாக செய்யும் பாரம்பரிய விவசாய முறையைக் கொண்டுள்ளனர். ஒரே நிலத்தில் நெல் மற்றும் மீன் வளர்ப்பை ஒருங்கிணைத்து உலகப் புகழ்பெற்ற நிலையான விவசாய முறையை உருவாக்கியுள்ளனர்.

காடுகளை அழிப்பதில்லை. நீர்நிலைகளை மிகக் கவனமாக பாதுகாத்து நீர்ப்பாசன முறையை சிறப்பாக நிர்வகிக்கின்றனர். இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி காடுகளையும் சுற்றுப்புறங்களையும் பாதுகாக்கின்றனர்.

பாரம்பரிய உடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள்:

மூங்கில் மற்றும் கரும்பு வேலைபாடுகளில் இவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள். கரும்பு மற்றும் மூங்கில்களைக் கொண்டு அழகிய கூடைகள், பாய்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை செய்கிறார்கள். நெசவுத்தொழிலில் தேர்ந்தவர்கள். சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக புனித ஆடைகளும், அன்றாட உடைகளும் தனித்துவமான வண்ண வடிவமைப்புடன் நெய்யப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஜப்பானின் பிரம்மாண்ட 'காபூகி' கலையின் பின்னணியில் இருக்கும் ரகசியங்கள்!
Apatani tribe - அபதானி பழங்குடியினர்

அபதானி பெண்கள் அணியும் வண்ணமயமான கைத்தறி ஆடைகள்(கோடுகள் மற்றும் வடிவியல் வடிவங்கள்) சடங்கு மற்றும் மத நிகழ்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பழங்குடியினரின் தனித்துவமான வாழ்க்கை முறைக்காக இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரியத்தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

முக அலங்காரமும் வரலாறும்:

கடந்த காலத்தில், அபதானி பழங்குடியினப் பெண்கள் பிற இனத்தவர்களால் கடத்தப்படுவதை தவிர்க்க, தங்கள் மூக்கின் இருபுறமும் பெரிய கருப்பு நிற மூக்குக் குச்சிகளைச் (Yaping Hullo) செருகும் மற்றும் முகத்தில் பச்சை குத்தும்(Tiipe) பழக்கத்தைக் கொண்டிருந்தனர். 1970 -களில் அரசாங்கம் இம்முறைக்குத் தடை விதித்தாலும், இந்தப் பழங்கால பாரம்பரியம் இவர்களது கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப் படுகிறது. வயதான பெண்களிடம் இந்த வரலாற்றுச் சின்னங்களைக் காணலாம்.

திருவிழாக்கள் மற்றும் சமூக அமைப்பு:

இவர்கள் சூரியனையும் சந்திரனையும் வணங்கும் டோனி போலோ (Donyi Polo) மதத்தைப் பின்பற்றுகிறார்கள். டிரீ (Dree) என்பது இவர்களின் முக்கிய விவசாயப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது பூமி அன்னை மற்றும் மனித குலத்தின் நலனுக்காக சிறப்பு சடங்குகள் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கொண்டாடப்படும் இத் திருவிழாவில் நல்ல விளைச்சல் வேண்டியும், பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காக்க வேண்டியும் இயற்கை தெய்வங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் நடனங்கள் நடத்தப்படுகின்றன.

Apatani tribe - அபதானி பழங்குடியினர்
Apatani tribe - அபதானி பழங்குடியினர்AI Image

மியோகோ (Myoko) மற்றும் முருங் (Murung) ஆகியன இவர்களின் முக்கிய திருவிழாக்கள் ஆகும். மார்ச் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா சமூக உறவுகளை புதுப்பித்தல், நட்பு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

சமூக நிர்வாகம் (புல்யான்):

இவர்களின் பாரம்பரிய கிராம சபைகள் புல்யான் (Bulyaun) என்று அழைக்கப்படுகின்றன. இவர்களது கிராமங்களை நிர்வகிக்க புல்யான் எனப்படும் பாரம்பரிய கிராம சபை அமைக்கப்பட்டு, சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணவும், சர்ச்சைகளை தீர்க்கவும் தன்னாட்சியுடன் செயல்படுகிறது.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், இயற்கை வளங்களைச் சீரழிக்காமல் எப்படி ஒரு சமூகம் செழிப்பாக வாழ முடியும் என்ற உன்னதமான வாழ்வியல் கலையையும், நவீனமயமாக்கலுக்கு மத்தியிலும் அழியாமல் இருக்கும் இந்தியாவின் மிக அரிய பழங்குடிப் பாரம்பரியத்தின் வரலாற்றுப் பின்னணியையும் நீங்கள் ஆழமாக அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com