இருளாக இருக்கும் ஒரு இடத்தில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் அந்த இடத்திற்கு வெளிச்சம் தருவது போல கலை என்பது மனிதர்களின் மனதிற்கு அழகையும் ஒளியையும் கொண்டுவரும் சக்தி படைத்தது. ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று உலக கலை தினம் கொண்டாடப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவை வரைந்த ஓவியர் லியானார்டோ டாவின்சியின் பிறந்த நாள்தான் உலக கலை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
லியானார்டோ டாவின்சி:
டாவின்சி கலை உலக மறுமலர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கு வகுத்த இத்தாலியக் கலைஞர் ஆவார். மிகச் சிறந்த ஓவியர், வரைவாளர், பொறியாளர், விஞ்ஞானி, கோட்பாட்டாளர், சிற்பி மற்றும் கட்டிடக்கலைஞர் என்ற பன்முகம் கொண்ட செயல்பாட்டாளர். கிட்டத்தட்ட 2500 வரைபடங்களில் உடற்கூறியல், வானியல், தாவரவியல், வரைபடவியல், ஓவியம் மற்றும் பழங்காலவியல் குறித்து குறிப்புகளை உருவாக்கினார்.
மோனாலிசா:
உலகப் புகழ் பெற்ற ஓவியமான மோனலிசா அதன் உயிரோட்டமான மற்றும் மர்மமான புன்னகைக்கு பெயர் பெற்றது. வரலாற்றில் மிகப் பிரபலமான ஓவியங்களில் ஒன்றாக இருக்கிறது.
தி லாஸ்ட் சப்பர்:
இயேசு தனது சீடர்களுடன் கடைசியாக உண்ட இரவு உணவைப் பற்றி விளக்கும் ஓவியம் இது. இதன் வியத்தகு அமைப்பு மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்காக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தனது படைப்புகளில் எதார்த்தத்தை மேம்படுத்த உடற்கூறியியலான அறிவியலை கலையுடன் இணைத்தார். மனித தசைகள் எலும்புகள் மற்றும் வெளிப்பாடுகள் பற்றி அவரது நுணுக்கமான அவதானிப்புகள் உருவ வரைபடங்களில் புதுமையான கோணத்தில் வெளிப்பட்டன. அவருடைய புதுமையான நுட்பங்கள் தலைமுறை தலைமுறையாக கலைஞர்களை வசீகரித்து வருகின்றன. அதனால் அவருடைய பிறந்த நாளை உலக கலை தினமாகக் கொண்டாடுவது மிகப் பொருத்தமாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்:
2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் 'A Garden of Expression: Cultivating Community Through Art.' கலையை ஒரு தோட்டத்துடன் ஒப்பிடுவதன் மூலம், படைப்பாற்றல் எவ்வாறு மக்களை ஒன்றிணைக்கவும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் புரிதலை வளர்க்கவும் உதவுகிறது என்று எடுத்துக்காட்டுகிறது.
மனித வாழ்வில் கலையின் முக்கியத்துவம்:
கலை என்பது தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு முக்கியமானது.
கலை பலவித நன்மைகளை ஒரு தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அளிக்கிறது. இது சுயவெளிப்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தனி நபர்களுக்கு உணர்ச்சி நல்வாழ்வு படைப்பாற்றல், மென்திறன் மற்றும் விமர்சன சிந்தனைத் திறன்களை ஊக்குவிக்கிறது. வெளிப்படுத்த முடியாத எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் கலை மக்களை இணைக்கிறது மற்றும் பிணைக்கிறது. ஒரு கதை, கவிதை அல்லது ஓவியத்தின் மூலம் ஒரு நபர் தனது உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கிறது. இதன் விளைவாக நல்லிணக்கம் மற்றும் அமைதி ஏற்படுகிறது.
ஒரு நாட்டில் கலையின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அது மக்களின் மதிப்புகள், கலாச்சாரம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டை வடிவமைக்க உதவுகிறது. தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மற்றும் ராஜதந்திரத்திற்கும் பங்களிக்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் வரை காட்சித் தொடர்பு வடிவம் கலை மட்டுமே. குகை ஓவியங்கள் இன்றும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து காலத்தைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக இருக்கின்றன. மனநிலை பிரச்னை உள்ள மனிதர்களுக்கு இது உதவியாக இருக்கிறது. தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் பாதுகாப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படுத்த கலை அனுமதிக்கிறது.
கலை வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு சக்தி வாய்ந்த அம்சமாகும். ஒவ்வொரு நாட்டிற்கும் கலை மிக முக்கியமானது. ஒரு நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை அழகியலை, வாழ்வை, நினைவுச் சின்னங்களை கலை பிரதிபலிக்கிறது