
தெலுங்கு இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யானம் மாநிலங்களில் அதிகாரப்பூர்வ மொழியாகும். இது அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் குறிப்பிடத்தக்க சிறுபான்மை சமூகங்களால் பேசப்படுகிறது. மேலும் இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது.
தனி மொழியாக தெலுங்கு உருவானது கி.மு. 5 - 6 நூற்றாண்டு காலத்தில் தான் நடந்துள்ளது. தெலுங்கு மொழி முதன்முதலில் 10 ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருத அடிப்படையிலான இலக்கியப் படைப்புகளில் தோன்றியது. பின்னர் பழைய தெலுங்கிலிருந்து, நடுத்தர தெலுங்கும் பின்னர் நவீன தெலுங்கு மொழியும் உருவாகியுள்ளது. தெலுங்கில் அறியப்பட்ட ஆரம்பகால கல்வெட்டுகள் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை மற்றும் ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தின் ஆஸ்ரமா குகைகளில் காணப்பட்டன.
சென்னையிலிருந்து கோல்கட்டா செல்லும் வழியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜ்முந்திரி என்ற நகரமே தெலுங்கு மொழி தோன்றிய இடமாக கருதப்படுகிறது. கோதாவரி நதியால் வளம் பெறும் நகரம் ராஜ்முந்திரி. தெலுங்கு மொழிக்கான தற்போது உள்ள எழுத்தையும், இலக்கணத்தையும் உருவாக்கியது நன்னய்யா என்பவர் தான். இவர் தெலுங்கு மொழியின் பாணினி என்று அழைக்கப்படுகிறார். இவர் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர். இதன் காரணமாகவே ராஜமுந்திரி நகரம் தெலுங்கு மொழி தோன்றிய இடமாக கருதப்படுகிறது.
ராஜ் மகேந்திரவரம், ராஜமகேந்திரி என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ராஜ்முந்திரி என்று மாறியது. தெலுங்கு மொழியில் வெளிவந்த முதல் நாவலான 'ராஜசேகர் சரிதம்' என்ற நாவலை எழுதியவர் ராஜ்முந்திரியில் பிறந்த கந்தூரி வீரேசலிங்கம்.
தமிழகத்தில் முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு பிறகு, விஜயநகரப் பேரரசின் ஆட்சி ஏற்பட்டது. வேலூர், தஞ்சாவூர், மதுரை, செஞ்சி போன்ற நகரங்களை விஜயநகரப் பேரரசின் ஆளுநர்களாக நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். தமிழகம் 366 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த காலத்தில் தான் ஏராளமான தெலுங்கு சொற்கள் தமிழில் கலந்தன. இன்று தமிழ் மொழியில் அதிகமாக பயன்படுத்தப்படும் பந்தயம், எச்சரிக்கை, ஏராளம், சொந்தம், தொந்தரவு, நிம்மதி, பண்டிகை, வாடகை, வாடிக்கை போன்றவை தெலுங்கு சொற்கள் தான்.
தெலுங்கு மொழி சொல்வளம் மிக்கது, இனிமை வாய்ந்தது என்பதால் தான் மகாகவி பாரதியார் தனது பாடல்களில் சுந்தர தெலுங்கில் பாட்டிசைத்து என்று எழுதினார். புகழ் பெற்ற சங்கீத கீர்த்தனைகளை எழுதிய தியாகராயர் தெலுங்கில் அதிகளவில் கீர்த்தனைகளை எழுதியுள்ளார்.
தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாகப் பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்துச் சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவடைகின்றன. எனவே தான் இம்மொழியின் இனிமையைக் கருதி ஆங்கிலேயர்கள் இதை கிழக்கின் இத்தாலிய மொழி (Italian of the East) என அழைத்தனர்.
ஆந்திர மாநிலத்திற்கு பிறகு தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கு வருடப்பிறப்பை யுகாதி பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். யுகாதி பண்டிகை சைத்ர மாதத்தின் முதல் நாள். இந்த நாளில் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் இந்தியக் கணிதவியலாளர் பாஸ்கராச்சாரியார் உகாதியை புத்தாண்டின் தொடக்கமாக கண்டறிந்தார். கடுமையான குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் அதாவது புதிய ஆண்டு தொடக்கத்தை உகாதி குறிக்கிறது.