காவல் நிலையத்தில் போடப்படும் FIR பற்றி உங்களுக்குத் தெரியுமா?

FIR
FIR
Published on

நாம் ஏதாவது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால் நமது புகாரைப் பெற்ற பிறகு மனு ரசீது ஒன்று நமக்கு வழங்கப்படும். பின்னர் நீங்கள் கொடுத்திருக்கும் புகாரின் தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அந்த விசாரணை மேற்கொண்ட பிறகு முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்படும். FIR பதிவு செய்த பிறகுதான் ஒரு வழக்கு முழுமை பெறுகிறது என்று அர்த்தம் எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன? அதை எப்படி பதிவு செய்வார்கள்? போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின்படி, ‘பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை’ ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப் படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்தத் தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
மழை துளிகளின் ரகசியம் தெரியுமா?
FIR

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும்.

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார்.

குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும். ஆனால், நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்ற நிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல் நிலைய அதிகாரிகள் தயங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல் நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com