செஞ்சி கோட்டையிலிருந்து பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்ட கலைநயமிக்க தூண்கள்!

Pondicherry Gandhi Statue
Pondicherry Gandhi Statuehttps://pondicherrytourism.co.in

பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள செஞ்சி கோட்டையின் தூண்கள் பாண்டிச்சேரி கடற்கரையிலுள்ள காந்திச் சிலைக்கு அருகில் உள்ளன. அவை எப்படி அங்கு வந்தன எனும் வரலாற்றைப் பார்ப்போம்.

நீங்கள் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைக்குச் சென்றால், அங்குள்ள காந்தி சிலை பிரம்மாண்டமாக கண்ணுக்குத் தெரியும். 13 அடி உயரமுள்ள காந்தி சிலை, ஆசியாவிலேயே மிகப்பெரிய காந்தி சிலையாகக் கருதப்படுகிறது. இது பிரபலமான சிற்பி ராய் சௌத்ரியால் வடிவமைக்கப்பட்டது. அது ஜனவரி 26, 1965ம் ஆண்டு நிறுவப்பட்டது. காந்தி சிலையைச் சுற்றி ஒரு கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான 8 தூண்களைக் காணலாம்.

இந்த கற்தூண்கள் நுணுக்கமான வேலைப்பாடுடையவை. இந்தத் தூண்கள் அங்கு அழகுக்காக வைக்கப்பட்டிருந்தாலும், அவை இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை அல்ல. இவை நாயக்கர் காலத் தூண்கள். இவை செஞ்சிக் கோட்டையிலிருந்து பிரஞ்சு படைகளால் பாண்டிச்சேரிக்கு கொண்டுவரப்பட்டவை. ‘யாராலும் உட்புக முடியாத கோட்டை’ என்று சிவாஜியால் அழைக்கப்பட்ட செஞ்சிக்கோட்டையை 1751ம் ஆண்டு, பிரஞ்சு தளபதி புஸ்ஸீ தலைமையிலான பிரஞ்சுப் படை ஒரே இரவில் கைப்பற்றியது. பின்னர், 1762ம் ஆண்டு வரையில், செஞ்சிக் கோட்டை பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகையின் கீழ் இருந்தது.

அப்போது, செஞ்சியிலிருந்து இந்த தூண்கள் மட்டுமல்ல, பல்வேறு சிலைகளும் பாண்டிச்சேரிக்குக் கொண்டுவரப்பட்டன. இந்த புஸ்ஸீ பிரஞ்சு கவர்னர் டூப்ளேவின் கீழ் பணிபுரிந்த தளபதி. இவர் ஏனாம் பகுதியினையும் பிரஞ்சுப் படையின் ஆதிக்கத்தின் கீழ் வர காரணமாக இருந்தவர். இவர் 1783 முதல் 1785ம் ஆண்டு வரையில் பிரஞ்சு கவர்னராகவும் இருந்தார். அவரது சமாதி பாண்டிச்சேரியில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இதுவரை இருந்த இந்திய பிரதமர்கள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!
Pondicherry Gandhi Statue

இந்தத் தூண்கள் செஞ்சிக் கோட்டை அடிவாரத்திலுள்ள வெங்கடரமணா கோயிலைச் சேர்ந்தவை. இந்தக் கோயில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது முத்தயாலு நாயக்கனால் (கிபி 1540 - 1550) வெங்கடரமணருக்காகக் கட்டப்பட்டது. இந்தக் கோயில் தூண்கள் பிரிக்கப்பட்டு பிரஞ்சுப் படையால் பாண்டிச்சேரிக்குக் கொண்டுவரப்பட்டன. மேலும், சில தூண்கள் 1860ம் ஆண்டு, நாயக்க வாரிசுகளின் அனுமதியுடன் சித்தாமூர் ஜெயின் கோயிலில் நிறுவப்பட்டன.

பாண்டிச்சேரியிலுள்ள தூண்கள் முதலில், டூப்ளே சிலைக்கு கீழே நிறுவக் கொண்டுவரப்பட்டன.  பின்னர், அவை காந்திச் சிலைக்கு அருகே நிறுவப்பட்டன. இந்தத் தூண்கள் மட்டுமல்ல, பாண்டிச்சேரி ராஜ்நிவாஸ் என்றழைக்கப்படும் பாண்டிச்சேரி கவர்னர் மாளிகை, பூங்கா போன்ற இடங்களிலும் செஞ்சியிலிருந்து தருவிக்கப்பட்ட சிலைகளைக் காணலாம்.

அடுத்த முறை பாண்டிச்சேரி செல்லும் போது, இந்தத் தூண்களை கவனிக்கத் தவறாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com