

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கோட்டைகள் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சுமந்து கொண்டு நிற்கின்றன. எதிரிகள் நுழைய முடியாத வகையில் சாம்ராஜ்யத்தை பாதுகாப்பதற்கு மன்னர்கள் கோட்டைகளை கட்டி உள்ளனர். இந்த கோட்டைகள் நூற்றாண்டுகள் கடந்து இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. அவற்றில் முக்கியமானது சித்தோர்கர் கோட்டை(Chittorgarh Fort) ராஜஸ்தான்.
சித்தோர்கர் கோட்டை (Chittorgarh Fort) இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப்பெரிய கோட்டையாகும். இந்த கோட்டை உதய்பூரில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் ராஜஸ்தானின் சித்தூர் நகரில் அமைந்துள்ளது. இப்பகுதியின் பழைய பெயர் சித்ரகுட். இந்த கோட்டை 7ஆம் நூற்றாண்டில் மௌரியர்களால் கட்டப்பட்டது.
அக்பர் உள்பட பல்வேறு காலகட்டங்களில் இந்த கோட்டை பல மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது. வான்வழியாகப் பார்க்கும் பொழுது இது ஒரு மீன் போல் தெரிகிறது. இதன் சுற்றளவு 13 கிலோ மீட்டராகும். கோட்டை வளாகத்திற்குள் மொத்தம் 65 கட்டமைப்புகள் உள்ளன. கீர்த்தி ஸ்தம்பம் 12ஆம் நூற்றாண்டில் பகர்வால் ஜெயின் நினைவாக கட்டப்பட்டது.
சித்தோர்கர் கோட்டை வளாகத்தில் 4 அரண்மனைகள், 19 முக்கிய கோயில்கள், 7 நுழைவாயில்கள், 4 நினைவுச் சின்னங்கள் மற்றும் 22 நீர்நிலைகள் என சுமார் 65 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்தக் கோட்டை ஒருமுறை அல்ல மூன்று முறை கொள்ளை அடிக்கப்பட்டது. சுமார் 180 மீட்டர் உயரம் கொண்ட மலையின் உச்சியில் இக்கோட்டை கிட்டத்தட்ட 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். கோட்டையில் உள்ள முக்கிய கட்டமைப்புகளில் கீர்த்தி ஸ்தம்பம், விஜய் ஸ்தம்பம், பத்மினி அரண்மனை, காமுக் நீர்த்தேக்கம், ராணா கும்ப அரண்மனை, மீரா மந்திர், கலிகா மாதா மந்திர், ஜெயின் மந்திர் மற்றும் ஃபதே பிரகாஷ் அரண்மனை ஆகியவை அடங்கும்.
இக்கோட்டையில் பைரோன் போல், பதன் போல், அனுமன் போல், கணேஷ் போல், ஜோர்லா போல், ராம் போல் மற்றும் லக்ஷ்மண் போல் என 7 வாயில்கள் உள்ளன. சித்தோர்கர் கோட்டை ராஜபுத்திரர்களின் பெருமை, வீரம் மற்றும் தியாகத்திற்கு ஒரு உயிரோட்டமான சான்றாக உள்ளது. ராஜஸ்தானின் பெராச் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்தக் கோட்டை மாநிலத்தில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இக்கோட்டை இந்தியாவின் மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது. வரலாறு இந்தக் கோட்டையை மௌரியர்கள் கட்டியதாக சொன்னாலும், இந்த கோட்டை மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் கட்டியதாக இந்தப் பகுதியில் உள்ள நாட்டுப்புற கதைகள் சொல்கின்றன.
திங்கட்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோட்டை மக்கள் பார்வையிட திறந்திருக்கும். காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு இந்த கோட்டையில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோட்டைக்குள் சென்று பார்வையிட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.