

இன்று காலையில் எழுந்து, டூத் பேஸ்ட்டில் பல் துலக்கி, காபி குடித்துவிட்டு, இந்தக்கட்டுரையை மொபைலிலோ கம்ப்யூட்டரிலோ படித்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? இதுதான் இயல்பான வாழ்க்கை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், மனித குலத்தின் (Human Origins) வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 'நாகரீக வாழ்க்கை' என்பது கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது. சொல்லப்போனால், இது ஒரு விபத்து என்றே சொல்லலாம். 99.99% மனித வரலாறு காடுகளிலும், குகைகளிலும்தான் கழிந்திருக்கிறது.
நாம மட்டும் தான் மனுஷங்களா?
இன்று உலகில் 'மனிதர்கள்' என்றால் அது நாம் மட்டும்தான். ஆனால், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. அப்போது நம்மைப் போலவே சிந்திக்கும், நடக்கும் பல மனித இனங்கள் வாழ்ந்தன. ஏதோ ஒரு காரணத்தால், அல்லது நம் முன்னோர்களின் ஆதிக்கத்தால் அவர்கள் அழிந்துபோக, நாம் மட்டும் மிஞ்சினோம். 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கினத்தில் இருந்து பிரிந்து வந்த நாம், தனித்து விடப்பட்ட ஒரு இனம்.
நெருப்பு, மொழி:
ஆரம்பத்தில் நாமும் மற்ற விலங்குகளைப் போலத்தான் பயந்து பயந்து வாழ்ந்தோம். ஆனால், மனித குலத்தின் தலையெழுத்தை மாற்றிய முதல் கண்டுபிடிப்பு, நெருப்பு. எப்போது உணவைச் சமைத்துச் சாப்பிடத் தொடங்கினோமோ, அப்போதே நம் மூளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்தன, மூளை வளரத் தொடங்கியது.
அடுத்தது, மொழி. தேனீக்களோ, எறும்புகளோ கூட்டமாக வேலை செய்யும். ஆனால், அவற்றால் புதிய விஷயங்களைப் பேச முடியாது. ஓநாய்கள் கூட்டமாக வேட்டையாடும், ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அவற்றால் சேர முடியாது. மனிதன் மட்டும்தான் ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் கூட ஒன்றிணைந்து செயல்பட முடியும். இதற்கு முக்கிய காரணம், நாம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும், அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்துவதும்தான்.
விவசாயம் - இன்டர்நெட்!
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் வேட்டையாடித் திரிந்தோம். விவசாயம் எப்போது வந்ததோ, அப்போதே நாம் ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தோம். ஊர்கள் உருவாயின, அரசுகள் தோன்றின, நாகரீகம் பிறந்தது.
ஆனால், உண்மையான வேகம் கடந்த 500 ஆண்டுகளில்தான் நிகழ்ந்தது. அறிவியல் புரட்சி, பிறகு தொழிற்புரட்சி என உலகம் ராக்கெட் வேகத்தில் மாறியது. இன்று நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் எல்லாம் மனித வரலாற்றில் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த மாற்றங்கள். 2 லட்சம் வருஷமா நடந்ததை விட, கடந்த 150 வருஷத்தில் நடந்த மாற்றங்கள் அதிகம்.
நாம் இப்போது டைம் மிஷினில் ஏறி 20,000 வருடங்களுக்குப் பின்னால் சென்றால், நம்மால் ஒரு வாரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. நம் முன்னோர்களை இப்போது கூட்டி வந்தால், அவர்களுக்கு மனநோயே வந்துவிடும். அந்த அளவுக்கு உலகம் மாறிவிட்டது.
அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த உணவு சூடாக இல்லை என்றாலோ, அல்லது ரயில் தாமதமாக வந்தாலோ கோபப்படாதீர்கள். "நல்லவேளை, நான் காட்டில் புலிக்கு பயந்து ஓடாமல், ஏசியில் உட்கார்ந்து கவலைப்படுகிறேன்" என்று நினைத்துச் சிரித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இந்த சொகுசு வாழ்க்கை நமக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய பரிசு.