ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

Athreyapuram Bhutharegulu Sweets
Athreyapuram Bhutharegulu Sweets
Published on

ந்திரப் பிரதேசத்தில் மிகவும் புகழ் பெற்ற பாரம்பரியமான இனிப்புகளில் ஒன்று ‘ஆத்ரேயபுரம் பூதரெகுலு.’ இந்த இனிப்பின் பூர்வீகமானது ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆத்ரேயபுரம் ஆகும். இந்த பூதரெகுலு இனிப்பானது ‘பேப்பர் ஸ்வீட்’ ஆகும். அதாவது காகித இனிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த இனிப்பானது பார்ப்பதற்கு காகிதம் போல காணப்படுவதாலும் மிருதுவான தன்மையோடும் வாயில் போட்டால் உடனே கரைந்து விடுவதாகவும் உள்ளது. அரிசி, நெய், நாட்டுச்சர்க்கரை, பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் முதலானவை இந்த இனிப்பைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இனிப்பைச் செய்ய கோனாசீமா பகுதியில் விளையும் ‘பொண்டாலு’ என்ற அரிசியானது பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுமார் முன்னூறு ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த இனிப்பிற்கு 2023ம் ஆண்டில் புவிசார் குறியீடு (GI-Geographical Indication) வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் ‘பூதா’ என்றால் பூச்சு, ‘ரெகு’ என்றால் தாள். அதாவது, பூசப்பட்ட தாள் என்பதை இந்த தெலுங்கு வார்த்தை குறிக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்வுகள் முதலானவற்றில் இந்த இனிப்பு முக்கிய இடம் வகிக்கிறது.

ஆத்ரேயபுரத்தில் பூதரெகுலு இனிப்பைத் தயாரிப்பது ஒரு குடிசைத்தொழிலாகவே உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் இந்த இனிப்பைச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆத்ரேயபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி சர்க்கரை, நெய், அரிசி மாவைச் சேர்த்து ஒரு இனிப்பைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆத்ரேயபுரம் கிராமத்தினர் அரிசி மாவிலிருந்து அரிசி காகிதத்தை உருவாக்கி அதனுள் சர்க்கரை மற்றும் நெய்யை வைத்து ஒரு புதிய வகையான இனிப்பை உருவாக்கியதாகவும், நாளடைவில் பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா முதலானவற்றை வைத்து ஸ்டஃப்பிங் செய்து தற்போது உள்ள பூதரெகுலுவை தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அரிசி மாவை ஊறவைத்து அதை நீர்ப்படலமாக்கி துணியால் நனைத்து அதை தவாவில் தேய்த்து மெல்லிய காகிதம் போன்ற ஒரு படலத்தை உருவாக்கி எடுத்துக் கொள்ளுவார்கள். இதுவே அரிசி காகிதம் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!
Athreyapuram Bhutharegulu Sweets

பச்சரிசியை பலமுறை நன்றாகக் கழுவிக் கொண்டு அதை ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பலமுறை அரைக்க வேண்டும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். நன்கு அரைந்ததும் அதை வடிகட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு வடிகட்டிய அரிசி மாவானது பால் பதத்திற்கு இருக்க வேண்டும். ஒரு துணியை பால் போல காணப்படும் அரிசி மாவில் தோய்த்து அதை ஒரு தவாவின் மீது தடவ வேண்டும். மாவு தவாவில் வெந்து தானாகவே பிரிந்து ஒரு காகிதம் போல வரும். ஒரு பூதரெகுலு தயார் செய்வதற்கு இதுபோல மூன்று அரிசி காகிதத்தைப் பயன்படுத்துவார்கள்.

இதற்குள் பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி முதலானவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு அதனுடன் நெய், நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளுவார்கள். இதை அரிசி காகிதத்தில் வைத்து ஸ்டஃப்பிங் செய்தால் பூதரெகுலு தயார். பூதரெகுலுவை வாயில் வைத்தால் உடனே கரைந்து விடும். மனதில் மகிழ்ச்சி நிறைந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com