பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியன் ஒருகட்டத்தில், தான் செய்து வந்த அத்தனை விஷயங்களிலிருந்தும் விலகி, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகன் தனுஷின் சிகிச்சை நிமித்தம் அமெரிக்காவில் செட்டில் ஆனார் என்பது பழைய தகவல். தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கிடையில் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் கோலாகலமாக நடந்து பெரும் பேசுபொருளாக இணையம் முழுவதும் வலம் வருகிறது.
இதற்குக் காரணம் தனுஷின் தசை சிதைவு பாதிப்பு. அனைவரையும் கவலையில் ஆழ்த்தும் தசை சிதைவு பாதிப்பின் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள் மற்றும் இதைத் தவிர்க்க முடியுமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கான விளக்கத்தை இந்தப் பதிவில் சுருக்கமாகக் காண்போம்.
தசை சிதைவு நோய் அல்லது தசைநார் சிதைவு என்பது தசைகளை வலுவிழக்கச் செய்யும் ஓர் பாதிப்பு. இது உடல் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மரபணுக்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகிறது. பெரும்பாலும் மரபணு நோயான இதைத் தவிர்க்க முடியாது. அதேநேரம் குணப்படுத்தவும் முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.
பெரும்பாலும் இந்த பாதிப்பு உடனடியாக வெளிப்படாமல் காலப்போக்கில் மோசமான நிலையாக மாறும். பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் படிப்படியாக அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் நடக்க, பேச அல்லது தங்களது அன்றாட கடமைகளை செய்வதிலும் சிக்கலை உண்டுபண்ணி பிறர் துணையை நாட வைக்கும். ஆனால், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இந்நிலை ஏற்படாது என்று சொல்லலாம். தசைநார் சிதைவு வந்தாலும் லேசான அறிகுறிகளுடன் பல ஆண்டுகள் கூட இயல்பான வாழ்க்கை வாழ்பவரும் உண்டு.
இந்த தசைநார் சிதைவுகள் 30க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளது. Duchenne muscular dystrophy (DMD), Becker muscular dystrophy, Congenital muscular dystrophy, Limb-Girdle muscular dystrophy, Distal muscular dystrophy போன்றவை அவற்றுள் சில. மரபணுக்கள், பாதிக்கும் தசைகள், அறிகுறிகள், தோன்றும் வயது, நோய் எதிர்ப்பு சக்தி, நோயின் தாக்கம் எவ்வளவு என்பதை பொறுத்து அதன் பாதிப்புகள் மிதமாகவோ தீவிரமாகவோ இருக்கலாம்.
இந்த பாதிப்பை கண்டறிய பல பரிசோதனைகள் உண்டு. அவற்றில் சில கிரியேட்டின் கைனேஸ் இரத்த பரிசோதனைகள், மரபணு சோதனைகள், தசை பயாப்சி, எலக்ட்ரோமோகிராபி போன்றவற்றால் தசைநார் சிதைவை அறியலாம்.
தசைநார் சிதைவுக்கு தீர்வு தரும் சிகிச்சைகள் மீதான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல் தசைகளை நீட்டுவதும் தசைகளை வலுப்படுத்துவதும் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் தற்போதைய சிகிச்சையின் முக்கிய குறிக்கோளாகும். இதன் மூலம் உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும், பேச்சுப் பயிற்சி, சுவாச சிகிச்சை, இதய பராமரிப்பு, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இவற்றுடன் குடும்பத்தினரின் அன்பான கவனிப்புமே பாதிக்கப்பட்டவரின் நலனுக்கு முக்கியமாகிறது.
இந்நோயின் காரணம் மரபணு என்பதால் தடுக்க முடியாது எனினும், குடும்பத்தில் யாருக்கேனும் மரபணு நிலைகள் குறித்த சந்தேகம் இருந்தால் அது குறித்து முன்னெச்சரிக்கையாக மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.