

இப்போதெல்லாம் ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் கையில் கொஞ்சம் காசு இருந்தால் போதும். கான்ட்ராக்டரிடம் முழு பொறுப்பையும் கொடுத்துவிட்டு நாம் நிம்மதியாக வேறு வேலைகளை பார்க்கலாம். மொபைலில் ஒரு பட்டனை தட்டினால் அடுத்த நொடி செங்கல், சிமெண்ட், கம்பி என அத்தனை கட்டுமான பொருட்களும் நமது வீட்டு வாசலில் வந்து இறங்கிவிடும்.
ஆனால், எந்த ஒரு நவீன வசதியோ அல்லது டெலிவரி ஆப்ஷனோ இல்லாத ஒரு பழைய காலத்தில், ஒரு சாதாரண கணவனும் மனைவியும் சேர்ந்து தங்கள் கைகளாலேயே செங்கற்களை உருவாக்கி ஒரு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டியுள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மிகவும் இன்ஸ்பயரிங்கான நிஜ கதையை பற்றி தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.
போருக்கு பின்னால் முளைத்த கனவு!
அது 1950-களின் தொடக்க காலம். இரண்டாம் உலகப் போர் முடிந்து ஆஸ்திரேலியா மெல்ல மெல்ல தனது பழைய இயல்பு நிலைமைக்கு திரும்பி கொண்டிருந்த நேரம் அது. கட்டுமானப் பொருட்களுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவியது மட்டுமில்லாமல், வேலை செய்வதற்கு சரியான ஆட்களும் கிடைக்கவில்லை.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள முர்வில்லும்பா என்ற ஊரைச் சேர்ந்த காலின் மற்றும் டெட் ஹூட் தம்பதிக்கு தங்களுக்கு என ஒரு அழகான வீட்டை கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதற்காக 1949ஆம் ஆண்டு வெறும் 213 பவுண்டுகள் கொடுத்து ஒரு சிறிய காலி மனையை வாங்கினார்கள்.
வேலையாட்கள் யாரும் கிடைக்காத விரக்தியில், தங்களின் கனவை தள்ளிப்போட விரும்பாமல் 1953ல் தாங்களே களத்தில் இறங்கி தங்கள் கைகளாலேயே வீட்டை கட்ட அதிரடியாக முடிவு செய்தனர்.
சொந்தமாக உருவான 10,000 செங்கற்கள்!
வீட்டின் சுவர்களை எழுப்ப அவர்களுக்கு ஆயிரக்கணக்கான செங்கற்கள் தேவைப்பட்டன. கடைகளில் எளிதாக வாங்க வழியில்லாததால், தங்களின் பழைய ஷெட் ஒன்றில் தூக்கி வீசப்பட்டிருந்த கையால் இயங்கும் பழமையான செங்கல் தயாரிக்கும் இயந்திரத்தை அவர்கள் கையில் எடுத்தனர். அப்போது ரேஷன் முறையில் மாதத்திற்கு இரண்டு மூட்டை சிமெண்ட் மட்டுமே அரசு வழங்கி வந்தது.
அந்த குறைந்த அளவிலான பொருட்களை வைத்து மிகவும் பொறுமையாக ஒவ்வொரு செங்கல்லாக உருவாக்கத் தொடங்கினார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட செங்கற்களை அவர்களின் கைகளாலேயே சொந்தமாக தயாரித்து அசத்தினார்கள். இவர்களின் இந்த கடின உழைப்பை பார்த்து, வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட சும்மா பேசிவிட்டு செல்லாமல் செங்கல் செய்ய உதவி செய்தார்கள்.
இரவும் பகலும் ஓயாத உழைப்பு!
இந்த வீடு கட்டும் சமயத்தில் அவர்கள் இருவரும் தங்களின் முழு நேர வேலைக்கும் சென்று வந்தனர் என்பது கூடுதல் ஆச்சரியம். பகல் முழுவதும் டெட் ஒரு போக்குவரத்து நிறுவனத்திலும், காலின் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை செய்துவிட்டு, இரவு நேரங்களில் வீடு கட்டும் வேலையை தொடர்ந்து செய்துள்ளனர்.
மற்ற வீடுகளை நேரில் பார்த்து இன்ஸ்பயர் ஆகி, தங்களின் வீட்டிற்கு வளைவான சுவர்கள் மற்றும் உருண்டையான ஜன்னல்களை மிகவும் ஸ்ட்ராங்காக இரட்டை சுவர் அமைப்பில் உருவாக்கினார்கள். ஜாக் என்ற கொத்தனார் நண்பரின் சிறு உதவியுடன் 1955ஆம் ஆண்டு இந்த வீட்டின் முழு பணிகளும் வெற்றிகரமாக முடிவடைந்தன.
சரியாக அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட வருடம் தான் அவர்களுக்கு பீட்டர் என்ற அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது.
பல கொடூரமான பருவநிலை மாற்றங்களை கடந்த பிறகும், அவர்களின் சொந்த உழைப்பில் உருவான அந்த இரட்டை சுவர் செங்கல் வீடு இன்றும் எவ்வித விரிசலும் இன்றி கம்பீரமாக காட்சி தருகிறது. தற்போது அந்த வீட்டில்தான் அவர்களின் மகன் பீட்டர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது பெற்றோரின் வியர்வையில் உருவான இந்த வீட்டை ஒரு பொக்கிஷம் போல அவர் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.
பல தடைகளை தாண்டி ஒரு சாதாரண குடும்பம் சாதித்து காட்டிய இந்த விஷயம், இன்று பலரை ஈர்த்து ஒரு அருங்காட்சியக கண்காட்சியாகவே மாறிவிட்டது.