

சுத்தம் சுத்தம் என்று சுத்தத்தை பற்றி பேசும் அளவிற்கு அதை முழுவதுமாக நடைமுறையில் கடைபிடிப்ப தென்பது இன்றளவும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. ஆனால் ஒடிசாவிலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள் அதை தகர்த்தெறிந்து சாதனையை படைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆம்!! ஒடிசாவின் மயூர்பஞ்சிலுள்ள பாபோஜோலா என்கிற ஒரு குக்கிராமத்தின் மக்கள்தான், அவர்களுடைய கிராமத்தை தூய்மையாக வைத்து தேசத்திற்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.
சுமார் 70 சந்தால் இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசிக்கும் பாபோஜோலா கிராமம், வெறும் சுத்தமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் அந்த கிராமத்தின் மக்கள் உணர்வு பூர்வமாகவும், தொடர்ச்சியாகவும், கூட்டாகவும் தூய்மையை பேணுகிறார்கள்.
இங்கே, காற்றில் பறக்கும் பாலிதீன் உறைகளையோ அல்லது தெரு மூலைகளில் கறை படிந்த சுவர்களையோ அல்லது குப்பைகளையோ நீங்கள் காணவே முடியாது.
இந்த கிராமங்களின் தரைகளில் சிகரெட் துண்டுகளையோ, குட்கா கறைகளையோ, இவ்வளவு ஏன்?? ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஒரு குப்பைத் துண்டை கூட நம் கண்ணால் பார்க்க இயலாது.
மாறாக, இந்த கிராமத்தில் நமக்கு தெரிவது மிகவும் அரிதான ஒன்று, அதாவது சமூகங்களில் வேரூன்றிய ஒழுக்கம். பாபோஜோலா மக்களுக்கு சுத்தம் என்பது ஒரு கட்டாயபடுத்தபட்ட விதி அல்ல. அவர்களை பொருத்த வரையில் அது ஒரு அழகான மாற்றி அமைக்கப் பட்ட வாழ்க்கை முறையாகும்.
இந்த மாற்றம் எப்படி நேர்ந்தது?
பாபோஜோலாவின் இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. இது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கிராமத்தின் உள்ளூர் பள்ளி ஆசிரியரான மதுசூதன் மராண்டி என்பவரின் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்டது. தூய்மையான சூழல் என்பது வெறும் தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது கண்ணியம், ஆரோக்கியம் மற்றும் சுயமரியாதையைப் பற்றியது என்று அவர் நம்பினார். இவருடைய இந்த யோசனையானது முதலில் மெதுவாக தொடங்கி பின்னர் விரைவிலியே ஒரு இலட்சியப் பயணமாக மாறியது. அவர் விதிகளை மக்களிடம் திணிப்பதற்குப் பதிலாக அவர்களிடம் தக்க முறையில் எடுத்துரைத்தார்.
கிராம மக்களும் அவருடைய தத்துவத்தைத் தங்கள் தார்மீகப் பொறுப்பாக ஏற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் தூய்மைப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதை உறுதிசெய்ய அவர்கள் ஒரு சமூக மன்றத்தை உருவாக்கினார்கள். கூட்டாக நிதி திரட்டப்பட்டது, மெதுவாக, அந்தக் கிராமம் மாறத் தொடங்கியது. குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டன, சூரிய மின் தகடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் தூய்மையைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் கூட அமைக்கப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த முயற்சியால் எல்லா நேரங்களிலும் அந்த கிராமம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்கிறது. பாலிதீன் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளன. புகைப்பிடித்தல், குட்கா மற்றும் புகையிலை மெல்லுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையில் எச்சில் துப்பவும் அனுமதிக்கப்படவில்லை. இவை எல்லாம் அறிவிப்புப் பலகைகளில் எழுதப்பட்ட விதிகள். இவற்றை எல்லாம் அங்கிருக்கும் ஒவ்வொரு தனிநபரும் கடைப்பிடிக்கிறார்கள்.
‘புகைப்பிடிக்கக் கூடாது' என்ற அறிவிப்புப் பலகைகள் கிராமம் முழுவதும் காணப்படுகின்றன. இந்த பலகையானது, குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர் களுக்கும் அவர்களின் கூட்டுப் பொறுப்பைத் தொடர்ந்து நினைவூட்டுகின்றன. மேலும், இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவற்றைப் பின்பற்றுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்த கிராமமானது, பாரம்பரிய ஓலைவேலிப் பாணியில் கட்டப்பட்ட வீடுகளோடு சுற்றுச்சூழலுடன் இணக்கமாக இருப்பதைப் பிரதிபலிக்கிறது. இந்த கிராமத்தின் சுவர்கள், 'பிட் போட்டாவ்' எனப்படும் உள்ளூர் கலை வடிவத்தில், வண்ணமயமான மலர்கள், விலங்குகள் மற்றும் பாரம்பரிய உருவங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. கிராமத்துப் பெண்களால் உருவாக்கப்படும் இந்த ஓவியங்கள், சுற்றுச்சூழலிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களை கொண்டு வரையப் படுகின்றன.
ஒவ்வொரு வீடும் ஒரு கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு சுவரும் படைப்பாற்றலைப் பிரதிபலிக்கிறது. ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடைபெறும் படபர்பா திருவிழாவின்போது, கிராமம் முழுவதும் புத்துயிர் பெறுகிறது. வீடுகளுக்குப் புதிதாக வண்ணம் பூசப்படுகிறது. மேலும் பாரம்பரிய நடனங்கள் கலாச்சாரத்தை மட்டுமல்ல, சுகாதாரம் மற்றும் சமூக வாழ்வின் முக்கியத்துவத்தையும் கொண்டாடுகின்றன. இங்கே, தூய்மை என்பது பாரம்பரியத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றல்ல; அது பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நம் எல்லோருக்குமே இந்த சிறிய கிராமம் மிகப் பெரிய ஒரு பாடத்தை கற்பித்து கொண்டிருக்கிறதென்றே சொல்லலாம்.
சிறிய கிராமத்திலுள்ள பாமர மக்களே இத்தனை அழகாக தங்களுக்குத் தானே விதிமுறைகளை அமைத்து கொண்டு சுத்தத்திற்கு முன் மாதிரியாக விளங்கும் போது பட்டணத்திலே நவீன வசதிகளோடு வாழும் நம்மால் ஏன் முடியாது. நாம் எல்லோரும் சேர்ந்து முனைந்தால் முழு தேசத்தையுமே சுத்தமாக மாற்றிவிடலாம்.