

காலை தூங்கி எழுந்தவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் இந்த பால் இல்லை என்றால் வேலை ஓடாது. குழந்தைகளுக்கு பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ் மற்றும் பெரியவர்களுக்கு காப்பி, டீ என அவரவர்களின் விருப்பதிற்கிணங்க கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இது மட்டுமா?? சீஸ், பட்டர், நெய், பாலாடை, பனீர் போன்றவைகளும் நமக்கு தேவைப் படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் பால் மிக அவசியம். மேலும் இந்த பாலானது ஏழை முதல் கோடீஸ்வரன் வரை எல்லார் வீட்டு சமையலறையில் இருக்கும். சரி, அத்தகைய முக்கியமான பாலின் வரலாற்றை பற்றி பார்க்கலாமா…
பாலின் எளிய தொடக்கங்கள்
செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளைத் தொடர்ந்து மாடுகள் பழக்கப்படுத்தபட்டதும், பண்டைய பால் தொழிலை இயக்கத்தில் கொண்டுவரவும், அதனை முன்னோக்கி நகர்த்தவும் மரபியலின் ஒரு விசித்திரமான அம்சம் தேவைப்பட்டது. இந்த பால் உற்பத்தி தொழில், தற்போதைய துருக்கியில் சுமார் கி.மு. 8,000-ல் தொடங்கியது. குளிரூட்டும் வசதி இல்லாத அந்தக் காலத்தில், உணவுப் பாதுகாப்பு காரணங்களுக்காக, விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட முதல் பால் தயிர் மற்றும் வெண்ணெயாக மாற்றப்பட்டது.
மக்களும் கால்நடைகளும் இடம் பெயர்ந்தபோது, பால் பொருட்கள் உருவாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே மர்மமான முறையில் தோன்றத் தொடங்கிய லாக்டோஸ் சகிப்புத்தன்மை என்கிற மரபணு மாற்றத்தையும் அவர்கள் தங்களின் பரம்பரையோடு எடுத்துச் சென்றார்கள்.
மற்ற பாலூட்டிகளைப் போலவே, மனிதர்களும் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு, பாலின் இயற்கையான சர்க்கரையான லாக்டோஸை ஜீரணிக்கும் வகையில் படைக்கப்படவில்லை. ஆனால், கி.மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில், சில வயதுவந்த மனிதர்களுக்கு லாக்டோஸைத் தாங்கிக்கொள்ளும் திறன் ஏற்பட்டது . இந்தத் திறன் ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ள மக்களிடையே பரவியது. தாயோ அல்லது செவிலித்தாயோ இல்லாத சமயத்தில் குழந்தைகளுக்கு பால் தேவைப்பட்ட காரணத்தினாலும், வயது முதிர்ந்த மனிதர்கள் ஏற்கனவே மற்ற பாலூட்டிகளின் பாலைக் குடித்ததற்கான வாய்ப்புகள் இருந்த காரணத்தினாலும், மனிதர்கள் மாறி, பரிணாம வளர்ச்சியை அடைந்தபோது, இந்த நம்முடைய பால் குடிக்கும் கலாச்சாரத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.
அந்த அடித்தளம் நீண்ட காலமாக நீடித்தது. அதைத் தொடர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் பாலில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அட்லாண்டிக் கடலைக் கடந்து பசுக்களைக் கொண்டுவந்த முதல் அமெரிக்கக் குடியேறிகள் உட்பட, அதிகமான மக்கள் அதன் ஊட்டச்சத்து மற்றும் சுவைக்காக அதைப் போற்றத் தொடங்கினர்.
பல ஆண்டுகளாக, பாலின் விரைவில் கெட்டுப்போகும் தன்மை காரணமாக அதை விரைவாக ஒரு பானமாகவே மக்கள் அருந்தினார்கள்.. தொழிற் புரட்சியால் ஒரு நகர மயமான கலாச்சாரத்தையும் பெரிய அளவிலான உற்பத்தியையும் உருவாக்கிய போது, பாலை இன்னும் விரும்பியவர்களுக்கு பல சிக்கல்களையும் இது உருவாக்கியது. சுகாதாரமற்ற நகர்ப்புற பால் பண்ணைகள் நோய் அபாயத்தை அதிகப்படுத்தியது. டைபாய்டு காய்ச்சல், ஸ்கார்லெட் காய்ச்சல், காசநோய் மற்றும் டிப்தீரியா போன்றவை பதப்படுத்தப்படாத பால் மூலமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன.
இந்த பாக்டீரியாக்களை அழிக்க உதவும் வகையில் பாஸ்டரைசேஷன் முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த முறையை முதலில் பிரெஞ்சை சேர்ந்த லூயி பாஸ்ட் என்கிற ஆராய்ச்சியாளர் 1865 ல் கண்டுபிடத்தார். அவருடைய கண்டுபிடிப்பை முதலில் ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றில் பயன்படுத்தினார்கள். ஃபிரான்ஸ் வான் சாக்ஸ்லெட் என்ற ஜெர்மனிய வேதியியலாளர் இந்த செயல்முறையைப் பாலுக்கும் பயன்படுத்த முன்மொழிவதற்கு 20 ஆண்டுகள் ஆனது.
1908-ல், விற்கப்படும் அனைத்துப் பாலுக்கும் பாஸ்டரைசேஷனை கட்டாயமாக்கிய முதல் நகரமாக சிகாகோ ஆனது. மாநில அளவில், 1948-ல் இதை சட்ட பூர்வமாக அமல் படுத்திய முதல் மாநிலமாக மிச்சிகன் திகழ்ந்தது. மாநிலளவில் இருந்த இந்த ஒழுங்கு முறை, இறுதியாக 1987-ல் ஒரு தேசிய முறையாக மாறியது..
17 ஆம் நூற்றாண்டில் இன்னுமொரு கண்டுபிடிப்பில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் இன்றும் பிடித்தமான ஒன்றாகிய சாக்லேட் பாலை உருவாகியது. 1600-களின் பிற்பகுதியில், அயர்லாந்து தாவரவியலாளர் ஹான்ஸ் ஸ்லோன் ஜமைக்காவிற்குப் பயணம் செய்தார். அங்குள்ள உள்ளூர் மக்கள் அவருக்கு கோகோ மற்றும் தண்ணீர் கலந்த ஒரு பானத்தைக் கொடுத்தார்கள். அது அவருக்கு குமட்டலை ஏற்படுத்தியதால், அவர் அதை மேலும் சுவையாக மாற்றுவதற்காகப் பாலும் சர்க்கரையும் சேர்த்தார். பாலோடு சாக்லேட்டை கலந்த முதல் நபர் அவர்தான் என நம்பபடுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு ரஷ்ய விஞ்ஞானி, பாலின் எடையில் ஒரு சிறு பகுதியிலேயே அதனுடைய அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக பால் பவுடரை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார் . அப்போதும் சரி, இப்போதும் சரி, இந்தப் புதுமையான கண்டுபிடிப்பு, பாலுக்கு எளிதாக எடுத்துச்செல்லும் வசதியையும், நீண்ட நாள் கெடாமல் வைத்திருக்கும் தன்மையையும் வழங்கும் ஒரு சத்தான வழியை உருவாக்கியது. இந்தப் பண்புகளே, பால் பவுடரை ஐ.நா.வின் உணவு விநியோகத்தில் ஒரு பொதுவான பொருளாகவும், மலையேறுபவர்கள் மற்றும் வெளிப்புறச் செயல்பாடுகளில் ஆர்வ முள்ளவர்களின் தேர்வாகவும் தொடர்ந்து நிலை நிறுத்தியது.
பாலை பாதுகாப்பானதாகவும், உற்பத்திக்கு அதிக செயல்திறன் மிக்கதாகவும் மாற்றுவதில் ஏற்பட்ட இந்த முன்னேற்றமானது, 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழிவகுத்தது.