
இந்தியா அதன் மொழி, பண்பாடு, அதன் உணவுப்பழக்கம் போன்றவற்றில் பன்முகத்தன்மையைக் கொண்டது. இந்திய மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன. இது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை, புவியியல் அமைப்பு, காலநிலை, பிராந்திய, பருவகால உணவுப் பொருட்கள், அந்த மாநிலத்தில் அதிகம் விளையும் பொருட்களின் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது.
இந்திய மக்கள் தொகையில் அசைவ உணவு உண்பவர்களும், சைவ உணவு உண்பவர்களும் இருக்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களிலேயேயும் சிலர் வெங்காயம், பூண்டை சாப்பிடாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
வெங்காயம் ஏறத்தாழ அனைத்து இந்திய சமையலறைகளிலும் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய உணவுப்பொருளாக உள்ளது. ஆனால், எந்த விதத்திலும் வெங்காயத்தை அனுமதிக்காத ஓர் இடம் இந்தியாவில் உள்ளது. அதுதான் கத்ரா. இது ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியாவின் ஒரு தனித்துவமான நகரமாகும். அங்கு எந்த வகையான வெங்காயத்தையும் சாப்பிட மக்களுக்கு அனுமதி இல்லை.
இந்த வினோதமான நகரமான கத்ரா நகரத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை பயன்படுத்த முற்றிலுமாக தடை செய்யப் பட்டுள்ளது. வெங்காயம் மற்றும் பூண்டை வளர்ப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் இங்கு அனுமதியில்லை. ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் கூட அவற்றைப் பார்க்க முடியாது. இவை அனைத்தும் மக்களின் பக்தி, மதநம்பிக்கை, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.
அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. மலைகள் வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் நீளமுள்ள புனித மாதா வைஷ்ணோ தேவி யாத்திரைக்கான தொடக்கப் புள்ளி கத்ரா ஆகும்.
புனித யாத்திரைப் பகுதியின் புனிதத்தை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக, அனைத்து வகையான வெங்காயம் மற்றும் பூண்டுகளும் இந்த நகரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் வெங்காயத்தை முற்றிலுமாக தடை செய்யக் காரணம் இந்து மதத்தில், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை தாமச உணவுகளாகக் காணப்படுவதே ஆகும்.
அவை சோம்பல், கோபம் மற்றும் மனதிலும் உடலிலும் எதிர்மறை தாக்கங்களை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் பிரார்த்தனை செய்யும் போதோ, உண்ணாவிரதம் இருக்கும் போதோ அல்லது சடங்குகளைச் செய்யும் போதோ அவற்றை உட்கொள்ளக் கூடாது.
கத்ரா என்பது மாதா வைஷ்ணவ தேவி கோவிலின் முக்கிய நுழைவாயிலாகும். எனவே, இந்த தளம் சாத்வீக சூழலைக் கொண்டிருப்பது கட்டாயமாகும். இதனால்தான் கத்ராவில் வெங்காயம் மற்றும் பூண்டைப் பயன்படுத்துவது உறுதியாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது.
இங்கு வழங்கப்படும் உணவு சாத்வீகமானது. பக்தர்கள் இந்த உணவை விரும்பி உண்கிறார்கள். இந்த நகரம் மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு நுழைவாயில் மட்டுமல்ல, இது நம்பிக்கை மற்றும் பக்தியின் அடையாளமாகவும் விளங்கிவருவது குறிப்படத்தக்கது.